
மருத்துவர் பி.சசிப்பிரியா
புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர், ஹர்ஷமித்ரா புற்றுநோய், பன்னோக்கு மருத்துவமனை, நாகமங்கலம், திருச்சி.
கருப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கருப்பையையும் பெண் உறுப்பையும் இணைக்கும் சிறிய குழாயான கருப்பை வாயிலில் அசாதாரண செல்கள் அளவுக்கு அதிகமாக வளர்வதாலும் HPV (ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்) வைரசின் சில வகைகள் கிட்டத்தட்ட அனைத்து கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லையே எதுக்கு மருத்துவரைப் பார்க்கணும்? பல பெண்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள். ஆனால், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயில் இதுதான் பெரிய சிக்கல்.ஆரம்பத்தில் இந்த நோய் எந்த அறிகுறியும் காட்டாது. இதில் நல்ல செய்தி என்னவென்றால் எச்.பி.வி. தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமும் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.இவ்வாறு ஆரம்பத்தில் தெரிந்தால் குணப்படுத்தவும் முடியும்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்
கேள்வி:- கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு முக்கியக் காரணம் என்ன?
பதில்:- HPV (ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்) என்ற கிருமி – இந்தக் கிருமியின் சில வகைகள் கிட்டத்தட்ட எல்லா கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்களுக்கும் காரணம். H.P.V.யில் 200க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு . அவற்றில் சுமார் 12 வகைகள் தான் புற்றுநோய் உண்டாக்கக் கூடியவை.
கேள்வி:- HPV தொற்று வந்தாலே புற்று நோய் வந்து விடுமா?
பதில்:- இல்லை. இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். HPV மிகவும் பரவலான தொற்று. பெரும்பாலானவர்களுக்கு தங்களுக்கு தொற்று வந்ததே தெரியாது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியே அதை தானாக அழித்துவிடும்.
ஆனால், உடல் அந்தக் கிருமியை வெல்லத் தவறினால் தொற்று பல ஆண்டுகள் தங்கி கர்ப்பப்பை வாய் செல்களை மெதுவாக மாற்றும். அது புற்றுநோயாக மாற பொதுவாக மூன்று முதல் ஏழு ஆண்டுகள் ஆகும். இந்த இடைவெளி தான் நமக்குக் கிடைக்கும் பொன்னான வாய்ப்பு. இடையில் பரிசோதனை செய்தால் புற்றுநோயாக மாறுவதற்கு முன்பே மாற்றத்தை கண்டுபிடித்து நிறுத்தி விடலாம்.
HPV எப்படி பரவுகிறது?
இது பாலியல் தொடர்பு மூலம் பரவும் தொற்று.அதனால்தான் இதைப்பற்றி பேசவே பலருக்கு தயக்கம்.ஆனால், இது நோய்க்கிருமி பற்றிய ஒரு மருத்துவ உண்மை. யார் மீதும் குற்றம் சுமத்தும் விஷயம் இல்லை. திருமணமான பெண்களுக்கும் இது வரலாம் என்பதால் எல்லாப் பெண்களும் இதைத் தெரிந்து கொள்வது அவசியம்.
கேள்வி:- புற்றுநோயில் வகைகள் உண்டா?
பதில்:- இரண்டு முக்கிய வகைகள் உண்டு. செதில் செல் புற்றுநோய் (Squamous cell carcinoma) கர்ப்பப்பை வாயில் வெளிப்புற பரப்பில் உருவாகும். இதுவே மிகவும் மெதுவான வகை (10இல் எட்டு முதல் 9 பேருக்கு) ஆடினோகார் சினோமா (Adenocar cinoma) உள்ளே உள்ள சளி சுரக்கும் செல்களில் உருவாகும் (அய்ந்தில் ஒருவர்) சிலருக்கு இரண்டும் கலந்து இருக்கலாம்.
