கட்டணம் செலுத்தி மக்கள் பயணிக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் தரமாக இருப்பதில்லை – உயர்நீதிமன்றம்

2 Min Read
- Advertisement -

மதுரை, அக். 28- கட்டணம் செலுத்தி மக்கள் பயணிக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் தரமாக இருப்பதில்லை என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நெல்லை-தூத்துக்குடி இடையேயான தேசிய நெடுஞ் சாலையானது, அந்த வழியாக செல்லும் தாமிரபரணி ஆற்றை கடக்கிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே இருவழியிலும் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பாலம் கடந்த 2012ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அந்த பாலத்தின் உறுதித்தன்மைக்கு 100 ஆண்டுகள் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2017ஆம் ஆண்டில் அந்த பாலத்தில் 10 அடி நீளத்திற்கு கான்கிரீட் விரிசல் ஏற்பட்டு ஓட்டை விழுந்தது. பாலம் பலம் இழந்து உள்ளதால் எந்தநேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே பாலம் கட்டியதில் முறைகேடு நடந்து உள்ளது. அந்த பாலத்தை இடித்துவிட்டு புதிதாக பாலம் கட்டவும், சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே உயர்நீதிமன்றம் விசாரித்தபோது, “நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து கட்டணக் கொள்ளையடிப்பதை வாடிக்கை யாகக் கொண்டு உள்ளீர்கள். இந்தப் பாலத்தைச் சீரமைப்பது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது? என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராம கிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று (27.10.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேசிய நெடுஞ்சாலைகளை இலவசமாக மக்கள் பயன்படுத்தலாம் என்று கூறி வழங்கவில்லை. அந்த சாலைகளை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு இருக்கும்போது சாலை தரமாக ஏன் இருப்பதில்லை” என தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், ‘மேற்கண்ட பாலம் சேதமடைந்ததற்கு கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்றதுதான் காரணம் என்பதை ஏற்க இயலாது. இந்த வழக்கை பொறுத்த வரை தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்ட இயக்குநர், ஒப்பந்ததாரர் ஆகியோரை காப்பாற்றும் முயற்சிதான் நடக்கிறது’ என தெரிவித்தனர்.

விசாரணை முடிவில், ஒரு வார காலத்தில் பாலத்தை முழுவதுமாக சீரமைத்து அதுகுறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் இதுதொடர்பாக நிபுணர் குழுவை இந்த நீதிமன்றம் அமைக்கும் என அறிவுறுத்தி விசாரணையை ஒத்திவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *