புதுடில்லி, டிச. 11- ஒன்றிய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங் களில் இருப்பதைப் போல வேலைவாய்ப்பிலும் தனியார் துறையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற தனி நபர் மசோதாவை மாநிலங்களவையில் திராவிட முன் னேற்ற கழக உறுப்பினர் மு.சண்முகம் அறிமுகப்படுத்தினார்
பொதுத்துறை நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வருவதால் அடித்தட்டு மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வேலைவாய்ப்பு மிகவும் அரிதாக உள்ளது. மண்டல் கமிஷன் அறிக்கை 16(4)இன் படி தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மக் களின் பாதுகாப்புக்காக இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
பெரும்பாலும் தொழில்துறையில் பொதுத்துறை வங்கிக் கடனை பெற்று அரசு மூலம் நிலம் மற்றும் இதர சலுகைகளைப் பெற்று குறைந்த செலவில் நிறுவனங்களைத் தொடங்கி பெருத்த லாபங்களையும் சம்பாதித்து வரும் தனியார் துறை நிறுவனங்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதை நிரா கரித்து வருகின்றார்கள்.
எனவே அரசுத் துறையில் உள்ளது போல அடித்தட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்ற இந்த தனி நபர் மசோதாவை 08.12.2023 அன்று மாநிலங்களவையில் திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர் மு.சண்முகம் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதாவை அவை ஏற்றுக் கொண்டது.
மோட்டார் வாகன ஓட்டுநர் மற்றும் இதர தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டத்திற்கான தனி நபர் மசோதாவை மாநிலங்களவையில் திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர் மு.சண்முகம் 8.12.2023 அன்று அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவில் பொதுவாக சாலைப் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சரக்குகளைக் கொண்டு செல்லும் லாரிகள், வேன்கள், பொதுமக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள், நகரங்களில் பயன்படுத்தப்படும் ஆட்டோ, டாக்சி வாகனங்களை ஓட்டுகின்ற ஓட்டுநர்கள் மற்றும் அந்த தொழிலை பராமரித்து வரும் அந்த தொழில் சார்ந்த எண்ணற்ற தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக எந்தவித சமூகப் பாதுகாப்பும் இன்றி தவித்து வருகின்றார்கள்.
வாகனங்களை தயார் செய்யும் நிறுவனங்கள் கோடிக் கணக்கில் சம்பாதித்து அதை விற்பனை செய்து வருகின்றார்கள். இந்த வாகனங்களை இயக்க பயன்படும் பெட்ரோல், டீசல், ஆயில் போன்றவற்றை உற்பத்தி செய்யும் ஆயில் நிறுவனங்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். வாகனங்கள் செல்லும் சாலை களை பராமரிப்பது என்ற பெயரில் அரசும் ஏராளமான வரிகளை வசூலித்து வருகின்றது. ஆனால் இந்த இயக்கத்தை தொடர்ந்து பசுமையாக கொண்டு செல்லும் ஓட்டுநர்கள் மாதக் கணக்கில் வாகனங்களை இயக்குவதில் உள்ள இயக்க இடர்ப்பாடுகள், வெகு தூரம் செல்வதால் சரியான உணவு கிடைக்க வகையில்லாதது, ஓய்வெடுப்பதற்காக சாலைகளில் சரியான தங்கும் வசதிகள், கழிப்பறைகள் இல்லாமல் இருப்பது, இதைவிட மாநிலம் விட்டு மாநிலம் செல்லும்பொழுது அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல் இருப்பது, பொதுவாக வாடகை வண்டிகளை இயக்கும் ஓட்டுநர்களையும், அவரை சார்ந்த தொழிலாளர்களையும் சமூகத்தில் ஒரு விரோதியாகப் பார்ப்பதும், காவல்துறையும், மோட்டார் வாகனத் துறையும், போக்குவரத்துத் துறையும் அவர்களை காரணம் இல்லாமல் வஞ்சமாக தண்டிப்பது போன்ற பல்வேறு இன்னல்களில் இருந்து அவர்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு தக்க பாதுகாப்புடன் கூடிய ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை, கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியம் போல் ஒரு வாரியத்தை அமைத்திட ஒன்றிய அரசு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
– இவ்வாறு இந்த தனி நபர் மசோதாவை அறிமுகப்படுத்தி பேசினார்.