கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 31.10.2026

- Advertisement -

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தேர்தலில் பின்னடைவு: இஸ்ரேலில் ஆட்சி அமைக்க முடியாமல் நெதன்யாகு திணறல்: இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகுவின் லிகுட் கூட்டணி 53 இடங்களை மட்டுமே பெற்று, பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்களைப் பெறத் தவறியது. அரபு கட்சிகள் 19 இடங்களை கைப்பற்றியதுடன், அரபு வாக்காளர்களின் வரலாறு காணாத வாக்குப்பதிவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

* உத்தரப் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: பாஜகவுடன் தேர்தல் அதிகாரிகள் கூட்டுச் சதி – சமாஜ்வாதிக் கட்சி குற்றச்சாட்டு: எஸ்.அய்.ஆர் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், சமாஜ்வாதிக் கட்சியினரின் வாக்குகளை நீக்கி பாஜகவினரின் வாக்குகளைச் சேர்க்க அதிகாரிகள் துணைபோவதாக ராம் கோபால் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 10,000 சமாஜ்வாதி வாக்குகளை நீக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகளின் உள்நுழைவு விவரங்கள் பாஜகவினரிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் புகார்.

* அரசுப் பணிகளுக்கான வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு – முதலமைச்சர் விஜய் உத்தரவு: அரசுப் பணிகளில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், அனைத்து வகை விண்ணப்பதாரர்களுக்கும் அதிகபட்ச வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. உள்ளிட்ட இட ஒதுக்கீடு பிரிவினருக்கும், பொதுப்பிரிவினருக்கும் இந்தத் தளர்வு பொருந்தும்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* கேரளாவில் எஸ்.அய்.ஆர் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது – உச்சநீதிமன்றம்: கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் (SIR) பணிக்கான காலக்கெடுவை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. கணக்கெடுப்பில் விடுபட்டவர்களின் விவரங்களைப் பரிசீலித்து, தகுதியான வாக்காளர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

* நீக்கப்பட்ட 47.56 லட்சம் வாக்காளர்களை மீண்டும் சரிபார்க்க டெல்லி தேர்தல் ஆணையம் திட்டம்: வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 47.56 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வீடு வீடாகச் சென்று மீண்டும் சரிபார்க்க டில்லி தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தகுதியான வாக்காளர்கள் விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய, நவம்பர் 15 முதல் டிசம்பர் 22 வரை இந்தப் பணி நடைபெற உள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கருநாடகாவில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு சட்டம் மீண்டும் பரிசீலனை – தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  சந்தோஷ் லாட். உள்ளூர் மக்களுக்கு திறன் பயிற்சி அளித்து, அவர்களுக்கே உள்ளூரில் வேலைவாய்ப்பு வழங்குவதே அரசின் நோக்கம் என அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார். தமிழ்நாடு, அரியானா, பஞ்சாப் மாநிலங்களின் இட ஒதுக்கீடு சட்டங்கள் எதிர்கொண்டுள்ள நீதிமன்றச் சவால்களை ஆராய்ந்த பிறகே கருநாடக அரசு இறுதி முடிவெடுக்கும் என்றார்.

தி இந்து:

* ஜனவரி 25 முதல் வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு: 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம், ஜனவரி 10 முதல் இணையவழி சுயக்கணக்கெடுப்புடன் தொடங்குகிறது. ஜனவரி 25 முதல் பிப்ரவரி 28 வரை வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்படும்; இதில் 13 புதிய கேள்விகள் உட்பட மொத்தம் 40 கேள்விகள் கேட்கப்படும்.

தி டெலிகிராப்:

* 2014 முதல் மோடி – அமித்ஷா நாடாளுமன்றத்தை கேலிக்கூத்தாக்கி வருகின்றனர் – காங்கிரஸ் குற்றச்சாட்டு: 2023ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையருக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் வாழ்நாள் பாதுகாப்பு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை காங்கிரஸ் சுட்டிக்காட்டியது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த 145 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தபோது, இந்தச் சட்டம் இரு அவைகளிலும் அவசரமாக நிறைவேற்றப்பட்டதாக ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்தார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பொதுப் பிரிவின் கீழ் 100-க்கும் மேற்பட்ட இ.டபிள்யு.எஸ். (EWS) – உயர்ஜாதி ’அரியவகை ஏழை’ மாணவர்களுக்கு முதுநிலை மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு: உயர்ஜாதி ’அரியவகை ஏழை’ பிரிவைச் (EWS) சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, தனியார் கல்லூரிகளில் சுயநிதிப் பிரிவின் கீழ் பொதுப்பிரிவு முதுநிலை மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சில மருத்துவப் படிப்புகளுக்கான மூன்றாண்டு கல்விக் கட்டணம் ரூ.2.1 கோடி வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *