பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்
தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைவுற்று அரை நூற்றாண்டை நெருங்கினாலும் – அவரின் வலுவான கொள்கைகள் – முழக்கங்கள் இன்றும் மதவெறியர்களை, ஜாதி வெறியர்களை அச்சுறுத்துகின்றன. தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தைவிட, தற்பொழுதுதான் அதிகம் பேசப்படுகிறார்; விவாதிக்கப்படுகிறார்; தேவைப்படுகிறார்.
தந்தை பெரியார் வாழ்ந்தபொழுது, பிறக்காத இளந்தலைமுறை கருஞ்சிங்கங்கள் தன் பாட்டனுக்காக, அவரின் கொள்கைகளைக் காக்க அல்ல என்பதைவிட தங்களைக் காத்துக் கொள்ள அவர் கொள்கைகளை கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்றால் மிகையல்ல. பெரியாரின் சிலையின் கீழ் பொறிக்கப்பட்டுள்ள கடவுள் மறுப்பு கொள்கைகளைக் கண்டு பதறுகின்றனர். அவ்வாசகங்கள் எங்கள் மனதைப் புண்படுத்துகின்றன என்று மருளுகின்றனர். அவ்வீணர்களைப் போல் நாம் பேச வேண்டுமானால், கோவில்களில் எழுதப்பட்டுள்ள, ‘சிவசிவ’ போன்ற எழுத்துகள் எங்கள் மனதைப் புண்படுத்தாதா? என்று கேட்கலாம். புண்படுத்துதல் என்ற சொல் என்ன ஒருவழிப் பாதையா?
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில், பாரதீய ஜனதா என்ற கட்சியே இல்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ். இருந்தது; அதுவும் புற்றுக்குள்ளிருக்கும் விஷ நாகம் போல் மறைந்திருந்தது. ஆனால், இன்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சி ஆதரவில், புற்றை விட்டு வெளியேறி ஆட்டம் போடுகிறது. இந்த நச்சுப் பாம்புகளை ஒழிக்க – அழிக்க பெரியாரின் கைத்தடியை விட்டால், வேறு நாதியில்லை. தமிழர் தலைவர் ஆசிரியரின், “தந்தை பெரியார் காலத்து எதிரிகள் நாணயமானவர்கள். ஆனால், இன்றைய நம் இன எதிரிகள் நாணயமற்றவர்கள்” – என்ற சொற்கள் நூறு விழுக்காடு ஏற்புடையதாகும்.
எங்கெல்லாம் உரிமை பறிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் பெரியார் என்ற மருந்து அவசியமாகிறது. காங்கிரசு ஆட்சியில் ஹிந்தி மொழித் திணிப்பு நிகழ்ந்தது. ஆனால், இன்று அதைவிட மோசமாக சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. இந்திய அளவில் சமஸ்கிருத செய்தி வாசிப்பு தொலைக்காட்சிகளில் நிகழ்கிறது என்பதைவிட திணிக்கப்படுகிறது எனலாம். எனவேதான் தந்தை பெரியார் இன்று தேவைப்படுகிறார்.
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் செல்லுபடியாகும் பாரதிய ஜனதாவின் செப்படி வித்தைகள் தமிழ்நாட்டில் நமுத்துப் போகிறது. திருவள்ளுவரைத் தூக்கிப் பிடித்துப் பார்த்தார் ஒரு உத்தரப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர். இன்று அவரைக் காணவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், வடஇந்தியாவில் இராமனைக் கையில் எடுத்து வெற்றிபெற்றதுபோல், இங்கு வீரவேல்! வெற்றிவேல்! என்று முழங்கி மூக்கறுபட்டனர். காரணம் இது பெரியார் மண்.
பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாட்டில் பார்ப்பனரைத் தலைவராகப் போட்டால் செல்லுபடியாகாது என்று பார்ப்பனரல்லாத அதுவும், பட்டியலினத்தைச் சேர்ந்தவரைத் தலைவராக நியமனம் செய்தனர். ஆனால், விளைவு, கிராமங்களில் ஒரு வழக்கு மொழி சொல்வார்கள் என்னவென்றால், “எண்ணெய் செலவுதான் ஆச்சே தவிர பிள்ளை பிழைச்ச பாடில்லை” என்பதுபோல தேர்தல் முடிவு ஆயிற்று. காரணம் இது பெரியார் மண்.
