இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்யும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் அடாவடித்தனம்! அதிகார மமதை கொண்டிருப்பது த.வெ.க. அரசுக்கு நல்லதல்ல!

4 Min Read
- Advertisement -

‘‘தமிழ்நாட்டில் விலைவாசி உயர்ந்திருக்கிறது’’ என்கிற உண்மையை உடைத்துச் சொன்னதற்காக

பொருளாதார ஆய்வாளர் முனைவர் ஆ.கலையரசன் கைது – கண்டனத்திற்குரியது!

 

‘‘தமிழ்நாட்டில் விலைவாசி உயர்ந்திருக்கிறது’’ என்கிற உண்மையை உடைத்துச் சொன்னதற்காக பொருளாதார ஆய்வாளர் முனைவர் ஆ.கலையரசன் கைது கண்டனத்திற்குரியது – இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்யும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் அடாவடித்தனம்! அதிகார மமதை கொண்டிருப்பது த.வெ.க. அரசுக்கு நல்லதல்ல   என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சிறந்த பொருளாதார ஆய்வாளரும், பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நிகழ்த்துபவரும்,
எம்.அய்.டி.எஸ். பேராசிரியரும், நூற்றாண்டு திராவிட இயக்கம் உருவாக்கிய பொருளாதாரக் கட்டமைப்பை ஆய்வு செய்து, மறுக்க முடியாத சான்றுகளுடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ‘The Dravidian Model: Interpreting the Political Economy of Tamil Nadu’ (திராவிட மாடல்: தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதாரத்தை விளக்குதல்) என்ற புத்தகம் எழுதியவர்களில் ஒருவருமான முனைவர் ஆ.கலையரசன், நேற்று (28.10.2026) அதிகாலை 5 மணியளவில் தமிழ்நாடு காவல்துறையால் அத்துமீறி கைது செய்யப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது – கடும் கண்டனத்திற்குரியது.

விசாரணை என்ற பெயரால்
மிரட்டி அலைக்கழிக்கப்பட்டு…

‘‘கலையரசன் தனது இன்ஸ்டா கணக்கில், பல்லா வரம் சட்டமன்ற உறுப்பினர் குறித்து அவதூறாக பதிவிட்டார்’’ என்று காரணம் கூறி, சீருடை இன்றி மப்டியில் வாடகைக் காரில் வந்த காவல்துறையினர், பேராசிரியர் ஆ.கலையரசன் அவர்களை உடை மாற்றக்கூட அனுமதிக்காமல், மொபைல் போனைப் பறித்துக் கொண்டு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

விசாரணை என்ற பெயரால் மிரட்டி அலைக் கழிக்கப்பட்டு, மூன்று மணி நேரம் கழித்து வீட்டிலேயே இறக்கி விடப்பட்டுள்ளார்.

ஆனால், திரு.கலையரசன் அவர்களுக்கு இன்ஸ்டா கிராம் கணக்கே கிடையாது.

அவர் மீது சந்தேகம் இருக்குமானால், அழைத்து விசாரிக்கலாம். சீருடை அணியாத காவலர்களை வாட கைக் காரில் அனுப்பி கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அப்படி அவசரமான வழக்கா, அல்லது கொடுங் குற்றச்சாட்டா இது?

இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் கீழ் இயங்கும் தேசிய மனிதவள பொருளாதார ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (NILERD) பணியாற்றியவர்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் (King’s College London) வருகைதரு ஆராய்ச்சியாளராகவும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் லக்ஷ்மி மிட்டல் தெற்காசிய மய்யத்தில் ஆய்வாளராகவும் இணைந்து செயலாற்றியவர்.

ஜாதி மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் பொருளாதார அமைப்புகளில் ஏற்படுத்தும் தாக்கங்கள்,  சார்ந்த வளர்ச்சி (Regional Development), அரசியல் பொரு ளாதாரம், வேலைவாய்ப்புச் சந்தை குறித்த ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். இந்தியா, அமெரிக்காவில் நிலவும் ஜாதி, இன ரீதியான சமூகக் கட்டமைப்பு வேறுபாடுகளை ஒப்பிடும் பன்னாட்டு ஆய்வுத் திட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.

முன்னணி இளம் பொருளாதார
அறிஞர்களில் முக்கியமானவர்!

தமிழ்நாட்டின் தனித்துவமான வளர்ச்சிப் பாதை யையும், சமூக நீதியையும் தரவுகளுடன் உலக அரங்கிற்கு எடுத்துரைக்கும் முன்னணி இளம் பொருளா தார அறிஞர்களில் பேராசிரியர் ஆ.கலையரசன் மிக முக்கியமானவர்.

‘தி இந்து’, ‘ஃப்ரண்ட்லைன்’, ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி’ (EPW) போன்ற இந்திய, பன்னாட்டு நாளிதழ்கள், ஆய்விதழ்களில், பொருளாதார வளர்ச்சி சார்ந்த பல கட்டுரைகளை எழுதி வருபவர்.

அப்படிப்பட்ட சிறப்புக்குரியவர், தமிழ்நாட்டு அரசாலும், மக்களாலும் கொண்டாடப்பட வேண்டிய அறிவாளரை, பொய் வழக்கைக் காரணம் காட்டித் திட்டமிட்டுக் கைது செய்துள்ளது த.வெ.க.அரசு.

உண்மையை உடைத்துச் சொன்னார் என்பதற்காகத்தான்!

இந்தக் கைதின் பின்னணி, இன்ஸ்டா வழக்கு அல்ல. அண்மையில் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், ‘‘வரலாறு காணாத அளவுக்குத் தற்போதைய ஆட்சியில் தமிழ்நாட்டில் விலைவாசி உயர்ந்திருக்கிறது’’ என்கிற உண்மையை உடைத்துச் சொன்னார் என்பதுதான் காரணம்.

இதற்கு முன்பு, த.வெ.க. அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தமிழ்நாட்டின் கடன் அளவைக் காட்டிலும் மாநில அரசின் சொந்த வருவாய் ஈட்டும் திறன் குறைந்து வருவதே முதன்மையான சவால்’ என்று சுட்டிக்காட்டினார்.

ஜிஎஸ்டி (GST) அமலாக்கம், முத்திரைத்தாள் கட்டண வருவாய் சரிவு மற்றும் ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வு அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றால் தமிழ்நாட்டின் பாரம்பரிய பொருளாதாரக் கட்டமைப்பு சவாலைச் சந்திப்பதாகக் குறிப்பிட்டார்.

‘‘கூட்டுறவு அமைப்புகள், பொது விநியோகத் திட்டம் மூலமாக அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம். இடைத்தரகர்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்தலாம். அதற்கான உரிமைகள் மாநில அரசுக்கு உண்டு. இவற்றைச் செய்தால் விலைவாசி உயர்வு மட்டுப்படும்!’’ என்று ஆலோசனை சொன்னார் என்ற காரணத்திற்காக, அவரை மிரட்டும் நோக்கில் இந்தக் கைது அரங்கேற்றப்பட்டு உள்ளது.

ஆட்சியின் மீதான உண்மையான விமர்சனத்தையும், மக்கள் மீதான அக்கறையில் அவர் வழங்கிய அறிவுரை யையும் ஏற்கும் பக்குவமில்லாமல், மாற்றுக்கருத்துச் சொல்வோரை மிரட்டுவதும், கைது செய்வதும் இந்த த.வெ.க. அரசில் தொடர்ந்து வருகிறது. முன்பு ஊடகவியலாளர் விஜயன் கைது செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர்கள், நடப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இப்போது ஒரு பொருளாதாரப் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும்
அடாவடித்தனம்!

இதற்குப் பேர் பாயசம் அல்ல; இதுதான் ‘அசல் பாசிசம்’. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்யும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் அடா வடித்தனம்!

அனுபவம் இல்லாவிட்டாலும் துறை சார்ந்த அறிஞர்களின் அறிவுரையைப் பெற்று ஆட்சி செய்யலாம் என்று நேற்று (28.10.2026) தான் த.வெ.க. அரசுக்கு அறிக்கை மூலம் சுட்டிக்காட்டினோம்.

ஆனால், ஆலோசனை கூறத் தக்கவர்களையே, மப்டி போலீசை அனுப்பி, அதிகாலை நேரத்தில், உடையை மாற்றக் கூட அனுமதிக்காமல் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அதிகார மமதை கொண்டிருப்பது இந்த அரசுக்கு நல்லதல்ல!

 

 

சென்னை         தலைவர்,

29.10.2026      திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *