சேது சமுத்திரத் திட்டத்தின் உண்மையும் ஒருநாள் வெளிவந்தது; அதில் பொய்யும், புரட்டும் பலியானது!
அதிகாரமிக்க மூன்று பார்ப்பனர்களைக் கொண்டே எங்களால் சமூகநீதி பாதுகாக்கப்பட்டது!
திண்டுக்கல், பிப்.8 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தை அறிஞர் அண்ணா நினைவு நாளில் ப.குமார பாளையம், ஈரோட்டில் 3.2.2023 அன்று தொடங்கி, அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் 10.3.2023 அன்று கடலூரில் நிறைவு செய்கிறார்.
நான்கு கட்டங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பான திட்டமிடல், ஏற்பாடுகளுடன் பரப்புரைப்பயணம் நடை பெற்று வருகிறது. கழகச் சொற்பொழிவாளர்கள் உள்ளிட்ட பயணக் குழுவில் இடம் பெற்றுள்ள கழகப்பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், கழகத் தோழர்கள் மக்களிடம் பயண நோக்கத்தைக் கொண்டு செல்கின்றனர். ஒரு நாளைக்கு இரண்டு இடங்களில் பரப்புரைப் பொதுக்கூட் டத்தில் நிறைவுரையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றி வருகிறார்.
கோபிசெட்டிப்பாளையம், திருப்பூர், மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் பரப்புரைப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி நேற்று (7.2.2023) ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை ஆகிய இரு இடங்களிலும் மக்கள் பெருவெள்ளத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்.
90 வயதில் தமிழர் தலைவர் மேற்கொண்டுள்ள பயணத் துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் பலரும் தங்களின் பேராதரவையும் அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மாநகர், நகரங்கள், கிராமப்புறங்கள் என அனைத்து பகுதி களிலும் சுவரெழுத்து, பதாகைகள், துண்டறிக்கை வழங்கல், தெருமுனைக்கூட்டங்கள்மூலம் தமிழர் தலைவர் வருகை குறித்து மக்களிடம் கொண்டு சென்று சேர்த்துள்ளார்கள் கழகப்பொறுப்பாளர்கள்.
தொடர் பரப்புரைப்பயணத்தை கழகப் பொதுச்செயலாளர் கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநிலத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன் ஒருங்கிணைத்து வருகிறார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பரப்புரைப் பயணம் நம் இனத்துக்கான பாதுகாப்பு அரண் திராவிடர் கழகம், திராவிடர் கழகத் தலைவர்தான் என்று மக்களிடையே உணர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் குறித்த விளக்கம், மாநில உரிமைகள் உள்ளிட்ட கொள்கை விளக்கங்கள் – விழிப்புணர்வை, எழுச்சியை பொதுமக்களிடம் இப்பயணம் ஏற்படுத்தி வருகிறது.
இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் தன்னல மறுப்புடன் பொதுநலத்துக்காக தொண்டாற்றும் உயரிய உணர்வினை ஏற்படுத்தி வருகிறது.
போராடிப்பெற்ற உரிமைகளைக் கட்டிக்காக்கவும், போராடிப் பெற வேண்டிய உரிமைகளுக்காகவும் போராட வேண்டிய நேரத்தில் போராடும் போர்க்குணத்தையும் இந்த பயணத்தின்மூலம் ஜாதி, மத, கட்சிகள் பேதமின்றி அனை வரும் உரிமைகளுக்காக ஒன்றிணைய வேண்டியதற்கான உணர்வினை இளைஞர்கள், மாணவர்கள் பெறுகிறார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் செல்லுகின்ற இடமெல்லாம், அரசியல் கட்சிகள் வேறுபாடுகளின்றி பலரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பரப்புரைப் பயணத்துக்கு ஆதரவை அளித்து வருகிறார்கள்.
சமூக நீதிப்பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கங்களுடன், சேதுசமுத்திரத்திட்ட செயலாக்கத்துக்கான விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பரப்புரைப்பயணப் பொதுக்கூட்ட சிறப்புரையில் இடம் பெற்று வருகிறது.
