லக்னோ, பிப். 5- பாலியல் வன் கொடுமையில் சிக்கிய பெண் இறந்தது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரி கையாளர் சித்திக்கப்பன், 28 மாத போராட்டத்துக்குப்பின் உ.பி. சிறையில் இருந்து வெளி வந்து உள்ளார்.
உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸ் நகரில் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 வயது தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டார். டில்லி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண் 15 நாள் கழித்து மரணம் அடைந்தார். இந்நிகழ்வை கண்டித்து முதல மைச்சர் ஆதித்யநாத் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.
இதுகுறித்து செய்தி சேகரிக்க கேரளாவைச் சேர்ந்த செய்தியாளர் சித்திக் கப்பன் ஹாத்ரஸ் சென்றார். அவரை உ.பி. காவல் துறையினர் கைது செய்தனர். ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை நிகழ்வு பற்றி எதிர்மறையான செய்திகள் வருவதை தவிர்ப்பதற்காக உத்தரப் பிரதேச அரசு சித்திக்கை கைது செய்துள்ளதாக எதிர்க்கட்சிகளும், சிவில் சொசைட்டி அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.
கைது செய்யப்பட்ட சித்திக் மற்றும் பலர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎப் அய்) உறுப்பினர்கள் மற்றும் அதன் மாணவர் பிரிவினர் என உ.பி காவல் துறையினர் கூறினர். சித்திக் மீது தேச துரோக வழக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிஎப் அய் அமைப்பிடம் இருந்து, சித்திக் பணம் பெறுவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை சித்திக் மறுத்தார். அவர் மீது முறையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாததால் உச்ச நீதிமன்றம் சித்திக்குக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பிணை வழங்கியது. நிதி மோசடி வழக்கிலும் அவர் 3 மாதம் கழித்து பிணை பெற் றார். ஆனால், பல காரணங்களுக்காக அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை.
28 மாதங்கள் போராட்டத்துக்குப்பின் சித்திக் உ.பி. சிறையில் இருந்து 1.2.2023 அன்று வெளி வந்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கடும் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடுவேன். பிணை பெற்ற பிறகும், நான் சிறை வைக்கப்பட்டேன். 28 மாதங்கள் போராட்டத்துக்குப்பின் நான் விடுவிக்கப் பட்டுள்ளேன். நான் சிறையில் இருந்ததால் பயனடைந்தது யார் என தெரியவில்லை. இந்த 2 ஆண்டு கள் மிக கடுமையாக இருந்தன. ஆனாலும் நான் பயப்பட வில்லை. இவ்வாறு சித்திக் கூறினார்.