ஜாதிப் பாகுபாட்டால் பள்ளி மாணவர் தற்கொலையா! வெட்கித் தலை குனிய வேண்டாமா? உரிய உடனடி நடவடிக்கை அவசியம், அவசரத் தேவை! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கோவை மாவட்டம், பீளமேடு பகுதியைச் சேர்ந்த வரும், கோவை, அவிநாசி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்புப் படித்து வந்த மாணவருமான 16 வயது அகிலன் அக்டோபர் 21 ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பேரதிர்ச்சிக்குரியதாகும். கல்வி கற்கும் இடத்தில், ‘மாட்டுக்கறி சாப்பிடுவோர் யார்?’ என்று கேள்வி எழுப்பி, அதன் மூலம் ஆசிரியரே பாகுபாட்டை உண்டாக்கும் சூழலை உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறதே, என்ன கொடுமை! இதையொட்டி, மாணவர்கள் மத்தியில் எழுந்த உரையாடலும், தந்த மன உளைச்சலும் ஒரு மாணவரின் உயிரைப் பறித்திருக்கிறது என்றால், ஜாதியின் பெயரால் எத்தகைய கொடுமை இன்னும் இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்பது மனிதகுலத்துக்கே வெட்கமானது இல்லையா?
இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்
இதற்கு உடந்தையாகவும், இதை மறைக்கும் வகையிலும் செயல்பட்டவர்கள் அனைவர் மீதும் நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி வளாகங்களில் ஜாதி உணர்வுடன் நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் பற்றி அவ்வப்போது அறிகிறோம். அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றாலும், இன்னும் ஜாதிய மனநிலையில் இருந்து அவர்கள் விடுபடவில்லையென்றால், முதலில் பாடம் நடத்தப்பட வேண்டியது யாருக்கு? சமூகப் பார்வையோ, சிந்தனையோ இல்லாமல் ஜாதி, மத வெறியுடன் நடந்து கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் முறைகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
மாணவர்கள் மத்தியில் ஜாதி ஒழிப்புக் கருத்துகள், பெண்ணுரிமைக் கருத்துகள், சமத்துவக் கருத்துகள் பரப்பப்பட வேண்டும். வெறும் ஏட்டுச் சுரைக்காய் அவர்களை மனிதர்களாக்காது! இவற்றுக்கு வழி வகுக்காமல், இச் சமூகத்தை நம்மால் காக்க முடியாது. ஜாதி உள்ளிட்ட போதைகளை மாணவர்களிடமிருந்து ஒழிக்கும் பணி முதன்மையானது.
நீதி கிடைக்க வழி செய்யவேண்டும்
உரிய உடனடி சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்ப தில் அரசு ஒருபோதும் தாமதிக்கக் கூடாது. சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடும் தோழர்கள் மீது நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்த்து, நீதி கிடைக்க வழி செய்யவேண்டும்.
அருமை மாணவச் செல்வம் அகிலனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் நமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜாதி ஒழிப்புப் பணியில் முன்னிலும்
வேகமாய் ஈடுபடுவோம்!
ஜாதியால் பாகுபாடுகளுக்கு உள்ளானால், அந்த ஜாதியை மாய்க்கும் பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமேயொழிய, தம்மை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று மாணவச் செல்வங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
ஜாதிக்கு அடையாளம் உண்டா? ஆனால், ஜாதியை அடையாளப்படுத்துகிறார்கள்!
ஜாதி உணர்ச்சி வளர வளர, இன உணர்ச்சியையும், இனமான உணர்ச்சியையும் இழந்து, இன உரிமையைப் பறிகொடுக்கும் நிலைதான் ஏற்படும்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!
ஆற்றாத இந்தத் துயரைப் பாடமாக ஏற்று, ஜாதி ஒழிப்புப் பணியில் முன்னிலும் வேகமாய் ஈடுபடுவோம்.
கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் உரிய களப் பணியை மேற்கொள்வர்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
23.10.2026
