ஆத்தூர், பிப்.7- செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.42.95 கோடியில் கட்டப்பட உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லக் கட்டடம், சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சிக் கட்டடம் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல்நாட்டினார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (6.2.2023) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சமூகநலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சமூகப் பாதுகாப்புத்துறை, தமிழ் நாட்டில் குழந்தைகளின் நலன்மற்றும் பாதுகாப்புக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக, பல்வேறு வகையான குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களையும் உருவாக்கி, பராமரித்து வருகிறது.
சட்டத்துக்கு முரணாகச் செயல்பட்ட சிறார்களை தங்கவைத்து, அவர்களைப் பராமரித்து, பல்வேறு பயிற்சிகளை அளிப்பதற்காக செயல்படும் அரசினர் பாதுகாப்பு இல்லத்துக்கு, செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.15.95 கோடியில், 37,146 சதுரஅடி பரப்பில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.
100 சிறுவர்கள், இளைஞர்கள் பயனடையும் வகையில், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய இந்தக் கட்டடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக அடிக்கல்நாட்டினார்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.27 கோடியில், 80,326.36 சதுரஅடி பரப்பில், சமூக மேம்பாட்டுக் கான ஒருங்கிணைந்த பயிற்சி மய்யக் கட்டடத்துக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இந்தப் பயிற்சி மய்யத்தில், மாவட்ட சமூக நலன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், காவல் துறையினர், ஆசிரியர்கள், தன்னார்வத்தொண்டு நிறுவன பிரதிநிதிகள்,சமூகப் பணியாளர்கள், கல்விநிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், குழந்தைகள், மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் நலனுக்காக செயல்படும் அனைத்து தரப்பினருக்கும், குழந்தைகள் மற்றும் மகளிர் நலன், உரிமைகள், மேம்பாடு, அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும்.
தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சமூக நலத் துறைச் செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.