ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடில்லி, நவ.25 டில்லியில் தற்போது தலைமை செயலாளராக உள்ள நரேஷ் குமார் இம்மாதம் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். ஆனால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நரேஷ் குமாருக்கு பதவி நீட்டிப்பு வழங்க கூடாது என்றும், புதிய தலைமை செயலாளரை டில்லி அரசின் பரிந்துரையின் பேரிலேயே நியமிக்க வேண்டும் என்றும் டில்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று (24.11.2023) விசாரணைக்கு வந்தது.
இதுதொடர்பான இருதரப்பு வாதத்தின்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், “தலைமை செயலாளர் நியமனம் குறித்து டில்லி முதலமைச்சரும், ஆளுநரும் ஏன் இதுவரை சந்தித்து பேசவில்லை?“ என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர் டி.ஒய்.சந்திர சூட் பிறப்பித்த உத்தரவில், “தலைமை செயலாளர் நியமன விவகாரத்தில் டில்லி முதலமைச்சரும், ஆளுநரும் அமர்ந்து பேசி சுமூக தீர்வை எடுக்க வேண்டும். டில்லியின் புதிய செயலாளரை நியமிக்க தகுதியுடைய 5 மூத்த அய்ஏஎஸ் அதிகாரிகளின் பெயர்களை வரும் 28ஆம் தேதி காலை 10.30 மணிக்குள் ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பட்டியல் குறித்த தனது முடிவை டில்லி அரசு அன்றைய தினமே தெரிவிக்க வேண்டும். டில்லி அரசின் பரிந்துரையின்படி ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ள ஒருவர் டில்லி புதிய தலைமை செயலாளராக அறிவிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.