
சில மாதங்களுக்கு முன்பு அம்மாவுக்குக் கண்ணில் புரை அறுவை சிகிச்சை செய்தோம். சில ஆண்டு களுக்கு முன்பு முதல் கண்ணுக்குச் சிகிச்சை செய்த போது கட்டு அவிழ்த்த உடனேயே நன்றாகக் கண் தெரிந்து. இந்த முறை சுத்தமாகத் தெரியவில்லை என்று பயந்து போனார். ஓரிரு நாட்களில் பார்வை நன்றாகத் திரும்பி விடும் என்று மருத்துவர்கள் எவ்வளவு தான் நம்பிக்கை கொடுத்தாலும் எங்க ஊர் மாரியம்மனுக்கு மாவிளக்கு வைக்கிறேன் என்றெல்லாம் வேண்டத் தொடங்கிவிட்டார்.
நான் ஜெமினி செயலியைத் திறந்து அதில் நேரடியாகத் தமிழில் உரையாடினேன். அது அமைதியாகவும் பொறுமையாகவும் மருத்துவர்கள் சொன்ன தகவல்களையே வேறு விதமாக விளக்கிக் கூறிய பிறகு தான் அம்மாவுக்கு முகத்தில் சிரிப்பும் வந்தது. அன்றிரவு தூக்கமும் வந்தது.
என் அப்பா எம்.காம். படித்தவர். அம்மா பள்ளிக் கூடம் பக்கமே போனதில்லை.
சித்தப்பா பி.இ., அத்தைகளும், சித்திகளும் பள்ளிக் கூடத்தில் கால் வைத்திருந்தால் அதிசயம்.
1990களில் பெண்கள் மிதிவண்டி ஓட்டுவதற்கு அரசே பயிற்சி அளித்த சிறப்புடைய மாவட்டம் எங்கள் புதுக்கோட்டை மாவட்டம்.
“அன்னைக்கு நாங்க எல்லாம் தலைல கஞ்சிக் கூடையை வைச்சுக்கிட்டு அம்புட்டு தூரம் வேகாத வெயில்ல போவோம். இன்னிக்கு இவளுங்க எல்லாம் கூட்டில (Scooty) பறக்குறாளுங்க” என்று அம்மா ஓர் ஏக்கத்தோடு சொல்வார். சேலை கட்டிக் கொண்டு ஸ்ப்ளெண்டர் பைக்குகளில் எங்க ஊர் பெண்கள் பறப்பதே ஓர் அழகு தான்.
அது ஏ.அய்-ஓ இல்லை தடுப்பூசியோ, எந்த ஒரு நுட்பமும் மனிதனை அடுத்த கட்டத்திற்குத் தான் அழைத்துச் செல்கின்றன, நுட்பத்தைக் கண்டு அஞ்ச ஒன்றுமேயில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
“இந்த நூற்றாண்டில் பெண்களாகப் பிறக்க நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்பது தான் நான் என் குழந்தைகளிடம் மீண்டும் மீண்டும் சொல்வது. அந்தக் காலத்தில் எப்படி நோய்கள் கொள்ளை கொண்டன, எப்படி பெண்கள் உரிமையற்று இருந்தார்கள் என்றெல்லாம் விவரித்துச் சொல்லும் போது ஏதோ பேய்ப் படத்தைப் பார்ப்பது போலத் தான் என் குழந்தைகள் மருள்கிறார்கள்.
ஏ.அய். பற்றிய உரையாடல் எல்லாமே இருக்கிற வேலை நிலைக்குமா புதிதாய் வேலை கிடைக்குமா என்கிற அடிப்படையிலேயே பெரிதும் அமைந்திருக்கிறது.
படிப்பறிவு மறுக்கப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், தனிமையில் உள்ளோர், கிராமங்களில் உள்ளோருக்கு ஏ.அய். எப்படிப் பேருதவியாக இருக்கக் கூடும் என்று ஏன் நாம் யாருமே பேசுவதில்லை?
வேலைக்கு வெளியே நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் நுட்பம் மாற்றி அமைக்கவில்லையா?
கலைஞர் வீடு தோறும் எரிவாயு அடுப்புகளைக் கொடுத்த போது, அது பெண்களைச் சமையல் அறையில் இருந்து விடுவிக்கும் என்று எதிர்பார்த்தார். அவர் தந்த கலைஞர் தொலைக்காட்சி என் அம்மா போன்ற கல்வியறிவு மறுக்கப்பட்ட பலருக்கு உலகச் செய்திகளை வீட்டுக்கே கொண்டு வந்து சேர்த்தது.
உங்கள் வீட்டில் உள்ள அம்மா, பாட்டி போன்றோரிடம் உங்கள் நிறுவனத்தில், வீட்டில் வேலை பார்க்கக் கூடிய எளியோரிடம் ஏ.அய்.யை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்களா? இல்லை என்றால், ஏன் அது உங்களுக்குத் தோன்றவில்லை? இனியாவது முயன்றுப் பார்ப்பீர்களா?
நிச்சயம், அவர்கள் முகத்தில் ஒரு புன்னகையையும் வாழ்க்கையில் ஒரு தன்னம்பிக்கையையும் ஏ.அய். கருவிகள் அறிமுகம் கொண்டு வரும்.
ஒருவேளை வாட்ஸ்அப் வதந்திகளை சிலர் நம்புவது போல AI சொல்வதை எல்லாம் நம்பி யாராவது தவறாக முடிவெடுத்தால் என்ன செய்வது என்று கவலைப்படுகிறீர்களா?
நம்ம ஊரில் தவறாக வழிகாட்டக் கூட ஆளில்லாமல் தவிப்பவர்கள் தாம் அதிகம். ‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்’ என்கிற குறளுக்கு ஏற்ப ஏ.அய். கூறும் தகவலையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும், ஒன்றுக்கு இரு முறை சரி பார்க்க வேண்டும் என்கிற விழிப்புணர்வோடு ஏ.அய்.யைப் பயன்படுத்தினால், ஏ.அய். நல்லதே.
ஏ.அய். பற்றிய அச்சத்தை அகற்றி அனைவருக்கும் முறையாக அறிமுகப்படுத்துவோம்.
இப்போது உலகில் நடக்கும் போர்கள் குறித்து அம்மா ஒரு கேள்வி கேட்ட போது நான் பதில் சொல்லவில்லை.
அவர்கள் கையில் ஜெமினி செயலியைத் திறந்து கொடுத்து விட்டு நான் அவர்கள் அச்செயலியோடு உரையாடுவதையே வைத்த கண் வாங்காமல் அகம் மலரப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