கேள்வி:- இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
பதில்:- ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இருக்காது. நோய் அதிகரிக்கும்போது இவை தெரியலாம்.
* உடலுறவுக்கு பிறகு ரத்தப்போக்கு.
* இரண்டு மாதவிடாய்களுக்கு நடுவே இரத்தப் போக்கு
* மெனோபாஸ் (மாதவிடாய் நின்ற பிறகு) ரத்தப் போக்கு.
* நீர் போன்ற அல்லது ரத்தம் கலந்த அதிகமான துர்நாற்றம் வீசும் வெள்ளைப்படுதல்.
* உடலுறவின்போது வலி இருப்பு அல்லது அடி வயிற்று வலி நோய் அருகில் உள்ள உறுப்புகளுக்கும் பரவி இருந்தால் இவையும் ஏற்படலாம்.
* சிறுநீர் கழிக்கும் போது சிரமம் வலி சிறுநீரில் ரத்தம்.
* மலம் கழிக்கும் போது வலி அல்லது ரத்தம் வருதல், வயிற்றுப் போக்கு.
* பசியின்மை எடை குறைவு அதிக சோர்வு
* மந்தமான முதுகு வலி, கால்களில் வீக்கம் இவற்றில் ஏதாவது இருந்தால் தள்ளி போடாதீர்கள்.
கேள்வி: யாருக்கு ஆபத்து அதிகம்?
பதில்:- H.P.V. தொற்று ஏற்படும் வாய்ப்பையும் அதை உடல் எதிர்த்துப் போராடும் திறனையும் பொறுத்து அது அமையும்.
* 18 வயதிற்கு முன் பாலியல் உறவு. பாலியல் தொற்றுகள் வந்திருப்பது. பலமுறை கருத்தரித்தல். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. புகை பிடித்தல். மரபணு காரணம்.
கேள்வி:- ஒரே துணையிடம் வாழும் பெண்ணுக்கும் இந்நோய் வருமா?
பதில்:- வரலாம். எச்.பி.வி. பல ஆண்டுகள் உடலில் அமைதியாக இருக்கும். அதனால் எனக்கு அந்த மாதிரி வர வாய்ப்பே இல்லை என நினைத்து பரிசோதனையை தவிர்க்க வேண்டாம். பரிசோதனை எல்லா பெண்களுக்கும் தேவை.
பரிசோதனை
கேள்வி:- பாப்ஸ்மியர் (Papsmear) பரிசோதனை என்றால் என்ன?
பதில்:- மருத்துவர் கர்ப்பப்பை வாயிலிருந்து மிகச் சிறிய அளவில் செல்களை மெதுவாக சுரண்டி எடுத்து ஆய்வகத்தில் நுண்ணோக்கியில் பார்ப்பார். சில நிமிடங்களில் முடிந்து விடும் பெரிய வலி இருக்காது. மருத்துவமனையில் தங்க வேண்டியதும் இல்லை. இந்தப் பரிசோதனையின் பெரிய பயன் செல்கள் புற்றுநோயாக மாறுவதற்கு முன்பே அவற்றில் ஏற்படும் மாற்றங்களை கண்டுபிடித்து விடும். தவறாமல் பாப் பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கு புற்றுநோய் கவனிக்கப்படாமல் போகும் வாய்ப்பு மிகக் குறைவு.
கேள்வி:- HPV பரிசோதனை என்றால் என்ன?
பதில்:- இது புற்றுநோய் உண்டாக்கும் அதிக ஆபத்துள்ள ஹெச்.பி.வி வகைகள் உடலில் இருக்கின்றனவா என்று பார்க்கும் பரிசோதனை. பாப்ஸ்மியர் முடிவு இயல்பாக இல்லாவிட்டால், பொதுவாக அடுத்ததாக இது செய்யப்படும். சில வயதினருக்கு பாப்ஸ்மியர் பரிசோதனைக்கு பதிலாகவோ அதனுடன் சேர்த்தோ இதையே முதல் பரிசோதனையாக செய்வதும் உண்டு.
கேள்வி:- எந்த வயதில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதிக்க வேண்டும்.
பதில்:- வழிகாட்டுதல்கள், நாட்டுக்கு நாடு ஆளுக்கு ஆள் சற்று மாறும். பொதுவாக பாலியல் உறவு தொடங்கிய பிறகு சுமார் 21 வயதில் இது பரிசோதனை தொடங்கி மருத்துவர் சொல்லும் இடைவெளியில் (பெரும்பாலும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை) தொடர்வார்கள். HPV பரிசோதனை 30 வயதுக்கு மேல் அதிகம் பயன் படுத்தப்படுகிறது.
கேள்வி:- பரிசோதனையில் மாற்றம் தெரிந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
பதில்:- முதலில் கோல்போஸ்கோபி (colposcopy)செய்வார்கள். இது ஒரு சிறிய கருவி மூலம் கர்ப்பப்பை வாயை பெரிதாகி பார்க்கும் முறை. சந்தேகமான இடத்தில் இருந்து சிறிய திசுவை எடுத்து (பயாப்சி) ஆய்வகத்துக்கு அனுப்புவார்கள். இதற்குப் பஞ்ச் பயாப்சி (punch biopsy) எண்டோசெர்விகல் கியூரெட்டேஜ் (Endocervical curettage), LEEP, கோன் பயாப்சி cone biopsy போன்ற முறைகளில் ஒன்று பயன்படலாம். சில முறைகள் மாற்றத்தை அகற்றும் சிகிச்சையாகவும் பயன்படும்.
புற்றுநோய் உறுதியானால் அது எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்று பார்க்க ஸ்கேன் போன்ற இமேஜிங் பரிசோதனைகள் செய்யப்படும்.
நவீன சிகிச்சைகள்
கேள்வி:- சிகிச்சை முறைகள் என்ன?
பதில்:- என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை புற்றுநோய் அறுவை மருத்துவர், கதிர்வீச்சு மருத்துவர், மருந்து சிகிச்சை மருத்துவர் ஆகியோர் சேர்ந்து உங்கள் நோய், வயது, பொது ஆரோக்கியம் இவைகளை தெரிந்த பிறகு முடிவு செய்து திட்டமிடுவார்கள்.
அறுவை சிகிச்சை
மிகச் சிறிய புற்றுநோய் என்றால் புற்றுநோய் திசுவை மற்றும் அகற்றலாம். மற்றவர்களுக்கு கர்ப்பப்பை வாயை மட்டும் (டிராகெலக்டோமி) அல்லது கர்ப்பப்பையையும், கர்ப்பப்பை வாயையும் (ஹிஸ்டெரெக்டமி) அகற்ற வேண்டி யிருக்கலாம். நோய் மிகவும் பரவினால் சில சமயம் பெரிய அளவிலான இடுப்பு உறுப்பு அறிவு தேவைப்படலாம்.
கதிர்வீச்சு சிகிச்சை
சக்தி வாய்ந்த கதிர்கள் புற்றுநோய் செல்களை அழிக்கும் உடலுக்கு வெளியே இருந்து தரும் புறக்கதிர் சிகிச்சை (EBRT) கர்ப்பப்பை வாய்க்கு அருகிலேயே கதிர் மூலத்தை வைத்து தரும் பிராக்கிதெரபி என இரு வகை உண்டு. முற்றிய நிலையில் இவை இரண்டும் சேர்த்து பயன்படுத்துவது வழக்கம்.
கிமோ தெரபி( chemotherapy)
மருந்துகள் ரத்தத்தின் வழியாக உடல் முழுவதும் சென்று புற்றுநோய் செல்களை அழிக்கும். முற்றிய நிலையில் கதிர் வீச்சுடன் சேர்த்து தரப்படும் போது பலன் அதிகரிக்கும்.
