சென்னை, அக்.26- தி.மு.க., – அ.தி.மு.க., ஆட்சிகளில், ஆவினில் அறிமுகம் செய்யப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பது, நுகர்வோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘ஆவின்’ வாயிலாக நாள்தோறும், 35 லட்சம் லிட்டர் பால், மாநிலம் முழுதும் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
அந்த பால் பதப் படுத்தப்பட்டு, கொழுப்புசத்து அடிப்படையில், தரம் பிரித்து, விலை நிர்ணயம் செய்து, பாக்கெட்டுகளில் அடைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனைக்கு போக எஞ்சிய பாலில் இருந்து, தயிர், பனீர், வெண்ணெய், நெய், லஸ்ஸி, மோர், யோகர்ட், பால் பவுடர் என, 230க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
கடந்த, தி.மு.க., – அ.தி.மு.க., ஆட்சிகளில், படிப்படியாக பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கப் பட்டது. இதன் வாயிலாக , ஆவினுக்கு மாதம், 60 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்து வந்தது.
சென்னையில் நாள்தோறும், 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான, பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாகின. தற்போது ஆவினில், 100க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக, நுகர்வோர் மத்தியில் பிரபலமான, பனீர் மற்றும் வெண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. பல வகை மில்க்ேஷக், பால் பவுடர், பாதாம், பிஸ்தா, வால்நட் மிக்ஸ் பவுடர், குக்கீஸ், சாக்லேட் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆவினுக்கு பொருட்களை வாங்க, ஆர்வமுடன் செல்லும் நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
குஜராத் அமுல், கருநாடகா நந்தினி பால் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியாகும் பொருட்கள் விற்பனை, தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.
ஆவின் விற்பனை சந்தையை, ஆந்திராவின் தனியார் பால் தயாரிப்பு நிறுவனங்கள் மெல்ல கையகப்படுத்தி வருகின்றன.
இதே நிலை தொடர்ந்தால், ஆவினை இழுத்து மூடும் நிலை உருவாகி விடும். அதை தவிர்த்து, ஆவினை பழைய நிலைக்கு கொண்டு வர, முதலமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில்
இரு அமைச்சர்களுடன் காங்கிரஸ் திருப்தி அடையவில்லையாம்!
சென்னை, அக். 26- தமிழ்நாட்டில் இரண்டு அமைச்சர்கள் கிடைத்து விட்டதற்காக காங்கிரஸ் கட்சி திருப்தி அடைந்துவிடவில்லை என சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்தார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைப்பது தான் எங்களது கனவு. கட்சியை வளர்த்து வலுப்படுத்துவதே எங்களது நோக்கம். இரண்டு அமைச்சர்கள் கிடைத்து விட்டார்கள் என்பதற்காக நாங்கள் திருப்தி அடைந்துவிடவில்லை.
ஒவ்வொரு 10 வாக்குச்சாவடிகளுக்கும், ஒரு தலைவர் என்ற அடிப்படையில் கட்சியை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தவெக – காங்கிரஸ் இடையே எந்தவித கருத்துமோதலும் இல்லை. லஞ்சம், ஊழல் இல்லாத அரசு தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது.
மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் எங்களது பணி. சட்டம் ஒழுங்கு சரியில்லை எனப் பொதுவாக ஓர் அரசின் மீது குற்றம்சாட்டுவது சரியான அணுகுமுறை அல்ல. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் கிடையாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தை ரூ.200 கோடி மதிப்பீட்டில் ஒன்றிய அரசு நிதியுதவியுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
சுற்றுலாச்
செல்ல வேண்டாம்!
செல்ல வேண்டாம்!
அரசு எச்சரிக்கை!
நாகர்கோவில், அக். 26- அதி தீவிர கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் உதகை, கொடைக்கானல், குமரிக்கு சுற்றுலா செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “நீர்நிலைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால், அருவிகளில் குளிப்பதையும், ஆறுகள் மற்றும் அணைகளின் அருகே செல்வதையும் தவிர்க்க வேண்டும்” என்றார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறைக் கண்காணிப்பில் ஈடுபட்டு சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
