குருகுலமாம்!
“இலவசம்… எந்தவொரு இந்துக் குடும்பமும் தனது மகனை ஹரித்வார் குரு குலத்தில் படிக்க வைக்க விரும்பினால், மார்ச் 15 முதல் ஜூலை 15, 2023 வரை ஹரித்வாரில் உள்ள ஆச்சார்யா பாணிகிரஹி சதுர்வேத சமஸ்கிருத வேத பள்ளியில் நேர்காணல் நடைபெறும். “பையன் 6 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.” குருகுலத்தில் தங்குவதும், உண்பதும், படிப்பதும் இலவசம். மேலும் மாதம் ரூ.8000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. குழந்தை நான்கு வேதங்கள், இலக்கணம், இலக்கியம், ஆங்கிலம் போன்ற நவீன பாடங்களில் கல்வி கற்று, வேதங்களில் நிபுணராக்கப்படுகிறது. ஆச் சார்யா (எம்.ஏ.) வரை படிக்கவும் வழிகாட்டுகிறார். இந்தச் செய்தியை உங்கள் அனைத்து இந்து குழுக்களிலும் பதிவிட்டு, உங்கள் குழந்தையின் அற்புதமான மதப் பள்ளியை ஊக்குவிக்க முடிந்தவரை ஒவ்வொரு இந்துவையும் சென்றடைய முயற்சிக்கவும்.
உடனே தொடர்பு கொள்ளவும்!”
ஹிராலால் என்பவர் ஒரு தகவலை வெளியிட்டு ஒரு தொலைப்பேசி எண்ணையும் கொடுத்துள்ளார். (அந்த எண்ணை வேறு தெரிவித்து நாசமாகப் போக வேண்டுமா, என்ன?)
இதில் ஒரு வேடிக்கை கலந்த விஷமத்தையும் கவனிக்கத் தவறக் கூடாது – அதுதானே ஆரியப் பார்ப் பனீயம் என்பது.
“குழந்தை நான்கு வேதங்கள், இலக்கணம், இலக்கியம், ஆங்கிலம் போன்ற நவீன பாடங்களில் கல்வி கற்றுத் தரப்படுமாம். நான்கு வேதங்கள் எப்பொழுது நவீன பாடத் திட்டமானது?
ஆங்கிலம் வேறு கற் றுத் தரப்படுகிறதாம். ஆங் கிலேயர்களை மிலேச்சர்கள் என்றும், ஆங்கிலம் மிலேச்ச மொழி என்றும் சொல்லிக் கொண்டு இருந்த வர்கள், வேதங்களோடு ஆங்கிலத்தையும் எப்படி சொல்லிக் கொடுக்க முடியும்?
ஆங்கிலேயர்கள்தான் ஆரியர் – திராவிடர் என்று பிரித்தார்கள் என்று கதை கட்டுபவர்கள் இந்நிலையில் ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுப்பது எப்படி?
பார்ப்பனர்களுக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தம் ஏது?
சரி, வேதங்களுக்கு வருவோம்; ரிக் வேதம் 62 ஆம் பிரிவு 10 ஆவது சுலோகம் என்ன சொல்லுகிறது?
தெய்வாதீனம் ஜகத்சர்வம்
மந்த்ரா தீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபுஜெயத்
இதன் பொருள்: ”உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். மந்தி ரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை. பிராமணர் களே நமது கடவுள்.”
இப்பொழுது புரிகிறதா? இந்த வேதங்களைக் கற்றுக் கொடுக்கத்தான் இலவச தங்குமிடம், இலவச உணவு, மாதம் ரூ.8,000 உதவித் தொகை வேறு.
ரிக் வேதத்தின் வண்ட வாளத்தைக் கேளுங்கள்! கேளுங்கள்!!
”இந்திரன் ஆரியர்கள் வசிப்பதற்கென பூமியை – மூன்று உலகங்களையும் – அளந்தான் – ஆக்ரமித்தான். மாட்டுத் தலையால் தன் தலையை மறைத்துக் கொண்டு சண்டை செய்து தாசனைக் கொன்றான்.” (ரிக் வேதம், 5927).
”இந்திரா! உன்னை இந்த அதிகாலைப் படையலுக்குக் கூப்பிடுகிறோம். சோமரசம் பிழியப்படுகிறது. தாகமுள்ள மானைப் போலக் குடி! எங்கள் ஆசைகளை, குதிரைகளாலும், பசுக்களாலும் நிறைவேற்று! (‘ரிக்’, 163-165).
”பார்ப்பனர்கள் திருந்தி விட்டனர் – இன்னும் ஏன் அவர்களை சாடுகிறீர்கள்?” என்று கேட்கும் அதிமேதா விகளே!
இவற்றைப் புதுப்பிக்க அவர்கள் ஏற்பாடு செய்யும் கல்வித் திட்டத்தைப் பார்த்தீர்களா? சிந்தியுங்கள்!
– மயிலாடன்