புதுடில்லி, டிச 10- மகளிர் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட பெண்கள் தொடர்பான பல்வேறு புகார்களை தேசிய மகளிர் ஆணையம் பெற்று விசாரணை நடத்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளில் ஆணையத் திற்கு 2 லட்சத்து 34 ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாகவும், இவற்றில் சரிபாதிக்கும் அதிகமான புகார்கள் உத்தரப் பிரதேசத்தில் இருந்து மட்டுமே வந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதாவது நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிர தேசத்தில் இருந்து, 1 லட்சத்து 20 ஆயிரத்து 093 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன உ.பி.க்கு அடுத்தபடியாக டில்லியிலிருந்து 22 ஆயிரத்து 231, மகாராட்டிராவிலிருந்து 11 ஆயிரத்து 562, அரியாணாவிலிருந்து 11 ஆயிரத்து 225 என அதிகமான புகார்கள் வந்துள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சாகேத் கோகலே மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு இந்த பதிலை அளித்துள்ளது. இந்தப் பட்டியலில், தமிழ் நாட்டில் இருந்து 5,733 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் இருந்து 166 புகார்கள் பதிவாகியுள்ளன. கருநாடகாவில் இருந்து 4559, கேரளாவில் 1551, ஆந்திரப் பிரதேசத்தில் 2131, தெலுங்கானாவில் 2325 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.