அக்காலத்தில் “ஊர்களில் பிள்ளை பிடிக்கும் கும்பல்” உலவுவதாக கூறுவார்கள். அதுபோல தமிழ்நாட்டிலும் வடஇந்திய பணத்தைத் தண்ணீராக இறைத்து சட்டமன்றத் தேர்தலுக்கு ஆள் பிடித்தார்கள். தமிழ்நாட்டில் எட்டப்பர்களுக்கும் – குடிலர்களுக்கும் பஞ்சமா? என்ன? பண மழை பொழிந்ததே தவிர பயன் இல்லை. அதுவும் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட பார்ப்பனர் தோற்றார். அக்கட்சியில் வெற்றிபெற்ற நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் பார்ப்பனர் அல்லாதார் ஆவர். ஏனெனில் இது பெரியார் மண்.
“சாம பேத தான தண்டம்” என்ற தத்துவப்படியும், தங்களுக்கே உரிய கெஞ்சினால் மிஞ்சுதல்; மிஞ்சினால் கெஞ்சுதல் என்ற சூழ்ச்சிகளாலும் தமிழ்நாட்டில் எதுவுமே வெற்றி பெறவில்லை. கடைசி ஆயுதமாக யாராவது திரைப்பட நடிகர்கள் கிடைக்க மாட்டார்களா? என்ற களமிறங்கி – ஒரு நடிகரிடம் காலில் விழுந்து கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சியும் பலனின்றி இது என்ன பிழைப்பு என்று எண்ணும் வண்ணம் தரம் தாழ்ந்தும் பயனில்லை. ஏன்? இது பெரியார் மண்.
“தாய் பத்தடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்” – என்ற வழக்கு மொழிக்கேற்ப, தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வாரிசு மு.க.ஸ்டாலின் அவர்கள், இது “திராவிட மாடல்” ஆட்சி என்று சொல்லி வடவர்களின் எண்ணத்தில் எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்துவிட்டார். கலைஞர்கூட எங்கள் ஆட்சி ‘திராவிட மாடல்’ என்று கூறவில்லை. இவர் கூறுகிறாரே என்ற அதிர்ச்சியில் “இவர் கலைஞரைவிட மோசமானவர்; ஆபத்தானவர்” – என்று புலம்புகின்றனர். அது மட்டுமா? தந்தை பெரியாரின் நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அரசின் சார்பில் வெளியிடப்படும் என்றது பார்ப்பனர்களுக்கு – மதவாதிகளுக்கு ஆயிரம் தேள் கொட்டியது போன்ற நிலையை உண்டாக்கி விட்டது; காரணம் இது பெரியார் மண்.
பெரியார் வாழ்ந்த காலத்திலாவது, அவரும் அவருடைய கருஞ்சட்டைத் தோழர்களும் மட்டுமே பெரியார் கொள்கைகளைப் பேசினர். ஆனால், தற்பொழுது எங்கெங்கிருந்தோ, எப்படி எப்படியோ புதிய புதிய இளைஞர்கள் புறப்பட்டுவிட்டனர். பல பெயர்களில், பல உருவங்களில் நாங்கள் பெரியாரின் பெயரன்கள் என்று சங்கிகளுக்கு சாவு மணி அடிக்கின்றனர். கருஞ்சட்டை அணிந்தும், அணியாமலும் இத்தனை நாள் இக்கும்பல் எங்கிருந்தது? என்று மதவாத கூடாரம் கலங்குகிறது. மதவாத மதவெறி சக்திகள் தங்கள் முயற்சிகள் ஒன்றுகூட பலிக்கவில்லையே என்று பதறுகின்றனர். ஆளுநர்களை வைத்து மற்ற மாநிலங்களில் மிரட்டினாலும், தமிழ்நாட்டில் புதிய கொள்கை விளக்கக் கூட்டங்களை ஆளுநர் கூட்டினால், உடனே தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு தமிழ்நாட்டில் கல்விக் கொள்கை வகுக்க குழு அமைக்கிறது. நம்முடைய அதிகார முனைகள்கூட முறியடிக்கப்படுகிறதே என்று அலறுகிறது ஆரியக் கூட்டம். ஆம்! இது பெரியார் மண்.