அய்.அய்.டி (IIT) நிறுவனங்கள், ஆசிரியர் களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அரசியல மைப்புச் சட்டப்படியான இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றத் தவறியுள்ளன. சமூக நீதியைப் புறக்கணிக்கும் இத்தகைய போக்கால் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதி நிதித்துவத்தைப் பாதித்துள்ளது.
அய்.அய்.டி பாம்பேயின் முன்னாள் மாணவர் பிரணவ் ஜீவன் பி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தரவுகளின்படி, தரவுகளைப் பகிர்ந்துள்ள ஏழு அய்.அய்.டி நிறுவனங்களில், ஆசிரியர்களில் சுமார் 20 சதவீதம் பேர் மட்டுமே ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
‘ஒன்றிய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியிடங்களில் இட ஒதுக்கீடு) சட்டம், 2019’இன் படி, இந்த நிறுவனங்கள் ஆசிரியர் பணியிடங்களில் ஒடுக்கப்பட்ட பட்டியல் ஜாதியினருக்கு 15 சதவீதமும், பட்டியல் பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த விண்ணப்பத்தின் மூலம், அனைத்து அய்.அய்.டி நிறுவனங்களிலும் துறை வாரியாகவும், சமூகப் பிரிவு வாரியாகவும் ஆசிரியர்களின் விவரங்கள், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், 2025 முதல் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, மனநல வசதிகள், பெறப்பட்ட புகார்கள், அவற்றின் தன்மை, அத்துடன் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான சிறப்புப் பிரிவுகள் (SC/ST cells) எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை பிரணவ் ஜீவன் கோரியிருந்தார்.
கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி, நாட்டின் முதல் அய்.அய்.டி நிறுவனமான அய்.அய்.டி கரக்பூரில், தற்போதுள்ள ஆசிரியர்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அங்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் ஒடுக்கப்பட்ட (எஸ்.சி) பிரிவினருக்கு 236 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 20 பேரும், பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவினருக்கு 118 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் இரண்டு பேரும் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவினருக்கு 424 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 46 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
இதற்கு, விண்ணப்பதாரர்கள் கிடைக்க வில்லை என்பதைக் காரணமாகக் கூற முடியாது. ஏனெனில், 2025 முதல் அந்த நிறுவனம் பெற்ற விண்ணப்பங்களில் 48 சதவீதம், எஸ்சி, எஸ்டி, ஓபிசி விண்ணப்ப தாரர்களிடமிருந்து வந்தவை என்பது தரவுகள் மூலம் தெரியவருகிறது.
கடந்த அய்ந்து ஆண்டுகளில், அய்.அய்.டி கரக்பூரில் 10 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்; இதில் எஸ்சி பிரிவைச் சேர்ந்த இரு மாணவர்களும், எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவரும் அடங்குவர். அங்கு 14,764 மாணவர்கள் பயிலும் நிலையில், 12 நிரந்தர ஆலோசகர்களும், ஒப்பந்த அடிப்படையில் ஒரு மனநல மருத்துவரும் மட்டுமே உள்ளனர். இந்த விகிதம், ஒவ்வொரு 500 மாணவர்களுக்கும் ஒரு மனநல வல்லுநர் இருக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) வழிகாட்டுதலைக் கூட நிறைவு செய்யவில்லை.
மற்ற அய்.அய்.டி நிறுவனங்களிலும் இதே போன்ற சூழலே நிலவுகிறது. அய்.அய்.டி நிறுவனங்களுக்கு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடியினரிடமிருந்து போதுமான விண்ணப்பங்கள் வரவில்லை என்று அவை கூறுவது பொய் என்று இத் தகவலைப் பெற்றுள்ள பிரணவ் ஜீவன் தெரிவித்துள்ளார்.
