ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read
- Advertisement -

கேள்வி 1: இடதுசாரிகள் என்றால் கிழிந்த உடை, அழுக்கு உடம்பு, வற்றிய வயிறு, குடிசை வீடு, கூலி வேலை, பாதசாரியாகவே எங்கும் செல்ல வேண்டும், வாழ்நாள் முழுவதும் ஏழையாக இருந்து எளிமையாக வாழ வேண்டும் என்றே நினைக்கும் பொது புத்தி அரசுப் பதவியில் உயர்நிலையில் இருக்கும் வலதுசாரிகளிடம் இன்னும் இருக்கிறதே?

– மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில் 1: அதைப் புரிந்துகொள்ளும் புத்தி சரியாக மக்களுக்கு இருந்தால் எல்லாம் மாறியே தீரும். அதுதான் நம் பணி சித்து.

  • ••

கேள்வி 2: செங்கல்பட்டில் 1929இல் மாநாடு நடத்த யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும், என்று தந்தை பெரியார் வரையறுத்து சமூக நீதி ஜாம்பவான்களைத் தேர்ந்தெடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று அறிவித்தாரே!
100 ஆண்டுகளுக்கு முன்னால் மாநாட்டிற்குத் தலைமை தாங்குபவர்களைப் பற்றி இவ்வளவு ஆய்வு செய்யப்பட்டுள்ளதே, இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக இருப்பவர்கள் பெயர்கள் கூட பொதுமக்களுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தெரியவில்லையே – இவர்களெல்லாம் தலைமைப் பண்பிற்கு உரியவர்கள் தானா?

– குடந்தை க.குருசாமி

பதில் 2: யாரை யாரோடு ஒப்பிட வேண்டும் என்ற இலக்கணம் மீறிய கேள்வியல்லவா உங்கள் கேள்வி தோழர்?

  • ••

கேள்வி 3:  அய்யா, படித்தவர்கள் எண்ணிக்கைக் கூடக் கூட, மூடநம்பிக்கையும் கூடிக் கொண்டே போகிறது ஏன்…? இதற்கு என்னதான் தீர்வு…?

– யாழினி, பரமக்குடி

பதில் 3: மிகவும் வேதனை தரத்தக்க செய்தி. அய்யா மொழியில், “படித்த தற்குறிகள்” அதிகமாகி வருவதற்குக் காரணம் அளவுக்கு மீறிய சுயநலமும், ஆடம்பர ஆசையும், போலிப் பெருமை மீதுள்ள காதலாலும்தான்!

– பகுத்தறிவு, சுயமரியாதைப் பிரச்சாரமே ஒரே வழி! ‘படிக்காத’வர்களைத் திருத்துவது எளிது. ‘மேற்படியார்களை’ மாற்றுவது அவ்வளவு எளிதல்ல!

  • ••

கேள்வி 4: தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவராக வைத்திருக்கும் த.வெ.க. அரசு காவல் நிலையத்தில் யாகம், பூஜை நடத்தியது பற்றித் தங்களின் கருத்து?

– மாவீரன், மதுரை

பதில் 4: நமது கண்டனத்திற்குப் பிறகுதான் அந்த அதிகாரி வேறு பிரிவுக்கு – ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஜோசியமும், தந்தை பெரியார் கொள்கையும் எப்படி ஒத்துப் போக முடியும்?

  • ••

கேள்வி 5: கோயில் கூட்டங்களிலும், பிரபலங்களைப் பார்க்கும் ஆவலினாலும் தொடர்ந்து பல உயிரிழப்புகள் நடக்கின்றன. மக்கள் எப்போது கருத்தோடு, பகுத்தறிவோடு புரிந்து கொள்வார்கள்? இந்நிலை சரியாவதெப்போது?

– ஓவியன், அரும்பாக்கம்

பதில் 5: மக்களுக்குப் புத்தி வரும்போது; அந்தப் போதையை அன்றாடம் ஊட்டும் பணியை ஊடகங்கள்தான் தொடர்ந்து செய்து வருகின்றன – நோய்க்கிருமி பேரெச்சரிக்கை! நம் பணி பெரும் பணி!!

  • ••

கேள்வி 6: பெண் மாவட்ட ஆட்சியருக்கு த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் தவறான குறுஞ்செய்தி அனுப்பிய வழக்குக்கு சி.பி.அய். விசாரணை தேவையா?

– முத்து, பல்லாவரம்

பதில் 6: கட்டாயம் தேவை; காரணம் உள்ளூர் காவல்துறை, மற்ற துறை அதிகாரிகளை நம்பினால் என்ன பயன் கிட்டும்?

ஒரு தலைமைச் செயலாளரே 4 மாதம் ‘மவுன குரு’வாக இருக்கும் நிலையில், எந்த நியாயத்தைப் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி பெறமுடியும்?

எனவே, இதில் உண்மையான நீதி நிச்சயம் கிடைக்க வேண்டும்.

  • ••

கேள்வி 7: அமெரிக்கா – ஈரான் போர் முடிவுக்கு வருவது எப்பொழுது?

– மணி, செங்கல்பட்டு

பதில் 7: எப்போது அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சி முடிகிறதோ, அப்போது முடியலாம்.

  • ••

கேள்வி 8: திரைக்கலைஞர் விஜய்க்கும் – முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும் உள்ள வேறுபாடு என்ன?

– சங்கர், சேலம்

பதில் 8: உண்மைக்கும், ஒப்பனைக்கும் உள்ள வேறுபாடுதான்!

  • ••

கேள்வி 9: 94 வயது அகவை காணும் தாங்கள், இயக்கத் தோழர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் கூறும் செய்தி என்ன?

– கண்மணி, கன்னியாகுமரி

பதில் 9: பெரியார் வழி நின்று உண்மையான மானிடப் பற்றோடு, ஜாதி மத பேதங்களை, பெண்ணடிமை, மதவெறி தாங்கி சண்டையிடும் உலகத்தை மாற்றி புதியதோர் அறிவுலமாகிய சுயமரியாதை உலகு அமைக்க நாளும் முயலுங்கள் – முயலுவோம் என்பதே இந்த எளியவனின் வேண்டுகோள்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *