சென்னை, பிப்.16 மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்.28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (15.2.2023) கூறியதாவது: தமிழ்நாட்டில் இதுவரை 2.60 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இன்னும் 7 லட்சம் பேர் இணைக்கவில்லை. அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு வரும் 28-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 13 நாட்களுக்கு பிறகு, அவகாசம் கண்டிப்பாக நீட்டிக்கப்படாது.
கேரளா, ஆந்திரா, கருநாடகாவில் கரோனா காலகட்டத்தில்கூட மதுபானக் கடைகள் மூடப் படவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே செயல் பட்ட 88 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க நேற்று (பிப்.15) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது