சென்னை, பிப். 16- தி.மு.க.வின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான சத்தியவாணி முத்துவின் நூறாவது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் திமுக தலை வரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சமூக வலைத் தளப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திராவிட இயக்கத்தின் நன் முத்து, கழகத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர், மாநிலத் திலும் ஒன்றிய அரசிலும் அமைச்சர், ஆதி திராவிட மக்களின் தன்மானம் காத்த போராளி சத்தியவாணிமுத்து அம்மையார் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளில் அவரது சலியா உழைப்பையும் உறுதியையும் போற்றுகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் சத்தியவாணி முத்துவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றையும் தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது, அதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப கால உறுப்பினராக – கழகத்தின் கொள்கை விளக்கச் செயலா ளராக – அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் அமைச்சரவையில் செய்தித்துறை அமைச் சராகவும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சத்தியவாணி முத்து அம்மையார் அவர் களின் நூற்றாண்டு பிறந்தநாள் இன்று (15.2.2023).
திராவிட பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு – அடித்தட்டு மக்களின் சமூக நீதிக்காக – அவர்களின் உரிமைகளுக்காக வாதாடிய, போராடிய அம்மையார் அவர்களுக்கு, வருகின்ற 19.2.2023 (ஞாயிறு) அன்று சென்னையில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கத்தில் மாலை 6.00 மணி அளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி சார்பில் நூற்றாண்டு விழா சிறப்பு கூட்டம் நடைபெறும்.