(18-02-2023 ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்)
சுதந்திரமாக விவாதிப்பதற்கும் கலந்துரையாடலுக்குமான
ஓர் அமைப்பாக நாடாளுமன்றம் தொடர்ந்து இருக்கவேண்டும்
பா.ஜ.க. உறுப்பினர் ஒருவரும் ஒன்றிய அமைச்சர் ஒருவரும், எழுப்பிய நாடாளுமன்ற அவையின் உரிமை பிரச்சினைக்கு பதில் அளித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிப்ரவரி 7 ஆம் தேதி மக்களவையில் தான் பேசியதையே உறுதிப்படுத்திக் கூறியுள்ளார். மிகமிக முக்கியமான பிரச்சினைகள் பற்றிய கேள்விகளுக்கு பதில் கேட்கும் நாடாளுமன்ற உறுப்பினரின் கடமையை ஆற்றிய தற்காக அவர் மீது அவையின் மாண்பை அவமதித்துவிட்டார் என்று உரிமை பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது விந்தையாக இருக்கிறது.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசும்போது, தொழிலதிபர் கவுதம் அதானியுடன் பிரதமர் மோடிக்கு உள்ள தொடர்பு பற்றி ராகுல் காந்தி குறிப்பிட்டது அவையின் நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டது. நாடாளுமன்ற மாண்பு என்ற பெயரில் ஓர் உறுப்பினரின் உரிமைகள் மறுக்கப்படும்போது, அவை உரிமை மீறல் என்ற பிரச்சினையே, அரசின் ஒரு எதேச்சதிகாரக் கருவியாக மதிப்பிழந்து போக செய்கிறது. அதானி குழுமத்தினர் பெற்று வரும் அரசின் ஆதரவைப் பற்றிய மிகமிக முக்கியமான சில கேள்விகளை ராகுல் காந்தி எழுப்பினார். இந்தக் குழுமத்தின் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் உடைமைகள் பற்றிய மோசடிகள், நிறுவனத்தின் பங்குகளை குறைந்த விலைக்கு விற்ற ஹின்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து இந்த விவகாரம் ஒரு புயலின் கண்ணில் மய்யம் கொண்டு இருக்கிறது. அந்த கேள்விகளுக்கு அரசு எந்த வித பதிலும் அளிக்கவில்லை. அதற்கு மாறாகவும், அனைத்துக்கும் மேலாகவும், எதிர்க் கட்சித் தலைவர் தலைமேல் அவை உரிமை மீறல் என்ற கத்தியைத் தொங்கவிட்டு; தாக்குதல் நடத்தப்படுகிறது. மக்களவை தலைவர் மற்றும் மாநிலங்கள் அவை தலைவர் ஆகியவர்களிடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பது எல்லாம், குறிப்பாக அரசின் இதர துறைகளுடன் தொடர்பு கொண்டு செயல்படும்போது, நாடாளுமன்றத்தின் கவுரவத்தை அவர்கள் பாதுகாக்க வேண்டும் என்பதுதான்.
அதானி விவகாரம் பற்றிய நாடாளுமன்ற விவாதங்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால், ஏற்றுக் கொள்ள இயலாததாகவும், பயன் அற்றதாகவும் ஆக்கப்பட்டுவிட்டன. இவ்வாறு சட்டமன்றத் துறை மீது நிர்வாகத் துறை கொண்டுள்ள தவறான, மோசமான ஆதிக்கப் போக்கு சில மாநில அரசுகளின் நிர்வாகத் துறையிலும் பின் பற்றப்பட்டு வருகிறது. சில மாநில முதலமைச் சர்கள் தங்கள் சட்டமன்றக் கட்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, எதிர்க் கட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவது, சட்டமன்ற நடவடிக்கைகளையே தங்கள் விருப்பப்படி நடத்துவது, ஆவணங்களில் பதிவு செய்வது, நீக் குவது போன்று அசாதாரணமாக அதிகாரங் களைப் பயன்படுத்தி வருகின்றனர். சட்டமன்றக் கூட்டங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதுடன், விவாதங் களும் ஒப்புக்கு நடத்தப்படுபவையாகவும், தரம் தாழ்ந்தவையாகவும் ஆகிவிட்டன. புகழ் பெற்ற தலைவர்கள் இப்போது என்ன செய் கிறார்கள் என்றால், தாங்கள் மக்களுக்கு நேரடியாக பதில் கூறுவதற்கு மட்டுமே கட்டுப் பட்டவர்கள் என்றும், மக்கள் பிரதிநிதிகளுக்கு பதில் கூறுவதற்குக் கடமைப்பட்டவர்கள் அல்ல என்றும் கூறி வருகின்றனர். பிப்ரவரி 8 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, தான் 140 கோடி மக்களின் ஆசியைப் பெற்றுள்ளதாக பெருமைப்பட்டுக் கொண்டார். அதானி குழுமம் பற்றிய ஹின்டன்பர்க் அறிக்கை பற்றி எழுப்பப்பட்ட சரமாரியான கேள்விகளுக்கு இன்னமும் அரசு எந்தவித பதிலையும் அளிக்காமல் உள்ளது. தங்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவே அரசு தங்களின் செயல்களுக்கு பொறுப்பேற்று பதில் சொல்லவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான பாலமாக சட்டமன்றம் இயங்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். தனது கடமைப்படி ராகுல் காந்தி நாடாளு மன்றத்தில் அரசிடம் சில முக்கியமான கேள்விகளைக் கேட்டுள்ளார். அவ்வாறு கேட்கும்போது, நாடாளுமன்ற நியதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவருக்குக் கூறப்பட்டுள்ளது, தடம் புரண்ட ஒரு வழியாகும். ஆனால், அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அரசு கட்டாயமாக பதில் அளிக்கத்தான் வேண்டும். நாடாளுமன்றத்தின் அதிகாரம் சீரழிக்கப் பட்டு வருகிறது என்பதற்கு இதுவே தக்க சான்றாகும். அவ்வாறு நடைபெறாமல் இருப்பது உறுதிப்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.
நன்றி: ‘தி இந்து’ 18-02-2023
தமிழில் : த.க.பாலகிருட்டிணன்