மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும் – ஹிந்துத்துவம் உருவாக்க விரும்பும் ஹிந்து இந்தியாவும்!
மின்னம்பலம்’ இணையதளத்தில் பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் சிறப்புக் கட்டுரை!
அறுபதுகள், எழுபதுகளில் கோடை விடுமுறை என்றால் ‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ (Ten Command ments, 1956) படத்தை திரையரங்குகளில் திரையிடுவார்கள். பள்ளி மாணவர்களை பெற்றோர் கூட்டிச் செல்வார்கள் என்பதால். எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மோசஸ் கடவுளின் துணையுடன் விடுவித்து அவர்களுக்கு கடவுளால் வாக்களிக்கப்பட்ட நிலமான இஸ்ரேலுக்கு கூட்டிச் செல்வதுதான் கதை.
மோசஸ் குழந்தையாக ஆற்றில் விடப்பட்டு எகிப்து இளவரசியால் கண்டெடுக்கப்பட்டு, அரச குடும்பத்தில் வளர்வார், கர்ணனைப் போல. பின்னர் உண்மை வெளிப்பட்டு, நாட்டை விட்டு துரத்தப் படுவார். அலைந்து திரிந்து சினாய் மலையில் ஏறி கடவுளின் குரலைக் கேட்பார்.
கடவுள் கட்டளைப்படி எகிப்து சென்று மன்னருடன் வாதாடி, பலவித உற்பாதங்களைத் தோற்றுவித்து, பெருந்திரளான அடிமைகளுடன் வெளியேறுவார். அவர்கள் செங்கடலை நெருங்கும் போது மன்னனின் படைகள் துரத்திக்கொண்டு வரும். மோசஸ் கோலை உயர்த்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிடும். இந்தக் காட்சிக்கு அரங்கில் பெரும் கரவொலி எழும்பும்.
அந்தக் கடல் பிரிந்து கொடுத்த வழியில் யூதர்கள் கடந்து அக்கரை சென்ற பின், துரத்திக்கொண்டு வரும் மன்னனின் படைகள் அதில் இறங்கியவுடன் கடல் மூடிக்கொண்டு அவர்களை மூழ்கடித்துவிடும். இப்படி யாகத் தப்பி வந்த மக்களுக்கு மோசஸ் மூலமாக பத்து கட்டளைகளை கடவுள் கொடுப்பார். அதன்படி வாழ்ந்தால் அவர்களுக்கு வாழ்வதற்கு ஒரு நிலத்தைத் தருவதாகக் கூறுவார். அப்படி வாக்களிக் கப்பட்ட நிலம், Promised land என்பதுதான் இஸ்ரேல் என்று இப்போது அழைக்கப்படும் பாலஸ்தீனம் என்பது புராணம், நம்பிக்கை.
யூதர்களின் டோரா, பைபிள் உள்ளிட்ட மத நூல்களில் குறிப்பிடப்படும் இந்த கதைக்கு வரலாற்று ஆதாரம் எதுவும் கிடையாது. கிடைத்துள்ள வரலாற்று ஆதாரங்களின்படி சிந்தித்தால் அப்படியெல்லாம் நடந்திருக்கும் சாத்தியம் அதிகமாக இல்லை. ஆனால், ஏசு கிறிஸ்து பிறந்த நேரத்தில், கிறிஸ்துவ மதம் தோன்றிய நேரத்தில் யூதர்கள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்தார்கள் என்பது உண்மை. கிறிஸ்து பிறப்புக்கு பிறகான நானூறு, அய்ந்நூறு ஆண்டுக் காலத்தில் அவர்கள் அங்கிருந்து வெளியேறி அய்ரோப்பா முழு வதும் பரவி பல்வேறு நாடுகளில் வசிக்கத் தொடங் கினார்கள். பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அரேபியர்கள் பெருமளவு இஸ்லாமிய மதத்தை தழுவினார்கள்.
பொது ஆண்டு 500 முதல் பொது ஆண்டு 1900 வரை பல்வேறு நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் பாலஸ்தீனம்தான் சொந்த ஊர் என்று எண்ணி வந்தார்கள் என்று கிடையாது. அவர்கள் குடியேறிய நாடுகளில் வர்த்தகம் செய்தும், வட்டித் தொழில், வங்கித்தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டும் வாழ்ந்தார்கள். ஆனால் இவர்களுக்கும், பொது சமூகத்துக்கும் இடை வெளியும், முரண்பாடுகளும் நிலவி வந்ததும், யூதர்களுக்கு எதிரான வன்முறை, சமூக விலக்கம், கட்டாய வெளியேற்றம் ஆகிய அவ்வப்போது நிகழ்ந்ததும் உண்மைதான். இதன் உச்சக் கட்டமாகத்தான் ஹிட்லரால் லட்சக்கணக்கான யூதர்கள் கொல் லப்பட்ட கொடூர சம்பவம் இரண் டாம் உலகப் போர் நேரத்தில் நிகழ்ந் தது.
