சேலத்தில் 7,500 மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.75 கோடி மோசடி

- Advertisement -

சின்னதிருப்பதி, நவ.16- சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி, சின்ன திருப்பதி பகுதிகளைச் சேர்ந்த சிலர், தாங்கள் சமூக சேவை செய்யும் பெஸ்ட் எம்பவர்மென்ட் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருவதாகக் கூறி சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களைக் குறிவைத்து வலை விரித்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளிலிருந்து தங்களின் டிரஸ்ட்டுக்கு வரும் நிதியை நேரடியாக வங்கிக் கணக்கில் பெற முடியவில்லை எனவும், கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து எடுத்துக் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் தருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

இதனை நம்பிய ஆயிரக் கணக்கான மாணவர்கள் தங்களின் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அந்தக் கும்பலிடம் கொடுத்திருக்கிறார்கள். ஆவணங்களை வாங்கிய அந்த மோசடி கும்பல், வங்கி அதிகாரிகள் சிலரின் துணையோடு மாணவர்களுக்கே தெரியாமல் தனியார் வங்கிகளில் `பசுமாடு வளர்ப்பு மற்றும் விவசாயக் கடன்’ என்ற பெயரில் தலா ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கியிருக்கிறது.

மாணவர்களின் வங்கிக் கணக்கில் வங்கியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கடன் தொகை வந்திருக்கிறது. ஆனால், டிரஸ்ட் பணம் வந்ததாகக் கூறி ஆயிரம் ரூபாய் கமிஷன் கொடுத்து விட்டு மொத்த பணத்தையும் வேறொரு வங்கிக் கணக்கிற்குப் பெற்றிருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாகச் சத்தமின்றி இந்த மோசடி நடந்து வந்திருக்கிறது.

வங்கிகளிலிருந்து சம்மந்தப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்குக் கடன் தொகை குறித்து தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. இதைப் பார்த்து பதறிய மாணவர்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந் திருக்கிறார்கள். அந்த அறக்கட்டளை நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களோ ரவுடிகளை வைத்து மாணவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்த நிலையில், சேலம் அம்மாப் பேட்டையைச் சேர்ந்த முஷ்ரப் பாட்சா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திரண்டு புகார் அளித்துள்ளனர். மாணவர்களின் புகாரின் அடிப்படையில் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

விசாரணையில், மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 7,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார் ரூ.75 கோடி வரை கடன் மோசடி அரங்கேறியிருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது .

இதையடுத்து, இந்த மோசடியில் ஈடுபட்ட சின்ன திருப்பதியைச் சேர்ந்த கண்ணகி (45), அவரின் கூட்டாளி முத்துக்குமரன் (36) ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மோனிஷா உள்ளிட்ட மேலும் சிலரையும், போலி ஆவணங் களுக்குத் துணைபோன வங்கி அதிகாரிகளையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *