உலகில் யார் யார் அடாத வழியில் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம், மற்றவர்கள், அந்த வழியை, அக்கிரமமான அடாதவழி என்று உணர்ந்து கொண்டு, அந்த வழி கூடாது! என்று உரத்த குரலிலே ஓங்கிக் கூறுவது கேட்டுப் பெருங்கஷ்டமாக – சகிக்க முடியாததாக இருக்கலாம். ஆனால், விழிப்புணர்ச்சி வினையாற்றத் தொடங்கிவிட்டால், விபரீத நடத்தையாளர்கள் அவற்றை விட்டுவிடவேண்டும்; இன்றேல் விரைவாகவே ஒழிந்துபட வேண்டும் என்பது, வெகு வெகு நீண்ட காலமாகவே சரிதம் கூறிவரும் உண்மை. உழைக்காமலிருந்து கொண்டே, உல்லாச வாழ்வு வாழ வேண்டும் என்றெண்ணுகிறவர்கள் அல்லது அந்த முறையில் பழகியவர்கள் அல்லது அப்படிப் பழக்கப்படுத்தப்பட்டவர்கள் ஆகிய இந்த ஒருவகையார்தான் சமுதாய ஒழுங்குக்கு – சமாதானத்திற்கு வைரிகள், அவற்றை விரட்டியடிக்கும் விஷக் கிருமிகள் என்பதை உலக முழுவதுமே உணரத் தலைப்பட்டு விட்டது; அதுமட்டுமல்ல ஒழிக்கவும் தலைப்பட்டுவிட்டது.
இந்த உல்லாசபுரியினருக்கு அன்று தொட்டு இன்றுவரை, அவர்களின் உல்லாசபுரி ஒழிந்து விடாவண்ணம் பாதுகாத்துவரும் அரண்கள் பலவுண்டு என்றாலும், முக்கியமாக – அழிப்பதற்கு அரும்பாடுபட வேண்டியதாக இருந்து வருவது மதம், அதையொட்டிய பழக்க வழக்கம். இந்தப் பழக்க வழக்கங்களில் ஒரு சிறு மாற்றம் என்றால்கூட இவர்களால் சகிக்க முடியாது. சீறிப்பாயத்தான் செய்வர். பின், மதத்தில் ஏதேனும் மாறுதல் என்றால், மதம் மடிய வேண்டும் என்றால் இவர்களின் கொடூரச் செயல்களுக்கு ஒரு எல்லைகட்ட முடியுமா?
இவ்வளவு கொடுமைகளுக்கும் பலி கொடுத்து கொடுமையைக் குழிதோண்டிப் புதைத்து விட்டோம் – குழி தோண்டிக் கொண்டிருக்கிறோம் – குழி பறிக்கவில்லை என்றாலும் நடைப் பிணமாக்கிவிட்டோம் என்று கூறுகிறது மேலை நாடு.
ஆனால், கீழ் நாட்டின் நிலை என்ன? குறிப்பாக நம் நாட்டின் நிலை என்ன? மடமையில் பிறந்து வளரும் மதம், காலத்திற்குக் காலம் மெருகிடப்பட்டு வருகிறது என்று சொல்லக்கூடிய நிலையில், மிருகவுணர்ச்சியில் பிறந்து வெறியைத் துணையாகக் கொண்டிருக்கும் மதத்தினால் விளைந்து வந்திருக்கும் கேடுகளைப் பற்றி, நம்மைப்போல் எந்தவகைக் கேடுகளையும் சமாளித்துச் சிலர் கூறிவரும்போது நமக்குக் கிடைக்கும் பரிசென்ன? மதத் துவேஷி! வகுப்புத் துவேஷி! பார்ப்பனத் துவேஷி! என்கிற இவைகள்தான்.