ஒட்டன்சத்திரம்
சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், சேது சமுத்திரத்திட்டம் செயல்படுத்துதல் ஆகியவற்றை பரப்புரை செய்யும் பெரும் பயணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அய்ந்தாம் நாளாக சூறாவளி சுற்றுப் பயணம் செய்து உரையாற்றினார்.
தமிழ்நாடு தழுவிய பெரும் பயணப் பரப்புரையில் பிப்ரவரி 7 ஆம் நாளில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் மாவட்ட, மண்டலப் பொறுப்பாளர்களால் பொதுக்கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சென்றமுறை ’நீட்’ தேர்வு விலக்கு கேட்டு இதேபோல் சுற்றுப்பயணம் ஆசிரியர் மேற்கொண்டிருந்தார். பொதுமக்கள் அதை நல்ல வண்ணம் ஆதரித்து செவிமடுத்தனர். இந்த முறை அதைவிட மக்கள் அதிகமாக கூடி ஆதரித்து வருவது கூட்டத்துக்கு கூட்டம் அதிகரித்த வண்ணமே இருந்தது.
ஒட்டன்சத்திரம் நகரில் நடைபெற்ற திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் பொன்..அருண்குமார் அனைவரை யும் வரவேற்று பேசினார். பொதுக்குழு உறுப்பினர் புலவர் வீர.கலாநிதி, அமைப்பு செயலாளர் மதுரை வே.செல்வம், திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன், ப.க. மாவட்ட தலைவர் திராவிடச் செல்வன், மண்டல தலைவர் நாகராஜன், மண்டல மகளிரணி செயலாளர் தில் ரேஸ் பானு, பெரியார் பெருந்தொண்டர் மாரியப்பன், மாநில இளைஞரணி துணை செயலாளர் கமல் குமார், மாவட்ட துணை தலைவர் அங்கப்பன், ப.க.பொறுப்பாளர் மாரிமுத்து, தி.க.பொறுப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக் கத்தில் மாநில கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் உரையாற்றிட அவரை தொடர்ந்து பேரா.ப.காளிமுத்து உரை நிகழ்த்தினர். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
திராவிட இயக்கம்
எதற்காக உருவானது?
இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இங்கு வந்திருப்பதாக தோழர்கள் நினைவுபடுத்தியதை சுட்டிக்காட்டி, ஒட்டன்சத் திரம் மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என்று தொடங்கினார். பின்னர், குமாரபாளையத்தில் 3 ஆம் தேதி தொடங்கி சுற்றுப்பயணம் வந்து கொண்டிருப்பதை முன்னோட்டம் போல சுருக்கமாகக் கூறி, திராவிட இயக்கம் எதற்காக உருவானது? என்ற கேள்வியை முன் வைத்து, அனை வருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்; மகளிர் உரிமை பெற வேண்டும்; அதற்கு சமூக நீதி தழைக்க வேண்டும்; ஆகவே அதை பாதுகாக்க வேண்டும் என்று பதில் சொன்னார். 100 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்ட திராவிடர் இயக்கம் சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை உருவாகியிருக்கின்றன. இதற்காக தந்தை பெரியார் தனது 95 வயது வரையிலும் போராடியிருக்கிறார் என்று குறிப் பிட்டுவிட்டு அதற்கான ஆதாரத்தை எடுத்துரைக்க, பிப்ரவரி 6 இல் வெளியான இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த, முனைவர் பட்டப் படிப்புகளில் அதிகமான ஆய்வுரைஞர்கள் உருவாக்கப்படுவது தமிழ்நாட்டில்தான் என்ற முக்கியமான ஒரு தகவலை மாற்றங்களைக் குறிப்பிட எடுத்துக்காட்டு சொல்லி விளங்கவைத்தார்.
பார்ப்பனர்களைக் கொண்டே
சமூக நீதி நிலைநாட்டப்பட்டது!
இப்படி மாற்றங்கள் வெட்டவெளிச்சமாக தெரிந்தாலும் சிலர் தூங்குகிறவர்களைப் போல பாசாங்கு செய்வதால் நாங்கள் அவர்களை அலட்சியப்படுத்திவிட்டு எங்கள் பணி களைத் தொடருகிறோம் என்றார். மாற்றங்கள் உருவாகி யிருப்பதை இன்னமும் ஆணித்தரமாகச் சொல்ல, 100 ஆண்டுகளுக்கு முன் அறியப்பட்டிருந்த நல்லதங்காள் கதையை நினைவுபடுத்தினார். இன்றோ கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சமூக நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். அதுவும், முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, பிரதமர் நரசிம்மராவ், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ஆகிய அதிகாரமிக்க மூன்று பார்ப்பனர்களைக் கொண்டே சமூக நீதி பாதுகாப்பு சாத்தியப்படுத்தப்பட்டிருப்பதை விளக்கமாக சொன்னார்..மேலும் அவர், மண்டல் கமிசன் அமலாவதற்கு திராவிடர் கழகம் என்னென்ன முயற்சிகளை முன்னெடுத்தது, அதனால் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் என்னென்ன என்பதைப் பற்றி விவரித்தார்.
பொய்யும், புரட்டும் பலியானது!
தொடர்ந்து சேது சமுத்திரத்திட்டம் பற்றி பேசினார். 150 ஆண்டு கால வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்னார். அண்ணா அதற்காக எடுத்த முயற்சிகள், கலைஞர் காலத்தில் அதன் செயல்பாடுகள், இன்றுள்ள நிலை ஆகியவற்றை நினைவுபடுத்தினார். தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதமளிக்கும் என்பதை சுருக்கமாக குறிப்பிட்டிருக் கிறார். வேலை வாய்ப்பை பற்றி பேசும்போது, பிரதமர் மோடி, 2014 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று கூறியதையும், 9 ஆண்டுகளில் 18 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். கொடுத்தாரா? என்று மக்கள் முன் அந்தக் கேள்வியை! மக்கள் உடனடியாக, ‘இல்லை’ என்று ஒருமித்து உரத்த குரலில் பதில் சொன்னார்கள். ஆனால் இலட்சக்கணக் கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை மூடநம்பிக்கையை சொல்லி, நிறுத்தி வைத்திருக்கும் கொடுமையை எடுத்துரைத்தார். இப்போது பா.ஜ.க.வின் அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில், ”ராமன் பாலம் என்பதற்கான எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை” என்று கூறியதை சுட்டிக்காட்டி, இதைத்தானே நாங்கள் தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறோம் என்று சொல்லி, “உண்மையும் ஒருநாள் வெளிவரும் அதில் பொய்யும், புரட்டும் பலியாகும்” என்று பட்டுக்கோட்டையார் பாடியதை சுட்டிக்காட்டி, சரி இனி யாவது ஒன்றிய அரசு சேது சமுத்திரத் திட்டத்தை செயல் படுத்த முன்வர வேண்டும் என்று கூறி, குறுகிய காலத்தில் எல்லா கருத்துகளையும் கூறிவிட முடியாது. ஆகவே நீங்கள் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து தனதுரையை நிறைவு செய்தார்.பல்வேறு அரசியல், சமூக இயக்கங்கள் தமிழர் தலைவருக்கு ஆடையணிவித்து மகிழ்ந்தனர்.
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்த பரப்புரை கூட்டத்தில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் காளியப்பன், திருப்பூர் மாவட்ட தி.மு.க.இலக்கிய அணி அமைப்பாளர் பல்லடம் இளங்கோ, ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திருமலை சாமி, ஒன்றிய தி.மு.க.இலக்கிய அணி பொறுப்பாளர் கருப்புசாமி, ம.தி.மு.க.மாநில தீர்மானக் குழு உறுப்பினர் தமிழ்வேந்தன், வி.சி.க. மாவட்ட செயலாளர் ஜான்சன் கிறிஸ்டோபர், தமிழ்ப் புலிகள் கட்சி பொறுப்பாளர் தர்மராஜ், ஆதித்தமிழர் கட்சி பொறுப்பாளர் பழனி மணி, அம்பேத்கர் பெரியார் அறக்கட்டளை தலைவர் பிச்சை முத்து, இந்திய குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் ஜான் வின்சென்ட், தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் இளமாறன், திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்ட தலைவர் அசுரன்,ஆதித்தமிழர் பேரவை கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்மாறன், வி.சி.க.மாநில இளைஞரணி செயலாளர் குடந்தை தமிழினி, திராவிடர் கழக மாநில மகளிரணி செய லாளர் தகடூர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பழனி ஒன்றிய தலைவர் மதன பூபதி நன்றி கூறினார்.
