கேள்வி 1: “எந்த இயக்கமும் அதிதீவிரக் கொள்கை இல்லாததால் கெட்டு விடாது. இயக்கத்தைத் தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாலேயே கெட்டுப்போகும். இதுவரை அனேக இயக்கம் அதனாலேயே மறைந்து போய் இருக்கிறது” என்று தந்தை பெரியார் 1936இல் 90 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னக் கருத்து இன்றைக்கும் அனைத்து சமூக அரசியல் இயக்கங்களுக்கும் பொருந்தி வருகிறேதே, எப்படி?
– குடந்தை க.குருசாமி
பதில் 1: தந்தை பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி – பகுத்தறிவுப் பகலவன் – ஒரு தொலைநோக்கு சிந்தனையாளர் என்பதற்கு மறுக்க இயலாத சான்றுகள் இவை.
கேள்வி 2: தன்னைச் சுற்றிலும், அநியாயங்கள், சட்டவிரோதச் செயல்கள் போன்ற பல நடந்த போதும் கூட – பலரும் அமைதியாக இருக்கின்றார்களே… இந்த “உயிரற்ற” மனிதர்கள் குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?
-மு.அய்யூப்கான், மேலக்காவேரி, கும்பகோணம்
பதில் 2: ‘உயிரற்ற மனிதர்கள்’ மத்தியிலேதான் நாமும் நம் ஜனநாயகப் பெருமைகளை உலகளாவிய நிலையில் பேசிக் கொண்டிருக்கிறோம்!
கேள்வி 3: பாட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சி தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “வாக்குத் திருட்டு மூலம் கைப்பற்றப்பட்ட மேற்குவங்கம், அரியானா, பீகார், மகாராட்டிரா ஆகிய அரசுகளை அகற்ற மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும்” என்று கூறியிருப்பதில் வசதியாகத் தமிழ்நாட்டை விட்டுவிட்டாரே – ஆட்சி அதிகாரக் கூட்டணி தர்மமாக இருக்குமா?
– மன்னை சித்து, மன்னார்குடி-1
பதில் 3: அவரைப் பொறுத்தவரையில் அவர் தெரிந்திருந்து விட்டிருக்க மாட்டார்; எனவே, அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. தி.மு.க. அரசு மீதும், திராவிட மாடல் நாயகர் மீதும் மிக்க மரியாதை கொண்டவர். காங்கிரஸ் தலைவர் திரு.மல்லிகார்ஜுன கார்கே அவர்கள்.
கேள்வி 4:முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு – சென்னை காவல் ஆணையரகத்தில் விசாரிக்கப்பட்டு – பின்பு சென்னை பொது மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு – மீண்டும் அதே காவல் ஆணையரகத்தில் விசாரணை என்பது சரியான சட்ட நடவடிக்கையா? காவல் துறையினர் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்?
– பா.பாவேந்தர் விரும்பி, சென்னை-84
பதில் 4: அன்பில் மகேஸ் அவர்களை எப்படியாவது கைது செய்து, அதன் மூலம் ஆட்சியின் அவலங்களைத் திசைதிருப்ப வேண்டும் என்ற திட்டம்தான் இப்படி கோணல் வழிகளையும், சட்ட நடைமுறை அல்லாதவைகளையும் செய்துள்ளது. முந்தைய அமைச்சர்கள் மீது வழக்குகளுக்கு ஆளுநர் அனுமதி தரவில்லை என்றார்கள். இப்போது அந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா? காலம் பதில் சொல்லும்.
கேள்வி 5: இராவணன் உருவப் பொம்மையை எரிக்கும்போது – இராவணனைக் கடவுள் என்று வழிபடுகின்றவர்கள் உள்ளம் புண்படாதா? இராம பக்தர்கள் உணர்வதாகத் தெரியவில்லையே?
– வி.என்.சுந்தர், கும்மிடிப்பூண்டி
பதில் 5: உணர்ந்தால் அவர்கள் எப்படி, மனைவி சீதையைத் தீக்குளிக்க வைப்பார்களா? கருவுற்ற நிலையில் காட்டிற்கு அனுப்புவார்களா? காரணமின்றி சம்பூகனைக் கொன்ற கொலைகார இராமனின் பக்தர்களாக இருப்பார்களா தோழரே?
கேள்வி 6: “அமெரிக்க இடைத்தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சித் தோற்றால், இங்கும் பிரான்சு நாட்டினைப் போல் மோசமான வன்முறை நிலை உருவாகும்” என்று டிரம்ப் ஆவேசமடைகின்றாரே – எதனால் இப்படிச் சொல்கிறார்?
– ப.விஜயா, குடியாத்தம்
பதில் 6: டிரம்ப் பேச்சு? எந்தப் பேச்சுக்கு என்ன மதிப்பு – உலக அறிவால் – சிரிப்பதைத் தவிர.
கேள்வி 7: சென்னையில் சாலை விதிகளைப் பின்பற்றாமல் அவசரமான வாகன ஓட்டுதலால் மனிதம் மறந்துபோய் கோபம் மட்டுமே முக்கியமானதாகிக் கண்டபடி திட்டிச் சண்டையிடுவது சாதாரணமாகிவிட்டதே?
– ஓவியன், அரும்பாக்கம்
பதில் 7: இதில் மேலைநாடுகளைப் பார்த்து நாம் – குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, அதுபோல சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் பார்த்து நாம் திருந்த வேண்டும். இரண்டு கார்கள் நேரெதிரே, இடித்து விபத்து ஏற்பட்டால் கூட யாரும் கூச்சல் போடுவதில்லை. இன்சூரன்ஸ் நம்பர் மற்றும் பலவற்றிற்கான ஆயத்த நடவடிக்கைகளைப் பற்றித்தான் தகவல் பரிமாற்றம் நடைபெறும். காவல்துறை மேல் நடவடிக்கை எடுக்கும்.
கேள்வி 8: காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட மறுக்கின்ற – கருநாடக அரசு எப்போதுதான் திருந்தும்?
– ப.பாபு, திண்டிவனம்
பதில் 8: நாய்வால் நிமிரும்போது; ஓநாய் சைவமாகும்போது!
கேள்வி 9: ஒன்றிய அரசு புற்றுநோய் மருந்துகளின் விலையை முன்பிருந்ததைக் காட்டிலும் பல மடங்கு அதிரடியாகக் குறைத்துள்ளது. அப்படியானால் இதுவரை புற்றுநோய் பாதிக்கப்பட்டதால் பொருளாதாரச் சிக்கலில் அம் மருந்துகளை வாங்க இயலாமல் இறக்க நேரிட்டவர்களுக்கு, கொள்ளை லாபம் மட்டும் குறிக்கோளாய்க் கொண்டுள்ள “வியாபாரிகள்”, ஒன்றிய ஆட்சியாளர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
– பா.திவ்யபாரதி, சென்னை
பதில் 9: நல்ல கேள்விதான். இதுபோன்ற பல நிகழ்வுகள் ஏராளம் உண்டே; அதற்கெல்லாம் ஒன்றிய ஆட்சியாளர்கள் “பதில்” சொன்னார்களா என்ன?
