உலகப் பொருளாதாரம் பலவீனமடைந்து வரும் சூழலில், அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் கடுமையான பொருளாதார மந்தநிலை (Recession) வரப்போகிறது; அதற்காக இந்தியர்கள் அனைவரும் அவசரகாலத் திட்டங்களை தயார் செய்து வருகிறார்கள் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது.
இதற்கிடையே, இந்தியாவில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதும் பொதுமக்கள் மத்தியில் இந்த அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, எல்நினோ உள்ளிட்டவை இதற்குக் காரணமாக உள்ளது. நிஜமாகவே இந்தியப் பொருளாதாரம் ஆபத்தில் இருக்கிறதா? ஒன்றிய அரசின் தற்போதைய புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன? விரிவாகப் பார்ப்போம்.
23 மாதங்களில் இல்லாத பணவீக்கம்
மத்திய புள்ளியியல் அமைச்சகம் அக்டோபர் 12, 2026 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5.54% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 23 மாதங்களில் இல்லாத மிக உயர்ந்த அளவாகும். இதற்கு முக்கியக் காரணம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுதான். நாட்டின் உணவுப் பணவீக்கம் 7.74% ஆக எகிறியுள்ளது.
எல் நினோ தாக்கம்
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றமான ‘எல் நினோ’ நிகழ்வு, இந்தியாவைத் தாண்டி உலகளாவிய விவசாயத் துறையிலும் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் நேரடி விளைவுகள் வருமாறு:
மழைப்பொழிவு பற்றாக்குறை
இந்தியா உள்ளிட்ட ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பருவமழை தீவிரமடையாமல் பொய்த்துப் போவது அல்லது தாறுமாறாகப் பெய்வது போன்ற காரணங்களால் நெல், கோதுமை, சோளம் மற்றும் பருப்பு வகைகளின் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு உணவுப் பொருள் தட்டுப்பாடு
முக்கிய வேளாண் விளைபொருள் உற்பத்தி நாடுகளான ஆஸ்திரேலியா, தெற்காசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் நிலவும் வறட்சி நிலை காரணமாக உலகளாவிய உணவு தானியங்களின் இருப்பு குறைந்து, பன்னாட்டு சந்தையில் உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
விவசாயிகளின் பொருளாதாரச் சுமை
வானிலை மாற்றத்தினால் ஏற்படும் திடீர் வெள்ளம் மற்றும் கடுமையான வறட்சி காரணமாகப் பயிர்கள் நாசமடைவது விவசாயிகளைச் கடன் சுமையில் ஆழ்த்துவதுடன், ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பணவீக்கத்தை மேலும் தூண்டிவிடுகிறது.
இங்குதான் நாம் ஒரு முக்கியப் பொருளாதாரப் புரிதலைப் பெற வேண்டும். விலைவாசி உயர்வும், பொருளாதார மந்தநிலையும் ஒன்றல்ல. பொருளாதார ரீதியாக ‘மந்தநிலை’ என்பது ஒரு நாட்டின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி முற்றிலும் முடங்கி, தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் மைனஸில் செல்வதைக் குறிக்கும். ஆனால், இந்தியாவின் நிலை அப்படி இல்லை. பன்னாட்டு நாணய நிதியம் தனது அக்டோபர் 2026 அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிவிகிதம் (ஜிடிபி) 7.0% ஆக இருக்கும் என்று கணித்துள்ளது.
உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியாவே முதலிடத்தில் நீடிக்கிறது என்பதை பன்னாட்டு அமைப்புகள் பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, இந்தியாவுக்கு மந்தநிலை வரும் என்ற அச்சம் தேவையற்றது. நமக்கு இருப்பது மந்தநிலை அல்ல, விலைவாசி உயர்வு மட்டுமே. இந்தியாவில் அவசரகாலத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்ற செய்தி ஆங்கில ஊடகங்களில் வெளியானதற்கு இந்த விலைவாசி உயர்வு மற்றும் பருவமழை சவால்கள்தான் காரணம். ஒன்றிய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இணைந்து இந்த அவசரகாலத் திட்டங்களை இரு முக்கிய காரணங்களுக்காக மட்டுமே வகுத்துள்ளன:
விவசாயப் பாதுகாப்பு
பருவமழை பற்றாக்குறையால் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு மேலும் அதிகமாகாமல் தடுக்க நாட்டின் 315 மாவட்டங்களில் அவசரகாலத் திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது.
சந்தை மேலாண்மை
வெங்காயம், சமையல் எண்ணெய், அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டைக் குறைக்க இறக்குமதி மற்றும் இருப்புக் கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியப் பொருளாதாரம் இடியைத் தாங்கும் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருந்தாலும், 23 மாதங்களில் இல்லாத இந்த பணவீக்கம் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களின் பட்ஜெட்டை நிச்சயம் பதம் பார்த்து வருகிறது.
அரசு நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க அவசரகாலத் திட்டத்தை வைத்திருப்பதுபோல, நாமும் நமது குடும்ப பட்ஜெட்டுக்கு ஒரு தற்காப்புத் திட்டத்தை வைத்திருக்க வேண்டும். விலைவாசி உயரும் இந்த நேரத்தில், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, அவசரகால நிதிச் சேமிப்பை (Emergency Fund) உயர்த்துவதே இந்த தற்காலிக பொருளாதாரப் புயலைக் கடப்பதற்கான புத்திசாலித்தனமான வழியாகும்.
நன்றி: ‘இந்து தமிழ் திசை’, 26.10.2026