அங்கிருந்து அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு தனது பரப்புரைப் படையுடன் நிலக்கோட்டை நோக்கிப் புறப்பட்டார்.
நிலக்கோட்டை
கொட்டும் பனியில் மக்கள் அசையாமல் அமர்ந்திருந்தனர். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். ஒன்றிய கழக தலைவர் முத்து அனைவரையும் வரவேற்று பேசினார்.
திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் மு.ஆனந்த முனிராசன், மாநில இளை ஞரணி துணை செயலாளர் கமல் குமார், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.சக்தி சரவணன், ஒன்றிய அமைப்பாளர் பாபு, ஒன்றிய தலைவர் மதிக்கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாண்டியன், மண்டல தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதிவதனியும்,
அறிவுடைநம்பியும்!
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் திண்டுக்கல் ஈட்டி கணேசன் மந்திரமா? தந்திரமா? எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சிகளை நடத்தினார். பின்னர் மாநில கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் தொடக்கவுரை யாற்றினார். உள்ளூர் பிரமுகர்கள் பேசியதும், இயக்கத் தோழர்களான சக்தி சரவணன் – விஜயலட்சுமி இணையர்கள் தங்களது மகள், மகன் இருவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர், பெயர் வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இருவரும் ஓரளவுக்கு வளர்ந்து விட்டனர். இதற்காகவே காத்திருந்தது போல் மேடையில் மகன், மகள் இருவரும் பெற்றோருடன் ஆசிரியரின் இருபக்கமும் உற்சாக உருவங்களாய் நின்றிருந்தனர். ஆசிரியரும் மிகுந்த உற்சாகத்துடன், மகளுக்கு, ’மதிவதனி’ என்றும், மகனுக்கு ’அறிவுடைநம்பி’ என்றும் பார்வையாளர்களின் ஆரவாரமான கையொலிகளுக்கிடையே பெயர் சூட்டினார். பெற்றவர்களும் மிகுந்த மனநிறைவுடன் மேடையிலிருந்து கீழே இறங்கினர்.
இந்தப் புளுகு
கந்தபுராணத்திலும் இல்லை!
அதைத்தொடர்ந்து தமிழர் தலைவர் பேசினார்.உள்ளூர் பிரமுகர்களான வழக்குரைஞர் கிருஷ்ணனையும், வழக் குரைஞராக இருந்து பின்னாளில் நீதியரசராக பதவி உயர்வு பெற்ற பி.எஸ்.எஸ். சோமசுந்தரம், டபிள்யூ.பி.ஏ, சவுந்திர பாண்டியன் ஆகியோரை மறக்காமல் நினைவு கூர்ந்தார். 50 ஆண்டுகளுக்கு முன்னர் நிலக்கோட்டையில் நடந்த திராவிடர் மாநாட்டின் நினைவலைகளில் சற்றே மூழ்கினார். அவரது அனுபவத்திற்கு எல்லா பகுதிகளிலும் நினைவு கூறுவதற்கு ஏராளமான சம்பவங்களும், தோழர்களும் இருந்தனர். நேரத்தின் அருமை கருதி பேசத்தொடங்கினார். எடுத்த எடுப்பிலேயே அவர், திராவிடர் கழகத்துக்காரர்களாக இருக்கிற நாங்கள்; கருப்புச்சட்டைக்காரர்களாக இருக்கிற நாங்கள்; பெரியார் தொண்டர்களாக இருக்கிற நாங்கள் என்று அடுக்கிக் கொண்டே சென்று, ‘ஆதாரத்தோடு பேசக்கூடிய வர்கள்’ என்று முடித்தார். ஆனால் நமது இன எதிரிகள் அப்படியல்ல. பொய்யும், புரட்டும் பேசக்கூடியவர்கள். இந்தப் புளுகு கந்தபுராணத்திலும் இல்லை என்று சொல்வார்கள். அப்படியானால் கந்தபுராணம் தான் புளுகுக்கு என்சைக் கிளோபீடியா என்றதும் மக்கள் சட்டென்று சிரித்துவிட்டனர்.
