புதுடில்லி, பிப்.13 சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பீகார் மேனாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் டில்லி திரும்பினார். ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் தற்போது பிணையில் வெளியே உள்ளார்.
இந்நிலையில், லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் சார்பில் அறிவுறுத்தப் பட்டது. இதைத் தொடர்ந்து, லாலு பிரசாத் யாதவுக்கு, அவரது மகள் ரோகினி ஆச்சார்யா சிறுநீரகத்தைத் கொடையாக அளிக்க முன்வந்தார். இதையடுத்து, சிங்கப்பூருக்கு அழைத் துச் செல்லப்பட்ட லாலு பிரசாத் யாதவுக்கு கடந்த டிசம்பர் 5-ம் தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனினும், தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மருத்துவர் கண்காணிப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து சிங்கப்பூரிலேயே இருந்து வந்தார். அறுவை சிகிச்சை முடிந்து 2 மாதங்கள் கடந்துவிட்டதை அடுத்து, லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூரில் இருந்து டில்லியில் உள்ள இல்லத்திற்கு வந்தார். அவரோடு, அவருக்கு சிறநீரக கொடை அளித்த ரோகினி, இளைய மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் சிங்கப்பூரில் இருந்து டில்லி திரும்பினர்.