புராணத்தை வரலாற்றாக்கிய தீர்வு
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே யூதர்களுக்கென ஒரு நாடு தேவை என்ற எண்ணம் உருவாகத் தோன்றியது. கடவுள் யெஹோவாவால் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமி எனப்படும் இஸ்ரேல்/பாலஸ்தீனம்தான் அது என்ற சிந்தனையும் உருவானது. இந்த சிந்தனையால் பல்வேறு நாடுகளில் வசிக்கும் யூதர்களுக்கும் அவர்கள் பல தலைமுறைகளாக பார்த்தே இராத, நினைத்தே இராத பாலஸ்தீனம் அவர்களது சொந்த ஊர், உரிமையுள்ள நிலம் என்ற எண்ணம் உருவாகத் தொடங்கியது. இதன் உச்சமாகத்தான் இஸ்ரேல் என்ற நாடு இங்கிலாந்தால் உருவாக்கப்பட்டதும், உலகின் பல பகுதிகளிலிருந்தும் யூதர்களுக்கு அந்த நாட்டுக்கு “திரும்பி வரும் உரிமை” (Right to Return) வழங்கப்பட்டதும் நடந்தது. அதாவது எத்தனையோ தலைமுறைகளாக ஃபிரான்சிலோ, அமெரிக்காவிலோ வாழ்ந்து வரும் வம்சாவழியைச் சேர்ந்த யூதர் ஒருவர் இஸ்ரேலுக்குச் சென்று குடியேற நினைத்தால் அது ‘திரும்பிச் செல்வதாக’க் கருதப்படும்.
இந்த முரண்பாட்டை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இலங்கையின் மலையகத் தமிழர்களை யோசித்துப் பாருங்கள். அவர்கள் நூறு முதல் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய தமிழ் நாட்டிலிருந்து சென்றவர்களின் வம்சாவழிகள்தான். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு ‘திரும்பி வரும் உரிமை’ கோர முடியுமா? சாஸ்திரி-சிறிமாவோ 1964 ஒப்பந்தத்தின்படி திரும்ப வர ஏற்கப் பட்டவர்களிலேயே பலர் தமிழ்நாட்டுக்கு வந்த பின்னும் குடியு ரிமை இல்லாமல் அவதிப்பட்ட கதை பேசப்பட வேண்டியது. இப்படி நன்றாக அறியப்பட்ட வரலாற்றில் இடம் பெயர்ந்தவர்களின் சந்ததியருக்கே திரும்பி வரும் உரிமை இல்லாதபோது, எத்தனையோ நூற்றாண் களுக்கு முன்னால் சென்றிருக்கலாம் என யூகிக்கப்பபடுபவர்களின் சந்ததியருக்கு ‘திரும்பி வரும் உரிமை’ வழங்குவது எவ்வளவு முரண் பாடானது.
இஸ்ரேல் நாட்டினை எதிர்க்கும் ஸநாதன யூதர்கள்
ஸநாதனம் என்றால் மாறாதது என்று பலரும் கூறுவதை சமீப காலங்களில் கேட்டுள்ளோம். அதனால் மாற்றங்களை விரும்பாதவரை ஸநாதனி என்று கூறுகிறோம். பொதுவாக இவர்கள் பிற்போக்காளர்க ளாக இருப்பார்கள். ஆனால், யூதர்கள் விஷயத்தில் ஒரு சுவாரஸ்யமான முரண் ஏற்படுகிறது. யூத மத நம்பிக்கையில் ஒரு பகுதி கடவுளின் கட்டளைகளை யூதர்கள் பின்பற்றாததால், அவர்களுக்குத் தருவதாகச் சொன்ன பூமி வழங்கப் படவில்லை என்பதாகும். அதனால் அவர்கள் பல் வேறு நாடுகளிலும் வாழ்வது தான் சரியே தவிர, தங் களுக்கென ஒரு நாடு என இஸ்ரேலை உருவாக்கியதும், அந்த நிலத்திலிருந்து பாலஸ்தீனியர்களை அகற்றியதும் தவறு என்பது ஸநாதன யூதர்களில் ஒரு பிரிவினரின் கருத்து.