மதத்துவேஷி என்று மதத்தினால் லாபம் அடைகிறவன் சொல்லுவதையோ, வகுப்புத் துவேஷி என்று வகுப்பினால் தனி நன்மை அடைகிறவன் சொல்லுவதையோ, பார்ப்பனத் துவேஷி என்று பார்ப்பனியமே மூலதனமாகக் கருதி வாழும் பார்ப்பனர்கள் சொல் வதையோ நாம் குறைகூறவில்லை. அவர்கள் அப்படித் தான் சொல்லியாக வேண்டும். மேலும், அதை எவரும் எதிர்பார்க்கத்தான் வேண்டும். ஆனால் நடப்பு எப்படி?
மதத்தால் வாழ்வை இழந்து, வகுப்பால் வளப்பத்தைப் பறிகொடுத்து, பார்ப்பனியத்தால் பஞ்சைகளாகி விட்ட கூட்டத்திலிருந்தும் நமக்கு மேற்கண்ட பரிசுகள் தரப்படுகின்றன. இதற்குக் காரணமென்ன?
வெறும் “அடிமை மோகம்” என்பதோ, “கழுத்தில் நுகத்தடி ஏறினால் நடந்த தடம் தவிர வேறு தடம் இல்லையென்று நம்பும் செக்குமாடுகள்” என்கிற பேச்சோ முற்றிலும் பொருந்தாது. அடிமைகள் அடிமைகளே அல்ல, அவர்களுக்கும், ஆளும் உரிமையுமுண்டு என்று முழக்கப்படுகிற காலமிது. இந்தக்காலத்தில் அடிமை மோகம் “செக்கு மாடுகள்” என்றே சொல்லிவிட முடியுமா? “அடிமை மோகம்” உடையவர்களாகப் பெருங்கூட்டத்தினரை அழுத்தி வைப்பதினால்தான், செக்கு மாடுகளாகப் பிறரைச் சுற்றச் செய்வதினால்தான், தங்களின் நியாயமான விகிதாச்சாரத்தைக் காட்டிலும் அதிகப் பங்கு அடைய முடியும் என்று நம்புகிற மற்றொரு சிறுகூட்டம் அடிமை உலகிலிருந்து முளைத்து விடுகிறது என்கிற உண்மையை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதாயிருக்கிறது.
ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்படும் பெருங்கூட்டத்தினரை – அக்கிரமத்திற்கு ஆளானோரைக் குப்பை கூளங்களாகப் பெருக்கித் தள்ளுவதற்குக் கூட்டுமாறாகப் பயன்படுகிறது இச்சிறுகூட்டம். விளக்க மாற்றுக்குப் (கிழிந்த) பட்டுக்குஞ்சம் கட்டினதுபோல,
இந்தச் சிறுகூட்டமும் சமுதாய உழைப்பை உறிஞ்சும் சழக்கர்களால், தனக்கடங்கிய அதிகாரம் என்கிற பட்டுக் குஞ்சம் கட்டப்பட்டுவிடுகிறது. இதனால், ஒடுக்கப்பட்ட கூட்டம் உரிமை உணர்வு பீறிட்டெழச் செயலாற்றும்போது, ஒடுக்கப்பட்ட கூட்டத்திலிருந்தே எதிர்ப்பும், ஒழிப்புவேலையும் தொடங்கப்படுகின்றன. இதை நாம் எப்படித்தான் எடுத்துக் கூறினாலும், உணராதவர்கள் போல நடித்து வருகிறார்கள் நம் திராவிட தேசியத் தோழர்கள்; நடிப்பைக் கைவிட்டு, நடப்பில் கவனத்தைச் செலுத்தட்டும் என்பதே நம் ஆசை! அந்த ஆசையின் மீது இன்று ஒரு நடப்பை எடுத்துக்காட்டுகிறோம்.
இந்து மத – மட நிர்வாகம் பற்றிய மசோதா, இன்று ஆளவந்தவர்களான காங்கிரஸ் மந்திரிகளால் கொண்டுவரப்பட்டிருக்கிறது. உண்மையைக் கூற வேண்டுமானால், பார்ப்பனர்களின் பேரெதிர்ப்புக் கிடையே முன்பு பனகல் அரசர் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கும் மதஸ்தாபனப் பாதுகாப்புச் சட்டத்தில், ஒரு திருத்தம் என்றுதான் இதைக் கூறவேண்டும். இதனைக் கொண்டு வந்திருப்பவர்கள், பொதுவாகக் காங்கிரஸ் மந்திரிகள் என்று சொல்வதைக் காட்டிலும், முதன் மந்திரி ஓமந்தூரார் என்று கூறுவதே பொருத்தமாகும்.
விரதானுஷ்டங்களைப் பின்பற்றி மேனியை வாட்டி வதக்கி வருபவர் நம் ஓமந்தூரார். குருவிலும் உத்தமோத்தமமான குரு, பார்ப்பனக் குருவே என்பதைக் கண்டுபிடித்து அவர் பாத பூஜை பண்ணும் பக்த சிரோன்மணியாய் விளங்குபவர் நம் ஓமந்தூரார். “ஆண்டவர்கள்” திருவுருவுகளை அவர் அடியவர்கள் வேஷம் போட்டு நடிப்பதைக் கண்டு, அடுக்காது! அடுக்காது!! என்று கூவிஅலறித் துடிதுடிக்கும் அரும்பெரும் குணத்தினரவர். இவருடைய மதபக்திக்கு முன்பு, வேறு எவருடைய பக்தியாயிருந்தாலும், அது கால்மாத்து அரைமாத்துக் குறைச்சலாகத்தான் இருக்க வேண்டும் என்பது, பக்தி வியாபாரிகளால் தேய்த்துப் பார்த்துச் சொல்லப்பட்டிருக்கும் தீர்ப்பு! இப்பேர்ப்பட்ட ஆஸ்திக சிரோன்மணியால் கொண்டுவரப்பட்டிருக்கும் இதனைக் கண்டுதான், இன்று பார்ப்பனர்கள், மதத்திற்கு ஆபத்து, இது அக்கிரமக் குறுக்கீடு என்றெல்லாம் கதறுகிறார்கள்.
நாட்டிலுள்ள கோவில்கள், மடங்கள், மற்றும் மத வளர்ச்சிக்கான பிரசாரக் கழகங்கள் போன்றவைகள் மதஸ்தாபனங்கள். இந்த மதஸ்தாபனங்களில், லட்சக் கணக்கில் கோவில் களிருந்தாலும், நூற்றுக்கணக்கான கோவில்களையும், விரல்விட்டு எண்ணக்கூடிய சில மடங்களையும் பற்றியதுதான் இந்த மசோதா.
இன்னும் சொல்லப்போனால் இந்த நூற்றுக்கணக்கான கோவில்களுக்கு வந்து கொண்டிருக்கும் வருமானத் தையும், சில மடங்களுக்கு வந்து கொண்டிருக்கும் வருமானத்தையும், எப்படி நிர்வகிக்க வேண்டும்? அந்தப் பொருள் எப்படிச் செலவழிக்கப்பட வேண்டும்? என்கிற விஷயத்தில் அரசாங்கத்திற்கு முழு உரிமையுண்டு என்பதை நிலைநாட்டுவதுதான் இந்த மசோதா. மேலும், இந்த மதஸ்தாபனங்கள் நூற்றுக்கணக்கான வருஷங்களாகச், சிலரின் ஏகபோக மிராசுஆகிக் கேள்வி கேட்பாடு இல்லாத நிலையில், மரகதக் கிண்ணத்தில் மது அருந்துவதற்கும், விதவிதமான மாதர் ரகங்களோடு குலாவுவதற்கும், வயிற்றுப் பெருச்சாளிகளின் தொந்தி வாடாமலிருப்பதற்காகவுமே பயன்பட்டு வந்திருக்கிறது என்கிற மக்களின் அழுகையும் ஆத்திரமுமே இந்த மசோதா!
இதைக்கண்டா இந்தக் கதறல்? இதுவா மதத்திற்கு ஆபத்து? அக்கிரமக்குறுக்கீடு? எண்ணிப் பார்க்கட்டும் நம் திராவிட தேசியத் தோழர்கள்! மடங்களுக்கும் சில கோவில்களுக்கும், வரையறையில்லாத செல்வம் வளர வழி ஏற்பட்டிருக்கின்ற தென்றால், அதற்குக் காரணமென்ன? உழைப்பின் உருமாற்றமான செல்வம், உழைப்பே இல்லாத இந்த ஸ்தாபனங்களுக்கு எப்படி வந்து குவிகின்றன? ஆதிக்கக்காரர்களின் ஆஷாட பூதிவேஷங்களும், தந்திரமிக்க சாகசப் பேச்சுகளும் கருவிகளாக நிற்க, உழைக்கும் மக்களின் பேதைமை – உளுத்துப்போன மனத்தின் அச்சம் ஆகிய இவைகளல்லவா இந்த ஸ்தாபனங்களுக்குச் செல்வத்தைச் சேர்ப்பிக்கும் வாய்க்கால்கள்.
மக்களால் சேரும் பணத்தைப் பின் மக்களுக்காகச் செலவிடப் படவேண்டிய நேரத்தில், மக்கள் ஆட்சி அதில் தலையிடுவதா அக்கிரமக்குறுக்கீடு? மதச்சார்பற்ற ஆட்சி என்று கூறுவது உண்மையென்றால், மக்களை ஆளும் சர்க்கார், மக்களுக்காக என்று சொல்லப்படும் மதநிர்வாகத்தில், பூரணமாகத் தலையிட வேண்டியதே நியாயம். மத நிர்வாகம் என்கிற பெயரால், தேவையில்லாத வழிகளால் செலவழிக்கப்படும் செல்வத் திற்குத் தேவையையும், பயனையும் கண்டே செலவு செய்யவேண்டும் என்று வரையறை செய்வதே நியாயம். அரசமரத்தடிப் பிள்ளையாரும் தெய்வம்தான், ஆயிரங்கால் மண்டபங்களோடு பெரிய கோட்டை கொத்தளங்களை எழுப்பி அவற்றில் குடி வாழ்வதும் தெய்வம்தான் என்கிற உறுதி வழிபாடு செய்பவர்களுக்குள் இருந்தால், இந்த இரண்டு தெய்வங்களுக்குள் ஏன் இந்த வித்தியாசம்? என்றுதான் கேட்கப்படும் மதமற்ற சர்க்காரால்.
அரசமரத்தடிப் பிள்ளையார் அரைக்காசு, ஒரு காசு செலவு செய்வதோடு, அது தெய்வத் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு விடுகிறதென்றால், ஆயிரங்கால் மண்டபத்தானுக்கு மட்டும் அதன் தெய்வத்தன்மையைக் காப்பாற்ற ஆயிரம் ஆயிரமாக ஏன் செலவு செய்யப்பட வேண்டும்? என்று கேட்பதுதான் மதச்சார்பற்ற மக்களாட்சியின் கடன். இன்னும் ஒருபடி மேல்சென்று கூறவேண்டுமென்றால், ஒவ்வொரு ஊரிலும் எத்தனை மக்கள் கோவிலுக்குப் போகிறார்கள்? அந்தக்கோவில் எந்த அளவு விஸ்தீரணமாயிருக்க வேண்டும்? கோவிலில் குடியேறியிருக்கும் தெய்வங்களுக்கு எது எது அத்தியாவசியமான செலவுகள்? இந்த ஏற்பாட்டில் அதற்கு வருகின்ற வருமானம் எவ்வளவு? என்பவைகளையெல்லாம் கணக்கிட்டு, அந்தக் கணக்குப்படி செய்வதுதான் மதச்சார்பற்ற மக்களாட்சி என்று சொல்வதற்கு அழகு!
மசோதாவைக் கொண்டு வந்திருப்போர், தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், சொல்லிக் கொள்வதற்கேற்றபடி மசோதா இல்லை. தானினைத்த மூப்பாக ஒவ்வொரு காரியத்தையும் செய்யாமல், தம்மையும் கலந்து கொண்டு செய்ய வேண்டும்மென்று ஆதிக்கவாதிகளை வேண்டுவதுதான் இந்த மசோதா. அப்படியிருந்தும், நாம் இந்த மசோதாவை வரவேற்கிறோம், இதைச் சட்டமாக்க வேண்டுமென்ற காங்கிரஸ் தோழர்களைப் பாராட்டுகிறோம். ஏன்? தேசியத் தோழர்கள் சிந்திக்கட்டும்!
காந்தியார் பெயரைக் கூறிக் காசு பறிக்கப் புதுவழி கண்டுபிடித்திருக்கும் தேசியப் பார்ப்பனர்கள், எதற்கெடுத்தாலும், “காந்தியார் அப்படிக் கூறினார், இப்படிக் கூறினார்” என்று கூறுவதுதான் வழக்கம். அப்படிக் கூறிவரும் பார்ப்பனர்கள், இந்த விஷயத்தில் மட்டும் காந்தியாரைக் கீழே போட்டு விடுவதற்குக் காரணமென்ன? தென்னாட்டுக் கோவில்களை விபசார விடுதி என்றார் காந்தியார்!
அவர் மடங்களைப் பார்க்கவுமில்லை, தென்னாட்டு மடங்களைப் பற்றித் தனியாக அபிப்பிராயம் கூறவுமில்லை. கோவில்கள் விபசார விடுதிகள் என்றால், மடங்கள் விபசாரப் பண்ணைகள் என்பதும், வன்னெஞ்சர்களின் கொலைக்களம் என்பதுதான், அவர் அபிப்பிராயம் கூறியிருந்தால் கூறியிருக்க முடியும் என்பது நமது கருத்து. அன்று அவர் கூறியபோது இருந்த கோவில்களின் நிலைமைக்கும், இன்றைய நிலைக்கும் என்ன வித்தியாசம்? என்பதைக் கேட்கவேண்டும் நம் திராவிடத் தேசியர்கள்!
ஒரு துண்டுக் கறிக்காக, ஓங்கி ஓங்கிக் குரைக்கும் பிராணியைப் போல, அவ்வளவு நன்றி விசுவாசத்துடன் இல்லாவிட்டாலும், இந்தப் பிரச்சினையில், வாங்குகிற கூலிக்காகவேனும் வரட்டுக்கூச்சல் போடவேண்டியதுதான் வக்கீல் களின் வேலை என்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், காந்திய வழி என்று கூறும் தேசியப் பார்ப்பனர்கள் இதைக் கண்டு ஏன் சீறி விழவேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும் திராவிடத் தேசியர்கள்!
மத வளர்ச்சிக்குப் பாதகமாகவோ, மதக் கொள்கை களுக்கு முரணாகவோ இல்லாமல், மத நிலையங்களுக்கு வரும் வருமானத்தைச் செலவை நிர்வகிக்கச் சர்க்கார் முன்வரும் இந்தச் செயல், மதத்தையொட்டி நடந்துவந்த மதஆதிக்கக்காரர்களின் பழக்க வழக்கங்களை ஓரளவு மாற்றுவதென்பதுதான் கருத்தாக இருக்கும் போது, மதத்துக்கு ஆபத்து! என்று பார்ப்பனர்கள் கூச்சல்போடுவதில் ஏதேனும் அர்த்தமிருக்கிறதா? என்பதை எண்ணிப்பார்க்கட்டும் நம் தேசியத் திராவிடர்கள்!
