தகைசால் தமிழர் விருது பெற்ற தமிழர் தலைவரை வணங்கி வாழ்த்துவோம்!

2 Min Read
ஞாயிறு மலர்

பத்து வயதில் மேடை ஏறிப் 

பாடஞ் சொன்ன மாச்சிறியர்!

தத்தாய்த் தன்னைக் கழகத் திற்குத்

தந்து மகிழ்ந்த சீர்க்குரியர்!

முத்தாய் விளைந்தார் கடலூர் மண்ணில்

முடங்கா தியங்கும் மூப்பறியர்!

வித்தாய் ஊன்றி வேர்விட் டோங்கி

விடுதலை யாக்கும் ஆசிரியர்!

அய்யா அம்மா மறைந்த பின்னே

அடைகாத் தோம்பும் தாய்க்கோழி!

பெய்வார் அன்பைப் பெயலின் திறமாய்ப்

பெரியார் அம்மா உருவாகி!

பொய்வாய் மூடச் சான்றைக் காட்டிப்

புளுகைச் சாய்க்கும் வழக்காடி!

தொய்வே கொள்ளார்! தொடர்ந்து வெல்வார்!

துணிவே நெஞ்சின் இருப்பாகி!

தந்தை பெரியார் தடத்தில் நடந்தே

தகைமை பெற்ற தண்ணளியர்!

முந்தை மடமை மூடப் பழக்கம்

முட்டிச் சாய்க்கும் காளையிவர்!

சிந்தைச் செறிவைத் திகட்டா மொழியால்

செப்பும் பாட சாலையிவர்!

தந்தை பெரியார் மாற்றாய் வாழும்

‘தகைசால் தமிழர்’ ஆசிரியர்!

எண்ப தாண்டு பொதுமைத் தொண்டு!

எவர்தான் இவர்க்கே இணையுண்டு?

எண்ணம் எழுத்து இயக்கம் பேச்சும்

எல்லாம் கொள்கை நிலைகொண்டு!

உண்மை உணர்ந்தே உரைப்பார் முன்னே

உரைகற் சீர்மை உளங்கொண்டு!

திண்மைத் திரட்டாய்த் தீய்ப்பார் பகையைத்

திராவி டத்தின் படைகொண்டு!

போராட் டத்தால் புயலின் வீச்சாய்ப்

புரட்டிப் போட்ட புறப்பாட்டு!

பாராட் டென்றே பழிச்சொல் தாங்கிப்

பதையாச் சுரந்த பணியூற்று!

பேரா லத்தை விழுதாய்த் தாங்கும்

பெரியார் இயக்கத் தலைக்காப்பு!

கூரா ழத்தில் குன்றா ஆழி

கூர்மை வெல்லும் எறியீட்டி!

மண்டல் நிலவை மறைக்கச் சூழ்ந்த

மனுவார் முகிலின் திரைகிழித்து

மண்டுங் கமண்டல் எதிர்ப்பைத் திறமாய்

மன்றில் நின்று ஒடுங்கவைத்து

நண்டுத் தமிழர் நஞ்சை அகற்றி

நற்றாய்த் தகையால் ஒன்றவைத்து

வென்று பறித்தார் ஒதுக்கீட் டைத்தான்

மிளிர்ந்தோம் கல்வி பணிகளுற்று!

தகைசால் என்னும் சொல்லின் பொருளைத்

தகவாய் உரைக்கும் ஆற்றுபணி!

தகைநல் லாராம் தகையின் மாற்றாம்

தமிழர் தலைவர் வீரமணி!

தகைசால் தமிழர் விருதின் விருதாம்

தன்னே ரில்லார் வீரமணி!

தகைவேர் தேடித் தாள்சேர்த் தாரே

தமிழர் முதல்வர் ஆரமணி!

விருதிற் கிவர்தான் விருந்தாய் வாய்த்தார்

விருதின் விருதாம் வீரமணி!

உறுதிக் கிவர்தான் உருவாய் வாய்த்தார்

உருக்கு நெஞ்சர் வீரமணி!

பருவம் பாராக் குடிசெய் தொண்டின்

பண்பா லுயர்ந்தார் வீரமணி!

உருவில் எளியார் உளத்தால் வலியார்

உலவும் பெரியார் வீரமணி!

உலக மெல்லாம் பெரியார் நெறியை

ஓங்கி உரைக்குந் தொண்டிற்குப்

பலகற் றாலும் தன்ப யனோக்காப்

பொதுநோக் கேந்தும் நெஞ்சிற்கு

உலவுங் காற்றாய் ஓயா துழைத்தே

உரிமை மீட்கும் உரத்திற்கு

நலமாய்த் தந்தார் நல்லார் தேடி 

நன்றி சொல்வோம் முதல்வர்க்கு!

பெரியார் படையின் தலைமைத் தொண்டர்

பெற்றார் விருதை மகிழ்வெமக்கு!

அரிதின் அரிதாய் அகமு டைத்தார்க்(கு)

அளித்தார் விருதை பெருஞ்சிறப்பு!

தரித்தார் புகழை தமிழ்நாட் டரசு

தக்கார்க் களித்த தகவுடைத்து!

உரியார்க் களித்தார் ஒல்லும் விருதை

உலகும் வணங்கும் கையெடுத்து!

– செல்வ மீனாட்சி சுந்தரம், செயலாளர்,

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *