புதுடில்லி, டிச. 13-தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர் பாக ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதா மாநிலங்களவையில் நேற்று (12.12.2023) நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து மாநிலங் களவை தி.மு.க. குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் என்பது யாருக்கும் கட்டுப்படாமல் சுயமாக இயங்க வேண்டிய ஒரு அமைப்பு ஆகும். ஆனால் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் நியமனத்தில் இவ்வளவு காலம் இருந்த நிலையை மாற்றி புதிய தேர்வுமுறையை கொண்டுவந்து அதற்கான மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றி உள்ளனர். பெரும்பான்மை காரணத்தால் இது மக்களவையிலும் நிறைவேறும். பிரதமர் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஒன்றிய அமைச்சர் ஒருவரைக்கொண்ட தேர்வுக் குழுவுக்கு ‘ஆமாம்’ என தலையாட்டுபவர்களையே தேர் தல் ஆணையர்களாக அமர்த்தும் நிலை ஏற்படும். இதை அம்பேத்கர், அரசியல் சட்ட நிர்ணயசபையில் பேசும் போதே சொல்லியிருக்கிறார். எதிர்காலத்தில் இதுபோன்ற பொறுப்புகளுக்கு தலையாட்டிகள் வந்துவிடக்கூடாது என்ற அச்சம் இருப்பதாக அவர் கூறியது நடைமுறைக்கு வந்துவிடும் சூழல் உருவாகி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.