இப்படியாக, மதப் பெயரால் அவர்கள் வாழ்ந்து வந்த வாழ்வுக்கு, ஏதோ ஒரு சிறு வகையில் மாறுதல் என்றால்கூட, வைதீகப் பார்ப்பனரிலிருந்து வக்கீல் பார்ப்பனர்கள் வரை, கல்லைச் சுரண்டும் பார்ப்பனரிலிருந்து காபிகிளப் பார்ப்பனர்கள் வரை, எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு ஓலமிட வந்து விடுகிற உண்மையை, உணர மறுக்கலாமா? என்று தான் நாம் காங்கிரஸ் திராவிடத் தோழர்களைக் கேட்கிறோம்.
அக்கிரமமான நடத்தையால் வாழ்ந்து வரும் மத ஆதிக்கக்காரர்கள், தங்கள் ஆதிக்கத்திற்குச் சற்று அசைவு ஏற்பட்டால்கூட, மதத்துவேஷம்! மதத்திற்கு ஆபத்து! என்றெல்லாம் கூச்சல் போட்டு விடுகிறார்கள் என்பதை உணர்ந்தால்,பின்னும், இந்தப் பார்ப்பனர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு நம்மைப் பார்ப்பனத் துவேஷி என்றோ, வகுப்புத் துவேஷி என்றோ, மதத்துவேஷி என்றோ கூறுவதில் ஏதேனும் நாணயமோ – யோக்கியதையோ இருக்கிறதா என்றுதான் நாம் தேசியத் திராவிடர்களைக் கேட்கிறோம். இந்தத் திருத்த மசோதாவினால், மத ஸ்தாபனச் சொத்துக்களினால் மக்கள் அடையவேண்டிய நன்மை எவையோ, அவ்வெல்லாமுமே விளைந்து விடாது என்பதுறுதி. ஏதோ மிக மிகச் சிறிய ஒரு பகுதியாவது, மக்கள் நன்மைக்கான வழியிலும் செலவு செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பதினால் தான் நாம் இதை வரவேற்கிறோம்.
உண்மையாய், நாளைக்கு நடக்கப் போவதுமிதுதான். இந்த அளவுக்குக்கூட இந்நாட்டு மதஆதிபத்தியக்காரர்கள் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை என்றால், இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு, இவர்களின் புத்திமதிப்படி நடக்கலாமா நம் தேசியத் தோழர்கள் என்பதுதான் நம் கேள்வி!
இன்றைய மந்திரி சபையினர், “சூத்திரர்களே” நிறைந்தது. இவர்களுக்கு இவ்வளவு திமிரா? என்பதுதான் பார்ப்பனர்களின் குமுறல். இந்தக் குமுறலைச் சுதேசமித்திரன் எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதையும் இங்கு எடுத்துக்காட்டுகிறோம்.
மத ஸ்தாபனங்களில் ஊழல் இல்லை என்று சொல்ல முடியாதாம். ஊழல் இருக்கத்தான் செய்கிறதாம். அவற்றை ஒழிக்க வேண்டியதுதானாம். ஆனால் யார் ஒழிப்பது? என்று கேட்கும் மித்திரன் “இந்து மத வளர்ச்சியில் அந்தரங்கமான அக்கறையும், அதற்கான அறிவாற்றலும் கொண்ட இந்துமதப் பிரமுகர்கள் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ள வேண்டிய வேலை இது” என்று கூறுகிறது!
இதற்கு என்ன அர்த்தம் என்று நாம் தேசியத் தோழர்களைக் கேட்கிறோம். மத வளர்ச்சியில் அந்தரங்கமான அக்கறை என்பதற்கு என்ன அருத்தம்? அதற்கான அறிவு எது? ஆற்றல் எது? அதைச் செய்யவல்ல இந்துப் பிரமுகர்கள் என்பவர்கள் யார்? இக்காரியத்தை ஏன் தனிப்பட்ட முறையில் செய்யவேண்டும்?
