சென்னை, நவ. 2- அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், ‘நலம் ஏஅய்’ (Nalam AI) செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் புதிய நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தார். சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்காக நேற்று (1.11.2026) விமான நிலையம் வந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘நலம் ஏஐ’ செயலி அறிமுகம்
அரசு மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரை அதிகளவில் மருத்துவப் பயனாளிகள் வருவதால் மருந்து விநியோகப் பிரிவில் கூட்டம் அதிகரிக்கிறது. இதனைச் சரிசெய்ய ‘நலம் ஏஅய்’ என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
காத்திருப்பு நேரம் குறையும்
இச்செயலியைப் பயன்படுத்தி மருத்துவப் பயனாளிகள் தங்களுக்கு வசதியான நேரத்தைக் குறிப்பிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இதனால் ஒரே நேரத்தில் கூட்டம் சேர்வது தவிர்க்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் சென்று தாமதமின்றி மருந்துகளைப் பெற முடியும்.
‘டெங்கு’ கட்டுக்குள் உள்ளது
தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் முழுமையாகக் கட்டுக்குள் உள்ளது. கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகளும், சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்துவது குறித்த திட்டம் பரிசீலனையில் உள்ளது. இது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
பழைய சாலைகளை நீக்காமல்
புதிய தார் சாலைகள் அமைத்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை!
சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
சென்னை, நவ. 2- மாநகராட்சி பகுதிகளில் பழைய சாலைகளின் மேற்பரப்பை அகழ்ந்தெடுக்காமல் புதிய தார் சாலைகளை அமைத்தால், தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் ரூ.300 கோடியில் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள 110 விதியின் கீழ் அறிவித்து இருந்தார்.
முதற்கட்டமாக ரூ.154.16 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதில் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையின்படி முதற்கட்டமாக ரூ.130.19 கோடியில் சாலைப்பணிகள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் முடிவுற்று சாலைப் பணிகள் மேற்கொள்ளும்போது தரமாகவும், அளவீடுகள் சரியாகவும் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையர் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, தார்ச்சாலைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளும் போது ஏற்கெனவே உள்ள சாலைகளின் மேற்பரப்பின் பழைய தார் அடுக்கை முழுவதும் அகழ்ந்தெடுத்து, புதிதாக தார்ச் சாலைகளை அமைக்க வேண்டும்.
சாலையில் புதிதாக எவ்வளவு கனத்தில் தார்ச்சாலை அமைக்கப்படுகிறதோ அதே அளவுக்கு அகழ்ந்தெடுக்கும் பணியும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதனால் ஏற்கெனவே சாலை எந்த அளவு உயரமாக உள்ளதோ புதிய தார்ச்சாலை அமைத்த பிறகும் அதே உயரம் பராமரிக்கப்படும்.
சிறப்பு இயந்திரத்தால் அகழ்ந்தெடுக்க முடியாத ஓரப் பகுதிகளில் வேறு இயந்திரங்கள் அல்லது பணியாளர்களால் நேரடியாக அகற்றப்பட வேண்டும். இதனால் கட்டடங்கள் சாலை மட்டத்திற்கு கீழ் செல்வதை தவிர்க்க முடியும்.
பழைய சாலைகளில் சரியாக அகழ்ந்தெடுக்கும் பணி மேற்கொள்ளாமல் புதிய தார்ச் சாலை அமைத்தால், பணி மேற்கொண்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
