வியப்புக்குரிய வித்தகப் பிரதமர்! சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் நினைவு நாளில் – அவருக்குப் புகழ் வணக்கம்!

2 Min Read
- Advertisement -

இன்று (27.11.2026) சென்னை பெரியார் திடலில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் உருவப்படத்திற்குத் தோழர்கள் புடைசூழ கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் தூவி, வீர வணக்கம் செலுத்தினார். 

இந்திய அரசியல் வரலாற்றில் ஒப்புயர்வற்ற ஒரு பிரதமர் – மனிதநேயத்தின் உச்சி நமது வி.பி.சிங் அவர்களின் நினைவு நாள் இன்று (2008).

பதவிகளுக்கு ஆலாய்ப் பறக்கும் அரசியல் குப்பைக் கூளங்களிடையே ஜொலித்த ஒளிவீசும் வைரம் அவர்!

அவரது உறுதிமிக்க செயல்திறத்தால், இன்று இந்திய நாட்டின் கோடானுகோடி ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி உரிமையையும், ஒன்றிய அரசுத் துறைகளிலும் இடஒதுக்கீட்டின் மூலம் பணி உரிமையையும் பெற்று வாழுகின்றனர் – வழமைபோல் அவர்கள் நன்றி மறந்தாலும்கூட!

அவருக்கும், தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் உள்ள உறவு இன்றும் வரலாறாகவே – சமூகநீதி எதிரிகளுக்கு நெருஞ்சிமுள்ளாய்க் குத்துகிறது; குடைகிறது!

அதிலும், திராவிடர் கழகத்தின் மீதும், குறிப்பாக நம்மீதும் அவர் காட்டிய அன்பும், மரியாதையும் என்றென்றும் நெஞ்சைவிட்டு நீங்கா நினைவுகள்!

பழைய டில்லி ‘பெரியார் மய்யம்’ திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அத்வானி அரசுகளால் இடிக்கப்பட்டதைக் கண்டித்துக் கண்டனக் கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றபோது, அவர் முழங்கிய முழக்கம் நம் காதுகளில் இசையாய் ஒலித்துக்கொண்டே உள்ளது.

‘‘நான் வெளியே (டில்லியில்) இருந்திருப்பே னேயானால், ‘புல்டோசர்’ முன்பு மார்பை நிமிர்த்தித் தடுத்திருப்பேன்’’ என்றார்.

தமிழ்நாட்டுத் தலைவர்கள்கூட இந்த அளவு கூறவில்லையே!

அவர் ஒரு பல்கலைக் கொள்கலன்! வியப்புக்குரிய வித்தகச் செயல் பிரதமர்!

சமூகநீதிக்காக, மண்டல் பரிந்துரையைச் செயல்படுத்தியதால் தனது பிரதமர் பதவி பறிக்கப்பட்டது பற்றிக் கவலைப்படாமல், ‘‘கொள்கைக்காக, சமூகநீதிக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பதவி இழக்கத் தயார்’’ எனக் கூறி, ‘‘மண்டல் காற்று வீசுவதை எந்தச் சக்தியாலும் (எதிர்காலத்திலும்கூட) தடுத்திட முடியாது’’ என்று முழங்கி, புதிய வரலாற்றைப் படைத்தவர்.

தாய்க்கழகம் விடுத்த வேண்டுகோளின்படி, ‘திராவிட மாடல்’ ஆட்சியில் திராவிட நாயகர் மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் சரியான இடத்தில் அவருக்குச் சிலை நிறுவி, பெருமை சேர்த்தார்.

சமூகநீதிக் காவலர் மறையவில்லை; என்றும் வாழ்கிறார்!

 

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை         

26.11.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *