* ‘ஒரே நாடு, ஒரே மதம்’ என்போர், ‘ஒரே ஜாதி’ என்று சொல்லத் தயங்குவது ஏன்? ஜாதி ஒழிப்புப் போரில் எதையும் இழக்கத் தயார்!

- Advertisement -
* நவம்பர் 26 ஜாதியைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவை
திராவிடர் கழகம் கொளுத்தித் தண்டனை பெற்ற நாள்!

ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவை திராவிடர் கழகத்தினர் கொளுத்தி, இரண்டாண்டு வரை சிறை சென்ற நாள் (1957) இந்நாள்! ஜாதியை ஒழிக்கும் வரை எதையும் இழக்கத் தயார் என்று என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நவம்பர் 26 ஆம் நாள் என்பது, இந்தியாவின் ஜாதி ஒழிப்புச் சரித்திரத்தில் ஓர் ஒப்புயர்வற்ற நிகழ்வின் நினைவு நாளாகும்.

நமது இயக்க (திராவிடர் கழகம்) வரலாற்றில் ஒரு தலைமையின் எவருக்கும் வராத துணிவுக்கும், அதனை அப்படியே ஏற்றுத் தொண்டர்கள் – தோழர்கள் செய்த தியாகம் – உயிர்த் தியாகம் உள்பட  பின் வாழ்க்கையை வாழும்போது இழந்தாலும், மன உறுதி குலையாத கொள்கை இராணுவத்தின் போராட்ட உணர்வுக்கான பறைசாற்றும் நாளாகும்!

தீண்டாமைக்கு வேர் ஜாதிதானே!

  1. ஜாதியைப்பாதுகாக்கிறதுஇந்தியஅரசியலமைப்புச்சட்டம்; அதனைமாற்றி, ஜாதி ஒழிந்தது – அதை எந்த வடிவத்திலும் வைத்திருக்கக் கூடாது; அது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவிப்பதற்கு மாற்றாக, அன்றைய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் பெரும்பான்மையரான பூணூல் திருமேனிகள், அதன் தலைவர், பிறவி ஜாதி ஒழிப்பு வீரரான பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரையும் ஒதுக்கியதுபோல, ‘தீண்டாமை’ ஒழிக்கப்பட்டு விட்டது; அதை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும், அது குற்றம்’ என்ற ஒன்றைப் புகுத்தி, ஏமாற்றினார்கள். (கூறு 17).

‘தீண்டாமை’ என்பது தனியான ஒன்று அல்ல; அது ஜாதியின் விளைவுதான் – ஒருவரைத் ‘தீண்டாத்தகாதோர்’ என்றும், மற்றவரை ‘தீண்டும் ஜாதியினர்’ என்பதை எதை வைத்து நிர்ணயம் செய்கின்றனர். ஜாதியின் மூலத்தை வைத்துதான். ஆகவே, அதனைத் திருத்துங்கள்.

அதற்காக 15 நாள் அவகாசம் கொடுக்கிறோம்; இல்லையேல், அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஜாதிப் பாதுகாப்புப் பிரிவுகளை தனியே அச்சிட்டுக் கொளுத்துவோம் என்று எவருக்குமில்லாத துணிச்சலு டன் அறிவித்தவர், பிறவி சமத்துவப் போராளியான தந்தை பெரியார்!

அரசியலமைப்புச் சட்டத்தைக் கொளுத்தினால் மூன்றாண்டு
சிறைத் தண்டனையாம்!

ஆனால், அன்றைய (காங்கிரஸ்) ஒன்றிய அரசு, தீப்பொறியை அணைத்து, தீ பரவாமல் தடுப்பதை விட்டுவிட்டு, பொறியைப் பெருந்தீயாக ஆகும் வண்ணம் விசிறி விடுவதுபோல், அரசியலமைப்புச் சட்டத்தினைக் கொளுத்தினால், மூன்றாண்டு வரை சிறைத் தண்டனையும், பண அபராதமும் வரும் என்று அவசரச் சட்டம் (Ordinance) (Prevention of Insults to National Honour Act, 1957)   ஒன்றைச் செய்து, தங்களது மேல்ஜாதி உணர்வைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்தவுடன், தந்தை பெரியார் அவர்கள் விட்ட துணிவு அறிக்கை என்ன தெரியுமா, தோழர்களே?

ஜாதியை ஒழிக்க முன்வராமல், இப்படி ஜாதியைக் காப்பாற்றும் அரசியலமைப்புச் சட்ட எரிப்புக்கு எதிர்நிலை எடுத்த நான்,

“மூன்று ஆண்டுக்கோ, பத்து ஆண்டுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குத் தண்டனைக்கோ ஆளாக்கப்பட்டாலும் … அவைகளுக்குப் பயப்பட்டு என் இலட்சியத்தையோ, திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை.

கழகத் தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை. பயந்துவிட மாட்டீர்கள்! சட்டத்தைப் பார்த்துப் பயந்துவிட்டதாகப் பெயர் வாங்காதீர்கள்!

போராட்டம் திட்டமிட்டபடி நவம்பர் 26 (அன்றுதான் அரசியலமைப்புசு் சட்டம் அமுலான நாள்) அன்று திட்டமிட்டபடி அரசியலமைப்புச் சட்ட நகல் கொளுத்தப்படும்’’ என்று அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றபோது, எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான அறிஞர் அண்ணா, ‘‘தந்தை பெரியார் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான காரணத்தை ஆட்சியாளர்கள் அறிந்து, அதற்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், பெரியாரின் சீடர்கள் சட்டத்தைக் கண்டு அஞ்சிப் பின்வாங்க மாட்டார்கள்’’ என்பதையும் எடுத்துரைத்தார்.

கம்யூனிஸ்ட் தோழர் கல்யாண சுந்தரம், அரசிய லமைப்புச் சட்டத்தை எரிப்பவர்களை நாடு கடத்த வேண்டும்’’ என்று கூறி, அந்த அவசரச் சட்டத்தை ஆதரித்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தைக் கொளுத்தியோர் 10,000 பேர்

போராட்டத்தில், குடும்பம், குடும்பமாக பங்கேற்ற தொண்டர்கள்,  களப் போர் வீரர்களாகி, 10,000 பேர் முன்வந்து கொளுத்தினர், தமிழ்நாட்டில். அதில் 3,000 பேர் சிறைத் தண்டனை பெற்றனர். ஆறு மாத தண்டனை முதல் 2 ஆண்டு கடுங்காவல் வரை அனுபவித்தனர்.

அரசியலமைப்புச் சட்ட நகலைக் கொளுத்திய பின்பு, பல சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த  பட்டுக்கோட்டை இராமசாமி,மணல்மேடு வெள்ளைச்சாமி, லால்குடி நன்னிமங்கலம் கணேசன், வரகநேரி சின்னச்சாமி ஆகியோர் சிறையில் மடிந்தார்கள்.

குறிப்பாக, லால்குடி பகுதியிலிருந்து பங்கேற்ற தோழர்கள் 18, 20 பேர் உயிரிழந்தனர்.

அஞ்சாநெஞ்சர்களாக அவர்கள் சுயமரியாதைச் சுடரொளியாகி, என்றும் கொள்கை வெளிச்சச் சுடர்களாகி வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள்.

‘ஒரே நாடு, ஒரே மதம்’ என்போர்,
‘ஒரே ஜாதி’ என்று சொல்லத் தயங்குவது ஏன்?

இந்தியா விடுதலை பெற்று, 75 ஆண்டுகளுக்குமேல் ஆன நிலையில், ஒன்றிய பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். எப்படியோ பல ‘வித்தைகள்’  மூலம் ஆட்சியைப் பிடித்துள்ள அரசு, பிரதமர் மோடி, அவரது ஆட்சியில், ‘‘ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி’’ என்று குரல் எழுப்புகின்றனர். அவர்களைப் பார்தது நாம் கேட்ட கேள்வி ஒன்றே ஒன்றுதான்.

‘‘ஏன் ஒரே ஜாதி என்று சொல்லத் தயங்குகிறீர்கள்?’’ என்பதுதான்.

இன்றுவரை பதில் இல்லை. மாறாக, ஜாதி, மதத்தைப் பரப்பும் பணியில், அரசியலமைப்புசு் சட்ட விதிகளையே தூக்கி எறிந்துவிட்டு, ஆளும் அவலம் – ‘மதச்சார்பின்மை’ படும்பாடு ஒன்றே அதற்கு உதாரணம்.

முன்பு நமது ‘பாரத’ பூமியில் மட்டுமே இருந்த ஜாதி சுடுகாட்டுப் பேதம் – உலகளவு நிலையில் புலம்பெயர்ந்து சென்று வேறு கண்டங்களில் பணி புரிவோர் மத்தியிலும் இந்த ஜாதி வெறி நோய் ஆழமாகப் பரவ ஆரம்பித்துவிட்ட பேரபாயம், நாளும் வளர்ந்து வரும் மகாவெட்கக்கேடு.

  1. அமெரிக்காவில்,
  2. ஆஸ்திரேலியாவில்,
  3. கனடாவில்,
  4. மலேசியாவில்.

எப்படி கோவிட்–19, பன்றிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல் உலகளவில் பரவி, மக்களைப் பலி வாங்கு கிறதோ – அந்நோய் நாளும் வளருகிறதோ –அதுபோல ஜாதி நோய் பரவுகிறது. அதற்குச் சரியான மருந்து, பெரியார்– அம்பேத்கர் என்று புரிந்து, அதைத் தேடு கின்றனர், நாடுகின்றனர்!

பெரியார் உலக மயமாக வேண்டும், ஏன்?

ஏன் பெரியார் உலக மயமாகவேண்டும் – உலகம் பெரியார் மயமாகவேண்டும் என்று கூறி வருகி றோமென்று புரிகிறதா? இது அறிவியல் மருந்து தேவை போன்றதால், என்றும், எப்போதும், எங்கும் தேவைப்படுகின்றன!

அதற்கான விஷ ஊற்றுதான் ஹிந்து மத வேத, புராண, சாஸ்திர, கடவுள்கள் என்பதால், அவற்றைப் பேசவேண்டிய அவசியத்தை தந்தை பெரியாரும், அம்பேத்கரும், திராவிடர் கழகமும் ஈடுபடுகிறது!

இதற்காக களத்தில் நின்று, தங்களைத் தாங்களே எரித்து, இருட்டறையில் உள்ள உலகத்திற்கு, சிறிது சிறிதாக வெளிச்சத்தைத் தருகின்ற எமது
கருப்பு மெழுகுவத்திகளின் தொண்டுக்கு,

வீர வணக்கம்!! வீர வணக்கம்!! வீர வணக்கம்!!! என்று கூறி, ஜாதி ஒழிப்புப் போரில் நம்மையும் இணைத்து, அதற்காக எதையும் இழக்க என்றும் தயாராவோம் என்று சூளுரைத்து, சுயமரியாதை முழக்கம் செய்வோம்!

களங்காண அஞ்சா கடமை வீரர்களாக என்றும் இருப்போம் என்றே முழங்குவோம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை        

26.11.2026      

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *