எல்லா இடங்களிலும் பொதுமக்களின் வரவேற்பு மிகச் சிறப்பாக இருக்கிறது
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு – அறப்போருக்கு மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்!
சேலம், பிப்.20 இரண்டாம் கட்ட பரப்புரை பயணம் நிறைவு: எல்லா இடங்களிலும் பொதுமக்களின் வரவேற்பு மிகச் சிறப்பாக இருக்கிறது; பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு – அறப்போருக்கு மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைக் கூட்டம் இரண்டாம் கட்டம் முடிவடைந்ததையொட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சேலத்தில் ஃபேஸ்புக் நேரலையில் இன்று (20.2.2023). பேட்டியளித்தார்.
அவரது கருத்து வருமாறு:
மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது?
கேள்வி: நான்கு கட்ட சுற்றுப்பயணத்தில் இரண்டு கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டீர்கள். மக்களிடையே இதற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
தமிழர் தலைவர்: மிகச் சிறப்பாக இருக்கிறது. எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே பொதுமக்கள் அனைவரும் கூடுகிறார்கள்.
முதல் கூட்டம் மாலை நேரத்தில் தொடங்கி நடைபெறுகிறது. வழக்கமாக சிறப்புப் பேச்சாளர்
8 மணியளவிற்குத் தானே உரையாற்றுவார் என்று நினைத்து பல பேர் ஏன் இவ்வளவு சீக்கிரமாகவே உரையாற்றிவிட்டுப் புறப்படுகிறாரே, என்று கேட்கக் கூடிய நிலை.
மக்களுக்குப் பனி; எங்களுக்குப் பணி!
இரண்டாவது கூட்டத்தில், ஏராளமான மக்கள் திரண்டிருந்தாலும், இப்பொழுது பனிப் பொழிவு அதிகமாக இருக்கிறது; அதிலும் இந்தப் பகுதியில் மிக அதிகமான பனிப் பொழிவு. நான்கூட கூட்டத் தில் உரையாற்றும்பொழுது ‘’உங்களுக்குப் பனி; எங்களுக்குப் பணி’’ என்று வேடிக்கையாக சொன்னேன். அதை மக்கள் மிகவும் ரசித்துக் கேட்டனர்.
கூட்டணிக் கட்சித் தோழர்கள், கட்சி சாராத பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு கொடுக்கிறார்கள். ஊடகங்களும் சிறப்பாக பதிவு செய்து, செய்திகளை வெளியிடுகின்றன. இந்தச் சுற்றுப்பயணம் எதிர் பார்த்ததற்குமேல் வெற்றி. நாங்கள் 50 விழுக்காடு வெற்றி பெற்றிருக் கிறோம்; இன்னொரு 50 விழுக் காடும் வெற்றி பெற்று, 100-க்கு 100 வெற்றி பெறக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துவோம்.
எங்கள் இலக்கை நோக்கி வேக வேகமாகப் போய்க் கொண்டிருக்கின்றோம்!
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்றவேண்டும் என்ற இலக்கை நோக்கி நாங்கள் வேக வேகமாகப் போய்க் கொண்டிருக்கின்றோம்.
நரிமணம் பெட்ரோல் திட்டம், நெய்வேலி நிலக்கரி ராயல்டி பெறுவதில் வெற்றி பெற்றதுபோல, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமும் நிறைவேறும். இட ஒதுக்கீடும் பாதுகாக்கப்படும். திராவிட மாடல் ஆட்சியின் சிறப்புகளை விளக்கிச் சொல்லும்பொழுது பொதுமக்கள் மிகவும் ரசித்துக் கேட்கிறார்கள். அதைத் தொடர்ந்து எல்லா கூட்டங்களிலும் பேசி வருகிறோம்.
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்!
ஆளுநர் போன்றவர்களின் அக்கிரமங்களை பொதுக்கூட்டங்களில் எடுத்துச் சொல்லும்பொழுது, அதை மக்கள் உணருகிறார்கள்.
எனவே, ஒரு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு, எதிர்ப்புக்கு, அறப்போருக்கு மக்கள் ஆயத்தமாகி இருக்கிறார்கள்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறினார்.