திருவனந்தபுரம், பிப். 23- கேரளாவில் இருந்து இஸ்ரேலுக்கு ‘புனித’ப் பயணம் சென்ற 5 பெண்கள் மாயமாகி உள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நாலாஞ்சிரா என்ற பகுதியை சேர்ந்த பாதிரியார் ஒருவர் தலைமையில் கடந்த 8ஆம் தேதி 26 பேர் அடங்கிய குழுவினர் இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுக ளுக்கு புனிதப் பயணம் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவில் உள்ள ஒரு போக்குவரத்து நிறுவனம் செய்து இருந்தது. அந்த குழு கடந்த 14ஆம் தேதி இஸ்ரேலை அடைந்தது. என்கிரேம் என்ற சுற்றுலா மய்யத்தில் புனிதப் பயணம் சென்ற குழுவில் இருந்த 3 பேர் திடீரென காணாமல் போனார்கள். மறுநாள் பெத்லகேமில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து மேலும் 3 பேர் காணாமல் போனார்கள். இவர் களில் 5 பேர் பெண்கள் ஆவர். இது குறித்து இஸ்ரேல் நாட்டு காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் காவல்துறையினர் ஓட்டலுக்கு வந்து காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர். அதைத்தொடர்ந்து புனிதப் பயணம் சென்ற குழுவினர் கேரளா திரும்பினர். இந்த நிலையில் நாலாஞ்சிரா பாதிரியார் கேரள காவல்துறை தலைமை இயக்குநர் அனில் காந்தை சந்தித்து காணாமல் போனவர்கள் பற்றி புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.