இலக்கு சிகிச்சை (Targeted Therapy)
ஆரோக்கியமான செல்களை முடிந்தவரை விட்டுவிட்டு புற்றுநோய் செல்களின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறி வைக்கும் மருந்துகள்.
நோய் எதிர்ப்பு சிகிச்சை (Immuno Therapy)
நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அழிக்க வைக்கும் மருந்துகள் இது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சையில் சமீப தண்டுகளில் முக்கிய இடம் பெற்றுள்ளது
அறிகுறி நிவாரணம் பராமரிப்பு(palliative care)
வலி சோர்வு போன்ற தொந்தரவுகளை குறைத்து ஆறுதல் தருவது. இது கடைசி கட்டத்துக்கு மட்டுமில்லை எந்த நிலையிலும் சிகிச்சையுடன் சேர்த்து பெறலாம்.
கேள்வி:- இளம் வயதில் இந்த நோய்வந்தால் பின்னர் குழந்தை பெற முடியுமா?
பதில்:- மிக ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் சிலருக்கு கர்ப்பப்பையை காப்பாற்றும் அறுவை முறைகள் சாத்தியம். கதிர்வீச்சு போன்ற சிகிச்சைகள் கருவுறும் திறனை பாதிக்கலாம். எனவே சிகிச்சை தொடங்கும் முன்பே இதை மருத்துவரிடம் வெளிப்படையாகப் பேச வேண்டும்.
தடுப்பூசி
கேள்வி:- கருப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு ஊசி பற்றி?
பதில்:- ஹெச்.பி.வி. வைரஸ்களில் 150 வகைகள் உள்ளன. இவற்றில் 16 மற்றும் 18ஆம் வைரஸ்கள் கருப்பை வாயிலும் ஆசனவாயிலும் புற்றுநோய் ஏற்படுத்தும். ஆறு மற்றும் 11ஆம் வைரஸ்கள் பிறப்பு உறுப்புகளில் மருக்களை உருவாக்கும்.
தற்போது கார்டாசில் (Gardasil) மற்றும் செர்வாரிக்ஸ் (Cervarix) என்று இரண்டு வகை தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. இவை முறையே நான்கு வகை (16, 18, 6, 11). ஒன்பது வகை (6, 11, 16, 18, 31, 33, 45, 52, 58) வைரஸ்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது. செர்வாரிக்ஸ் 2 வகை (16,18) வைரஸ்களைத் தடுக்கும் தடுப்பூசியை மூன்று டோஸ்களில் போட வேண்டும். முதல் டோஸ் போட்டு இரண்டு மாதம், கழித்த பிறகு இரண்டாம் டோஸ் அதற்கு பின் நாலு மாதங்கள் கழித்து மூன்றாவது டோஸ் போட வேண்டும். கர்ப்பிணிகளுக்கு இந்த தடுப்பூசி போடக்கூடாது. இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆறு மாத காலத்தில் கர்ப்பம் தரிக்கக் கூடாது
பெண்களுக்கு ஒன்பது வயது முதல் 45 வயது வரை இந்த தடுப்பூசியை போடலாம். திருமணத்துக்கு முன்னால் போட்டு விடுவது நல்லது. தற்போது ஆண்களுக்கும் இந்தத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேல் தொண்டை புற்றுநோய், ஆண்குறி புற்று நோய் மற்றும் ஆசனவாய் புற்றுநோய் ஆகியவற்றை தடுக்க வல்லது இந்த தடுப்பூசி. மேலும் ஆண்களிடமிருந்து பெண்களுக்கு இந்த வைரஸ் பரவுவதையும் தடுக்கிறது. 9 முதல் 14 வயது வரை உள்ள நபர்களுக்கு இரண்டு டோஸ், 15 முதல் 45 வயது வரை உள்ள நபர்களுக்கு 3 டோஸ் போட வேண்டும்.
