சென்னை, அக்.28- காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கருநாடக அரசு செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் கடந்த அக். 23 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பில்லிகுண்டுலுவில் ஒரு நாளைக்கு 3,000 கன அடி நீரைத் திறக்கக் கருநாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அக்டோபர் 24 முதல் 27 வரை திறக்கப்பட வேண்டிய 12,000 கன அடி நீருக்குப் பதிலாக 8,149 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது.
அதேநேரம், கருநாடகத்தின் 4 முக்கிய நீர்த்தேக்கங்களுக்கு 6.361 டி.எம்.சி நீர்வரத்து கிடைத்துள்ளது. அவற்றில் அக். 27இல் நீர் இருப்பு 52.189 டி.எம்.சியாக இருந்தது. காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடி தொடர்பாகத் தேவைப்படும் நீர் பற்றிய முழு விவரங்களையும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், காவிரி ஆணையத்தின் உத்தரவை கருநாடக அரசு முழுமையாகச் செயல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், தொடர்ச்சியாக விநாடிக்கு 3,000 கன அடி நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
காவிரி ஆணையத்தின் உத்தரவை மீறுவது, நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதற்குச் சமம் என்றும் தமிழ்நாடு அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