மத வளர்ச்சியில் பார்ப்பனர்களைத் தவிர, வேறு யாருக்கும் அக்கறை இருக்க முடியாது, அக்கறை காணப்பட்டாலும் அது அந்தரங்கமானதாய் இருக்க முடியாது என்பதுதானே இதன் கருத்து! மத வளர்ச்சிக்கான அறிவு, வேத அறிவுதான் என்பதும் வேதியர்களின் ஆற்றல் ஒன்றுதான் இதை வினைப்படுத்த முடியும் என்பதுதானே இதன் கருத்து! இல்லாவிட்டால் இந்துப் பிரமுகர்கள் என்பதற்கும், இதனைத் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டும் என்பதற்கும் வேறு என்ன கருத்துச் சொல்லிவிட முடியும்?
இந்த மசோதாவை நிறைவேற்றுவதாய் இருந்தால், மறுதேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறது மித்திரன். ஏனெனில், ஆட்சியைக் கைப்பற்றும் முன்பு, இப்போது அதிகாரத்தில் உள்ளவர்கள், இப்படியெல்லாம் செய்வதற்கு வாக்காளர்களிடமிருந்து அனுமதி பெறவில்லையா?அடடா என்ன ஜனநாயகம்!
இந்த ஜனநாயகத்தை ஏன் மற்ற செயல்களில் காட்ட முன்வரவில்லை மித்திரன் கும்பல்? முக்கியமாக, எது எக்கேடுகெட்டாலும் நான் போய்த்தான் தீருவேன் என்று வெள்ளையன் கூறுவான் என்பதை எதிர்பாராத காங்கிரஸ் தோழர்கள், அவன் வெளியேறிய பின்பு, இந்த நாட்டின் தலையெழுத்தை எழுதுவது மாற்றப்பட்ட சட்டசபையிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட அதன் அங்கத்தினர்கள் என்று கூறி, அதற்கு அரசியல் நிர்ணயசபை என்று பெயர் கூறியபோது, இந்த ஜனநாயக உணர்ச்சி எங்கே பறந்துபோய்விட்டது?
எதேச்சாதிகாரமாய்ச் செய்யப்பட்ட இந்த அரசியல் நிர்ணய சபையினர், எதேச்சாதிகாரிகளுக்கு ஏவலாளர்களாயிருந்து நிறைவேற்றியிருக்கும் பிரகடனத்தை எடுத்துக்காட்டி, அதற்கு விரோதம் இந்த மசோதா என்கிறது மித்திரன். “கொள் என்றால் வாயைத் திறப்பதும், கடிவாளம் என்றால் வாயை மூடுவதும் தானே” இந்தப்போக்கு.
பார்ப்பனர்களின் கூச்சல், இன்னும் எந்தெந்த இடங்களில் ஒலிக்கும்? இனாம் ஒழிப்பை நிறுத்தி, வெற்றிக்கொடி நாட்டிக் காங்கிரஸ் கட்சியினர் பெரும் மெஜாரிட்டியினராய் நிறைவேற்றியிருந்தும் அதை ஒழித்துக்கட்டிய தர்ப்பாசூரர்கள், இதில் எப்படியெல்லாம் நடந்து கொள்ளுவார்கள் என்று, யார்தான் எதிர்பார்த்து வரையறை காட்டமுடியும்?
அக்கிரகாரத்தின் கட்டுப்பாடான இந்தப் போக்கு, நம் தேசியத் திராவிடத் தோழர்களின் கண்களைத் திறந்து விடுமானால் அது போதும்! அதற்காகவே நாம் இவ்வளவு தூரம் இதை விளக்கிக் கூறினோம்! ஆனால் கண்திறக்குமா?
குடிஅரசு – தலையங்கம் – 29.01.1949
(குறிப்பு : ‘மித்திரன்’ என்று குறிப்பிடுவது ‘சுதேசமித்திரன்’ நாளேடு)