யூதர்களின் சம்பிரதாயப்படி ஆண்கள் தாடி வளர்த்து கறுப்பு ஆடையும், கறுப்புத் தொப்பியும் அணிய வேண்டும். அவ்வாறு மத வழக்கத்தை தீவிரமாக பின்பற்றும் ஸநாதன யூதர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி நியூயார்க்கில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபடுவதை நான் பலமுறை கண்டுள் ளேன். [நீங்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ள படத்தில் காணலாம்.] பல நேரம் இவர்கள் ‘JEWS AGAINST OCCUPATION’ என்ற பதாகையையும் பிடித்திருப்பர். அதாவது இஸ்ரேல் நாடு என்பது பாலஸ்தீனியர்களின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்பதே பொருள். [கீழேயுள்ள படத்தில் டோரா என்ற யூதர்களின் புனித நூல் பாலஸ்தீனம் முழு வதையும் பாலஸ்தீனியர்களின் இறையாண்மைக்கு விட்டுவிட வேண்டும் எனக் கூறுவதாக ஒரு பதாகையை ஏந்தியுள்ளதைக் காணலாம்.]
இந்தியாவில் ஸநாதனிகள் இப்போது மிகுந்த ஆவேசத்துடன் ஸநாதன எதிர்ப்பாளர்களைக் கண் டித்துப் பேசுகிறார்கள். ஸநாதனம் என்றால் அது வர்ணாசிரம தர்மம் அல்ல, தீண்டாமை அல்ல என்று சொல்கிறார்கள். அவர்களெல்லாம் இது போல “ஜாதி மறுப்பே ஸநா தனம்”, “வர்ண பேதம் கடவுளுக்கே அடுக்காது”, “உங்கள் ஜாதிக்குள் திருமணம் செய்யாதீர்கள்”, “ஜாதிக் குள் திருமணம் செய்ய கட்டாயப் படுத்துவது அதர்மம்”, “பார்ப்பனர்கள் யாருக்கும் உயர்ந்தவர்கள் அல்ல”, “ஸநாதனம் ஜாதீயத்தை எதிர்க்கிறது”, “தீண்டாமை என்பது கொடிய பாவம்” என்றெல்லாம் பதாகைகளைப் பிடித்துக்கொண்டு ஊர்வலம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதுவும் விபூதி, திருமண் முதலிய சின்னங்களை நெற்றியில் அணிந்து, குடுமி வைத்தவர்கள் இப்படியெல்லாம் பதாகைகளை ஏந்தி வந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என நினைத் துப் பார்க்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் இவர்கள் செய்வதில்லை. ஸநாதனம் என்றால் இதுதான், ஸநாதனம் என்றால் அதுதான் என்று வாயினால் பசப்புகிறார்களே தவிர, திட்டவட்டமாக களத்தில் இறங்கி ஜாதி மறுப்பு பிரச்சாரம் செய் வதில்லை. ஸநாதன யூதர்களைப் பாருங்கள். பாலஸ் தீனத்தை விடுவியுங்கள். பாலஸ்தீனியர்களிடம் இறையாண்மையைக் கொடுங்கள் என்று திட்டவட்டமாக கோருகிறார்கள்.
ஹிந்துத்துவத்தின் புண்ணிய பூமி கருத்தாக்கம்
யூதர்களுக்கு கடவுள் வாக்களித்த பூமி இஸ்ரேல் என்று சொன்னதால் எப்படி தேசம் என்ற நவீன அரசியல் அடையாளம், மதத்துடன் பிணைந்து கொண்டதோ, அது போன்றதுதான் சாவர்க்கர் புண்ணிய பூமி என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி யதும். உண்மையில் ஹிந்துத்துவத்தின்சாராம்சமே அதுதான். அதன்படி யார் ஒருவரின் புண்ணிய தலங்கள் இந்திய எல்லைக்குள் இருக்கிறதோ அவர்தான் இந்தியர். முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஆகியவர்களின் புண்ணிய தலங்கள் இந்தியாவுக்கு வெளியே இருப்பதால் அவர்கள் இந்தியாவின் முழுமையான குடிமக்கள் கிடையாது. இவ்வாறு நாட்டின் குடியுரிமையை மதம் என்பதுடன் பிணைப்பதுதான் மத அடையாள தேசியம் ஆகும். அரசாங்கம் அதிகாரபூர்வ மதமாக ஒரு மதத்தை ஏற்பது என்பது கூட பிரச்சினை கிடையாது. குடியுரிமையை, குடிநபரின் வரையறையை மதம் என்பதுடன் இணைப்பதுதான் கடுமையான பிரச்சினை. ஆங்கிலத்தில் தேசம் என்ற வார்த்தையை ‘நேஷன்’ என்று கூறுகிறோம். இதன் மூலச் சொல் லத்தீன் மொழியில் பிறப்பினை குறிப்ப தாகும். ஒருவரின் பிறப்பு சார்ந்ததே அவரது தேசம் என்பது.
உதாரணமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் என்பவர் இருக்கிறார். இவரின் தாயார் சியாமளா சென்னையில் பிறந்தவர். தந்தை ஜமைக் காவில் பிறந்தவர். ஆனால், கமலா அமெரிக்காவில் பிறந்ததால் அந்த நாட்டின் குடிநபர் ஆகிறார். அதனால்தான் அவர் தேர்தலில் போட்டியிட முடிகிறது. துணை அதிபராக முடிகிறது. அமெரிக் காவில் பல ஹிந்து கோயில்களைக் கட்டியுள்ளார்கள். இந்து மதத்தினரும் அங்கே அதிபர் தேர்தலில் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ஒரு இந்து, ரிஷி சுனக் இருக்கிறார். அவர் காசியை புண்ணிய தலமாக நினைத்தால் அது குறித்து இங்கிலாந்தில் யாரும் கவலைப்படவில்லை. மதத்துக்கும் குடியுரி மைக்கும் இந்த நாடுகள் முடிச்சுப் போடவில்லை.
ஆனால் சாவர்க்கரின் ஹிந்துத்துவம் முடிச்சுப் போடுகிறது. இந்தியாவை புண்ணிய பூமியாகக் கொள்ளாதவர்கள் இந்திய குடிமக்களாக இருக்க முடியாது என்ற கருத்தை அது விதைக்கிறது. இஸ்ரேலின் அடிப்படையான மோசஸ் கதைபோல சாவர்க்கர் ராமாயணத்தைப் பயன்படுத்துகிறார். ராமர்தான் இந்தியாவை ஒரே நாடாக இணைத்தவர் என்று கூறுகிறார். ராமாயணம் ஒரு புராணக்கதை யாகும். ஆதாரபூர்வமாக நிறுவப்பட்ட வரலாறு அல்ல. மேலும் வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப் படும் இலங்கை என்பது மத்தியப் பிரதேசத்தில் இருப்பதாகக் கருதும் ஆய்வாளர்கள் பலர் இருக்கிறார்கள்.
புராணத்தை வரலாறாக ஆக்குவதிலும், மதத்தை தேசமாக ஆக்குவதிலும் இஸ்ரேலின் முன்மாதிரிக்கும், ஹிந்துத்துவ சிந்தனைக்கும் நிறைய ஒப்புமைகளைக் காணலாம். உள்ளபடி சொன்னால் குடியுரிமை சீர் திருத்தச் சட்டம் என்பது ஒருவகையில் ஹிந்துக்களின் “திரும்ப வரும் உரிமை” எனலாம். பிற நாடுகளில் உரி மைகள் பறிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இந்தியா விடம் அடைக்கலம் கேட்டால் கொடுப்பதற்கான விதிமுறைகளை வகுக்காமல், ஹிந்துக்களாக இருந்தால் குடியுரிமை வழங்கலாம், இஸ்லாமியர்கள் என்றால் முடியாது என்றெல்லாம் விதிமுறைகள் வகுப்பது குடியுரிமையையும், மதத்தையும் இணைக் கும் செயல் என்பதால்தான் போராட்டங்கள் வெடித்தன.
ஹிந்துத்துவ அணியினரின் வெளிப்படையான இஸ்ரேல் ஆதரவு என்பது, முஸ்லிம்களை பொது எதிரியாக காண்பதிலிருந்து, பலவகையான தொடர்பு புள்ளிகளைக் கொண்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. இஸ்ரேல் மேலும் வலுப்பெறுவது ஹிந்துத்துவர்களின் வேலை திட்டத்தை ஊக்கப் படுத்தவே செய்யும். ‘மதமே தேசம்! புராணமே வரலாறு’ என்ற முழக்கத்துக்கு இஸ்ரேல் மிகவும் அனுசரணையான சிறந்த முன்மாதிரியாகும்.
நன்றி: ‘முரசொலி’, 24.10.2023