“ஆசிரியப் பணிக்கான விண்ணப்பங் களில் சுமார் 50 சதவீதம் பேர் எஸ்சி (SC), எஸ்டி (ST) மற்றும் ஓபிசி (OBC) பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து வந்தவை. அய்.அய்.டி நிறுவனங்களில் உயர்ஜாதியினரின் ஆதிக்கம் நிலவுகிறது. இட ஒதுக்கீட்டு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்படாதவரை, இந்த நிறுவனங்களில் ஜாதியவாதம் தொடர்ந்து நீடிக்கும். ஜாதியவாதத்தை எதிர்கொள்ள ஒரே வழி, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களை அதிக எண்ணிக்கையில் ஆசிரியப் பணிகளில் அமர்த்துவதுதான்” என்று அவர் கூறியுள்ளார்.
அய்.அய்.டி-களில் உள்ள பெரும்பாலான துறைகளில் எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்கள் இல்லை என்றும், இதனால் இந்தச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஜாதிய ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும்போது, அவர்கள் உதவி கோருவதற்கு யாருமிருப்பதில்லை.
“இத்தகைய நிறுவனங்களில் பெரும் பாலானவற்றில், மாணவர்களுக்கான எஸ்சி/எஸ்டி பிரிவு (SC/ST cell) முறையாகச் செயல்படுவதில்லை; குறைகளைத் தீர்ப்பதற்கான முறையான அமைப்பும் இல்லை. சில இடங்களில், பெயரளவில் மட்டுமே இத்தகைய பிரிவுகள் உள்ளன; அவற்றுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு களோ அல்லது செயல்பாடுகளோ அங்கு நடத்தப்படுவதில்லை. ஆசிரியர்கள் நியமனத்தின்போது இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்படுவது குறித்து, இத்தகைய அமைப்புகள் எதையும் கேள்வி எழுப்புவ தில்லை” என்று அவர் கூறினார்.
மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தின் (TISS) ‘சம வாய்ப்பு மய்யத்தின்’ (Equal Opportunity Centre) முன்னாள் டீனும், சாதியம், சமூக விலக்கல் மற்றும் உள்ளடக்கிய கொள்கைகள் குறித்த வல்லுநருமான பேராசிரியர் அவத்தி ராமையா, தகுதியுள்ள எஸ்சி/எஸ்டி/ஓபிசி விண்ணப்பதாரர்கள் ஜாதியக் காரணங்களால் நிராகரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.
நேர்முகத் தேர்வின் மூலம் நிராகரித்தல்
“அய்.அய்.டி போன்ற கல்வி மற்றும் தொழில்முறை நிறுவனங்களில் அதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் உயர்ஜாதியினர், இட ஒதுக்கீட்டுக் கொள்கை இருந்தபோதிலும், எஸ்சி/எஸ்டி/ஓபிசி விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பதில் மிகவும் கவனமாகச் செயல்படுகின்றனர். எஸ்சி/எஸ்டி/ஓபிசி விண்ணப்பதாரர்களிடையே திறமைக்கு எந்தக் குறையும் இல்லை” என்று அவர் கூறினார்.
“பல்வேறு தேர்வுக் குழுக்களில் பாட வல்லு நராகவோ அல்லது பார்வையாளராகவோ பங்கேற்ற அனுபவத்தின் அடிப்படையில் என்னால் கூற முடியும்; இட ஒதுக்கீட்டுப் பணியிடங்களுக்குப் போட்டியிடும் விண்ணப் பதாரர்களிடம் ஒப்பீட்டளவில் மிகவும் கடினமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதன் பிறகு, அந்த விண்ணப்பதாரர்கள் ‘தகுதியற்றவர்கள்’ என்று தேர்வுக் குழுவினர் முடிவு செய்கின்றனர்” என்று ராமையா தெரிவித்தார்.
அய்.அய்.டி, நிறுவனங்களை, அய்யர் அய்யங்கார் டெக்னாலஜியாகவே வைத் திருக்க, இடஒதுக்கீட்டை வெறும் ஏட்டளவில் மட்டுமே வைத்துக் கொண்டால் போதும் என்று செய்யப்படும் சூழ்ச்சியே இது! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உறுதிசெய்யப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை முறைப்படி செயல்படுத்தாத நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இத்தகைய அநீதிகளைத் தடுக்க முடியாது.
