காரைக்குடி, ஜன.31 காரைக்குடியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை வருவாய் மற்றும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அகற்றிய விவகாரத்தில், வட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் இடமாற்ற நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளனர்.
காரைக்குடி கோட்டையூர் பகுதியில் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் தான் புதிதாக கட்டிய வீட்டில் மார்பளவு பெரியார் சிலையை நிறுவி திறப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். சிலை திறக்கப்படவிருந்த நிலையில் வருவாய் மற்றும் காவல்துறையினர், இளங்கோவன் வீட்டின் சுற்றுச்சுவருக்குள் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை அகற்ற முயன்றனர்.
சிலைக்கு முறையான அனுமதி பெற்றிருப்பதாக இளங்கோவன் தரப்பில் தெரிவித்தும், அதிகாரிகள் மேற்பார்வையில் பெரியார் சிலையை அகற்றிச் சென்றனர். இந்த விவகாரம் பொதுவெளியில் பெரிதாக வெடித்தது. இளங்கோவன் இல்லத்திலிருந்து சற்று தொலைவில் வசிக்கும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் அழுத்தம் காரணமாகவே, பெரியார் சிலை அகற்றப்பட்டதாக திராவிடர் விடுதலை கழகத்தினர் கொதித்தனர்.
இந்த சம்பவம் பெரிதளவில் விவாதத்துக்கு ஆளான நிலையில், பெரியார் சிலை அகற்றலை மேற்கொண்ட அதிகாரிகள் அடுத்த சில மணி நேரங்களில் அரசின் அதிரடி நடவடிக்கைக்கு ஆளா னார்கள். காரைக்குடி வருவாய் வட்டாட்சியரான இரா.கண்ணன் மற்றும் காரைக்குடிக்கு பொறுப்பு வகிக்கும் தேவக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் கே.கணேஷ்குமார் ஆகியோர் இடமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்கான உத்தரவை முறையே சிவகங்கை ஆட்சியர் மற்றும் தென் மண்டல காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பிறப்பித்துள்ளனர்.