புதுடில்லி, டிச.11- காங்கிரஸ் – சமாஜ்வாடி இடையே சுமுக உடன்பாடு எட்டப்பட்டதால், “இந்தியா” கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் வரும் 19ஆம் தேதி நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்து நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய கூட்டணியை அமைத்தன. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப் பேரவை தேர்தலின்போது,தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் “இந்தியா” கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்து போட்டியிட்டன. மத்தியப் பிரதேசத்திலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், சமாஜ்வாடியுடன் இருந்த கருத்து வேறுபாடுகளை காங்கிரஸ் சரிசெய்துள்ளது. சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் “இந்தியா” கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறு வதாக இருந்தது. ஆனால், அகிலேஷ் யாதவ், பீகார் முதல மைச்சர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகி யோர் தங்களால் வர இயலவில்லை என்று தெரிவித்து விட்டனர். இதனால் இந்த கூட்டம் தள்ளிப் போடப் பட்டது.
காங்கிரஸ் – சமாஜ்வாடி கட்சி இடையே இருந்த வேறுபாடுகள் பேசி தீர்க்கப்பட்டுள்ளதால், “இந்தியா” கூட்டணி கூட்டம் டில்லியில் வரும் 19ஆம் தேதி நடக்க வாய்ப்பு உள்ளது என்று “இந்தியா” கூட்டணியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் தேர்தல்களில் தொகுதி பங்கீடு குறித்து இதில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டப் பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. தெலங்கானாவில் மட்டும் வெற்றி பெற்றது.
அதனால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் நெருக்கடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.