சிறீநகர், ஜன. 29- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காஷ்மீரில் தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமாகிய உமர் அப் துல்லா கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களி டையே அவர் கூறியதாவது,
“நாட்டில் தற்போது நிலவும் சூழலினை மாற்றவேண்டும் என்ற அக்கறையில் நடைபயணத்தில் பங்கேற்றேன். இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தியின் மதிப்பையும் பிம்பத்தையும் உயர்த்துவதற்காக நடத்தப்படவில்லை. மாறாக, நாட்டில் தற்போது நிலவும் சூழலை மாற்றுவதற்காக நடத்தப்படுகிறது.
எங்களின் தனிப்பட்ட நலனுக்காக இல்லாமல் நாட்டின் நலனுக்காகவே நாங்கள் இருவரும் இதில் ஒன்றிணைந் துள்ளோம். தற்போதுள்ள அரசு, அரபு நாடுகளுடன் நட்புறவுடன் உறவை வளர்த்துக் கொள்கிறது. ஆனால், அந்த அரசில் நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மையின சமூகத்தின் பிரதிநிதிகள் ஒருவர்கூட இல்லை.
நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து, நாட்டை ஆண்ட – ஆளும் கட்சிகளில் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாமல் இருப்பது இதுவே முதல்முறை. இதிலிருந்து அவர்களின் அணுமுறையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி வழங்கும் பிரிவு 370-அய் நீக்கும் காங்கிரஸ் நிலைப்பாடு பற்றி இப்போது ஆராய விரும்பவில்லை. சட்டப்பிரிவு 370 மீண்டும் கொண்டு வர நீதிமன்றத்தில் நாங்கள் தீவிரமாக போராடிக்கொண்டிருக்கிறோம். இந்த வழக்கின் விசார ணையை அரசு இழுத்து அடிக்கிறது. இது வழக்கின் வலிமையை உணர்த்துகிறது.
ஜம்மு காஷ்மீரில், கடந்த 2014ஆம் ஆண்டு கடைசி யாக தேர்தல் நடந்தது. இரண்டு தேர்தலுக்கு இடையில் நீண்ட இடைவெளி இருப்பது இதுவே முதல்முறை. அங்கு போர்ப் பதற்றம் உச்சத்தில் இருக்கும்போதும் இவ்வாறு நடந்தது இல்லை. இந்த அரசு மக்கள் தேர்தலுக்காக கெஞ்ச வேண்டும் என்று விரும்புகிறது. நாங்கள் பிச்சைக்காரர்கள் இல்லை. நாங்கள் கெஞ்சப் போவது இல்லை” என்றார்.