‘திராவிட மாடல்’
ஆட்சியின் சிறப்பு!
அப்படிப்பட்ட பொய்களுக்கும் நாம் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். மனுதர்ம சாஸ்திர புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு பக்கம், சுலோகத்தின் எண் ஆகியவற்றை சொல்லி, படித்துக் காட்டினார். இன்னமும் இவைகள் அமலில் இருப்பதை எடுத்துரைத்தார். சமூக நீதி பற்றி கூறும்போது, ‘பிராமணன் போஜனப் பிரியன்’ என்ற சொலவடையைச் சொல்லி, நம்மாள்தான் பசி, பசி என்று அலைந்து கொண்டிருந்தான். ஆகவேதான் சூத்திரப் பஞ்சமர்களுக்கு முன்னுரிமை கேட்கிறோம் என்று எளிமையாக புரிந்து கொள்ள, பசியை மய்யப்படுத்தி விளக்கினார். நடப்பு அரசியலை பேச வேண்டிய தேவை ஏற்பட்டபோது, அண்ணா தி.மு.க. இன்று அந்தப் பெயரை இழந்து அடமான தி.மு.க.வாக மாறிவிட்டது கவலையளிக்கிறது. விரைவில் அவர்கள் அடமானத்திலிருந்து மீள வேண்டும் என்று தனது விழைவை வெளிப்படுத்தினார். அதன்பிறகு இன்றைய திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கு செய்திருக்கும் புரட்சி கரமான திட்டங்களை விளக்கினார். தியாகராயர் தொடங்கி, காமராசர், எம்.ஜி.ஆர். கலைஞர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் வரையிலான பள்ளிச் சிறார்களுக்கு காலைச் சிற்றுண்டி வரையிலும் சொல்லி, அதன் மூலம் நமது கல்வியின் தரம் உயர்ந்திருப்பதைக் கூறி, இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். எப்போதுமே நம்பகத்தன்மைக்காக ஆசிரியர் புத்தகங்களில் உள்ள ஆதாரங்களை படித்துக்காட்டி சொல்லி வருவது வழமை. நிலக்கோட்டையில் அதன் புதிய பரிமாணமாக, கையடக்க கணினியைக் கையில் வைத்துக்கொண்டு சேது சமுத்திரத்திட்டம் பற்றி பேசும் போது இணையம் மூலம் இந்தியா, இலங்கை வரைபடங்களை மக்களுக்குக் காட்டியபடி பேசிக் கவர்ந்து அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
கலந்து கொண்ட தோழர்கள்!
இந்த பரப்புரை கூட்டத்தில் தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், தி.மு.க.பேரூர் கழக செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை, மாவட்ட கவுன்சிலர் நாகராணி ராஜ்குமார், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜா, காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் கோகுல் நாத், காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவர் துரைசேகரன், வி.சி.க. தொகுதி செயலாளர் தமிழரசன்,வி.சி.க.ஒன்றிய செயலாளர் போது ராசன், வி.சி.க. பொறுப்பாளர் உலகநம்பி, வி.சி.க பொறுப்பாளர் மணி கண்டன், காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் நடராஜன், திண்டுக்கல் மாவட்ட துணை செயலாளர் காஞ்சித்துரை, நிலக் கோட்டை பாண்டியராஜன், உள்ளிட்டோர் கலந்துகொண் டனர். முடிவில் நகர செயலாளர் பழ.நாகராசன் நன்றி கூறினார்.
கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரைப் பயணத்தில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், அமைப்பு செயலாளர் மதுரை
வே.செல்வம், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.