கலைஞருக்கு நிறுவப்படும் பேனாவுக்குள் இருப்பது பெரியார் என்ற மைதான்!
சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுப்பவர்கள் யார்?
பொள்ளாச்சி, பிப்.8 கலைஞருக்கு நிறுவப்படும் பேனாவுக்குள் இருப்பது பெரியார் என்ற மைதான்! சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுப்பவர்கள் யார்?என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
நேற்று (7.2.2023) பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியா ளர்களுக்குப் பேட்டியளித்தார். அவரது பேட்டி வருமாறு:
எதிர்ப்பை சந்தித்து முறியடித்த எழுதுகோல் கலைஞரின் எழுதுகோல்!
செய்தியாளர்: மறைந்த முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவிப்பது குறித்து தங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: கலைஞர் சொன்னார் ”என்னுடைய செங் கோலை வேண்டுமானாலும் பறிக்கலாமே தவிர, என்னுடைய எழுதுகோலை யாராலும் பறிக்க முடியாது” என்று.
அந்த எழுதுகோல், எப்பொழுதும், எவரானாலும், எந்த எதிர்ப்பையும் சந்தித்து, அதனை முறியடித்த எழுதுகோல்.
எனவே, அதைப்பற்றி யார் என்ன விஷமச் செய்திகளை வெளியிட்டாலும், பேனா தெளிவாக நினைவுச் சின்னமாக வரும்.
காரணம், அந்தப் பேனாவிற்குள் இருக்கும் மை பெரியார் என்ற போராட்ட ஆயுதம். அது ஒன்றுபோதும், வெற்றி பெறு வோம்.
நாட்டின் வளர்ச்சித் திட்டத்தைத்
தடுத்தவர்கள் யார்?
செய்தியாளர்: தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்கிறார்கள்; ஆனால், அந்த வளர்ச்சித் திட்டப் பணிகளை பி.ஜே.பி. தடுக்கிறது என்று சொல்கிறார்களே, இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பணியை தடுத்தவர்கள் யார்? என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
அதை இப்பொழுது அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்; அந்தத் திட்டத்தை நிறைவேற்றவேண்டுமா? இல்லையா?
வளர்ச்சியினுடைய அடையாளம் என்பது ‘திராவிட மாடல்’ ஆட்சி.
சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுத்தவர்கள் யார்? அந்தத் திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று சொல்பவர்கள் யார்?
உங்கள் கேள்விக்கு இதுதான் விடை!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.