சென்னை, பிப்.19 உத்தரப் பிரதேசத்தில் ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் கீழ் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் சில கல்வி நிறுவனங்கள் போலியான மாணவ, மாணவிகளின் பெயரில் உதவித் தொகையைப் பெற்று மோசடி செய்து வருவதை அமலாக்கத் துறை கண்டுபிடித்தது.
இதைத் தொடர்ந்து உத்தர பிரதேச தலைநகர் லக்னோ உட்பட 22 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 17.2.2023 அன்று சோதனை நடத்தினர்.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: உ.பி.யின் பல கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையின மாணவ, மாணவியரின் கல்வி உதவித் தொகையில் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. முதல் கட்டவிசாரணையில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.அதாவது 7 வயதுடைய குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பெயர்களில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு மோசடியாக பணம் பெறப்பட்டிருக்கிறது.
கல்வி உதவித் தொகை மோசடி தொடர்பாக சுமார் 3,000 வங்கிக் கணக்குகளை அடையாளம் கண்டுள்ளோம். அந்த வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறினர்