சியோங்ஜூ, அக்.29 தென்கொரிய நாட்டின் சியோங்ஜூ நகரின் ஓசோங் அரங்கில் கொரியா தமிழ்ச் சங்கம், விஜிபி உலகத் தமிழ் சங்கம், கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மய்யம் ஆகிய அமைப்புகள் இணைந்து ‘முதலாம் பன்னாட்டு இந்தியா – தமிழ் – கொரியா ஆய்வு மாநாட்டையும், தமிழ் கலை இலக்கியத் திருவிழா
2026’-யையும் வரும் அக்டோபர் 31 அன்று நடத்துகின்றன.
இவ்விழாவில் தந்தை பெரியாரின் ஆங்கில வரலாற்று நூலாக, மூத்த பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார் எழுதி, எமரால்ட் பதிப்பக வெளியீடாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ‘Periyar E.V.Ramasamy A Man Ahead of his time‘ என்ற நூல் உள்பட நான்கு தமிழ் நூல்களின் கொரிய மொழி பெயர்ப்பு வெளியிடப்பட உள்ளது.
தமிழர் தலைவர் வாழ்த்து!
மாநாட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கொரிய தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் செ.அரவிந்தராஜா அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில், ‘‘கொரியத் தமிழ்ச் சங்கம், கவிஞர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மய்யம், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து, வரும் 2026 அக்டோபர் 31 அன்று நடத்தும் “முதலாம் பன்னாட்டு இந்தியா – தமிழ் – கொரியா ஆய்வு மாநாடு” குறித்த செய்தி அறிந்து பெரிதும் மகிழ்கிறோம்.
தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் செய்த சமூக நீதிப் பணிகளின் விளைச்சலாக, உலகம் முழுவதும் இன்று தமிழர்கள் செல்லச் செல்ல, தமிழும் அவர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழின் தொன்மையும் இதன் மூலம் மீட்டெடுக்கப்படுகிறது.
அதிலும், கொரியா என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழுடனும், தமிழருடனும் தொடர்புடைய நாடு ஆகும். கொரிய மொழியிலும், தமிழிலும் இருக்கும் ஒற்றுமைகளைக் கொரிய நாட்டு ஆய்வாளர்கள் பலரும் விரிவாக ஆய்வு செய்துள்ளனர். அந்த வகையில் இந்த மாநாடு ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்தும் என்று நம்புகிறோம்.
இந்த மாநாட்டின் கூடுதல் மகிழ்ச்சி யாக, தந்தை பெரியார் என்னும் காலத்தைக் கடந்த அறிவு ஆசானைப் பற்றிய “Periyar E.V.Ramasamy: A Man Ahead of His Times” புத்தகத்தின் கொரிய மொழிபெயர்ப்பு நூலும், மேலும் சில நூல்களும் இம் மாநாட் டில் வெளியிடப்படுவது மிகுந்த சிறப்புக்குரியதாகும்.
தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இன்று அதனை உலகம் காண்கிறது. உலகம் முழுவதும் அய்ந்து பெரியார் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடுகள் நடைபெற்றுள்ளன. பல நாடுகளிலும் பெரியார் பன்னாட்டமைப்பு உருவாகியிருக்கிறது. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியாரின் பணிகளுக்குப் புகழாரம் சூட்டி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய, ஸ்பானிஷ், அரபிக், இத்தாலி, ரஷ்ய மொழிகளுடன் தற்போது கொரிய மொழியில் தந்தை பெரியார் பற்றிய நூல் வெளிவரத் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து, உக்ரைன் உள்ளிட்ட மொழிகளிலும் பெரியாரின் நூல்கள் வரவிருக்கின்றன. “பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்” என்பது மனிதநேயத்தை உலகெங்கும் விதைப்பதற்கான பணியே ஆகும். அதனை முன்னெடுத்துச் செய்துள்ள கொரியத் தமிழ்ச் சங்கத்துக்கு எமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தாங்கள் என்னைச் சந்திக்கும்போது, தென்கொரியாவில் தாங்களும், தோழர்களும் ஆற்றிவரும் பணிகளை அறிந்து மகிழ்ந்ததுடன், தங்களின் அழைப்பையும் ஏற்று நிச்சயம் தென்கொரியாவுக்கு ஒருமுறை வருவதாக உறுதியளித்திருந்தேன். விரைவில் காலம் கனியும். எமது விதைப்பின் விளைச்சல்களை அவசியம் அங்கு வந்து சந்திப்போம்.
தென்கொரியா, சியோங்ஜூ, ஓசோங்க் அரங்கில் நடைபெறும் இம் மாநாட்டை இணைந்து நடத்துவதுடன், திருவள்ளுவர் சிலையை உலகெங்கும் நிறுவுவதைத் தன் வாழ்நாள் பணியாகச் செய்துவரும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களுக்கும், கவிஞர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மய்யத்தின் இயக்கு நர் முனைவர் மோ.பாட்டழகன் அவர்களுக்கும், விழாவின் விருது பெறும் பெருமக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், மாநாடு சிறக்க உழைக்கும் பெருமக்களுக்கும் எமது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவருக்குச் சிலை!
மாநாட்டு நிகழ்ச்சிகள் விவரம்
- முதலாம் பன்னாட்டு இந்தியா-தமிழ்-கொரியா ஆய்வு மாநாடு – இதில் தமிழ்-கொரிய உறவு குறித்து உலகங்கிலும்ிருந்து வந்த ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்படுகின்றன. ஹான்குக் அயல்நாட்டு ஆய்வுகள் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிம் சான்-வான்ஆய்வரங்கிற்குத் தலைமை ஏற்கிறார்.
- திருவள்ளுவர் சிலை திறப்பு – 31.10.2026 அன்று காலை 11 மணிக்கு, விஜிபி உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் முன்னிலையில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடை பெறுகிறது. தென் கொரிய மண்ணில் திருவள்ளுவருக்குச் சிலை அமைவது இதுவே முதல் முறை.
- கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் 2026 – கொரியா, இந்தியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தொழில் முனைவோருக்கு (2019, 2023-க்குப் பிறகு மூன்றாம் ஆண்டாக) கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கப்படுகின்றன.
- நூல் வெளியீடு – தந்தை பெரியார் நூலின் கொரிய மொழிபெயர்ப்பு நூல் மாநாட்டில் வெளியிடப்படுகிறது.2024 உலகக் கவிதைப் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்கேற்ற கவிதைத் தொகுப்பு உள்ளிட்ட புதிய தமிழ் நூல்களும் வெளியிடப்படுகின்றன.
- கலைவிழா மற்றும் அரசி ஹியோ ஹவாங்-ஒக் (செம்பவளம்) நினை வகத்தை நோக்கிய மரபு நடைப் பயணம் நடைபெறும்.
இம்மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் தமிழறிஞர் பெருமக்கள் பங்கேற்க உள்ளனர்.
