ஒரு ஊரே திரண்டு இஸ்லாத்தை ஏற்ற கதை தெரியுமா? இது ஒன்றும் 8/9 ஆம் நூற்றாண்டுகளில் நடந்த வரலாறு அல்ல. சென்ற நூற்றாண்டில் இன்னும் சொல்லப்போனால் 45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாறு. தமிழ்நாட்டின் திருநெல்வேலி (இன்றைய தென்காசி) மாவட்டத்திலுள்ள செங்கோட்டை அருகே அமைந்திருக்கும் ‘மீனாட்சிபுரம்’ என்ற சிறிய கிராமம், 1981-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த இந்திய நாட்டின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது.
1981 பிப்ரவரி மாதம் (குறிப்பாக பிப்ரவரி 19 அன்று), மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 180-க்கும் (1,100 பேர் என்று ஒரு ஆதாரம் குறிப்பிடுகிறது) மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், நீண்ட கால சமூக அமுக்கங்கள், தீண்டாமை மற்றும் மனித மரியாதையற்ற சூழல்களுக்கு எதிராக ஒரு வரலாற்று முடிவு எடுத்தார்கள். தங்களின் மத அடையாளத்தை மாற்றிக்கொண்டு, தாங்களாகவே முழு விருப்பத்துடன் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
இது ஏதோ ஓர் இரவில் அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல; தலைமுறைகளாகச் சுமந்து வந்த ஜாதிய அடக்குமுறைகளும், மனிதனுக்குரிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட வேதனைகளும் அந்த எளிய மக்களை ஒரு மாற்று வழியைத் தேடச் செய்தன. இஸ்லாத்தின் அடிப்படைச் சமத்துவக் கொள்கை — ‘இறைவன் முன்னால் அரபியும் இல்லை, அஜமியும் இல்லை; கறுப்பனும் இல்லை, வெள்ளையனும் இல்லை; அனைவரும் சமம்’ என்ற போதனை — அவர்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்தது. அப்படித் தொடங்கிய அந்த வரலாற்று மாற்றம், இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் தளத்தில் மிகப்பெரிய பூகம்பத்தையே உருவாக்கியது.
மீனாட்சிபுரத்தில் நடந்த இந்த மாபெரும் மன மாற்றம், டில்லி பாராளுமன்றம் வரை எதிரொலித்தது. தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் நடந்த நிகழ்வு தேசியச் செய்திகளின் முதலிடத்தைப் பிடித்தது. நாட்டின் மூத்த தலைவர்களும், எதிர்க் கட்சித் தலைவர்களான அடல் பிகாரி வாஜ்பாய் போன்றோரும், ஒன்றிய அமைச்சர்களும் உட னடியாக மீனாட்சிபுரத்திற்குப் படையெடுத் தார்கள். கிராமத்தின் வீதிகளில் இறங்கி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.
ஒருபுறம் தேசிய அளவில் மதமாற்றத் தடைச் சட்டங்கள் குறித்தும், சமூக மாற்றங்கள் குறித்தும் கடுமையான விவாதங்கள் வெடித்தன. மறுபுறம், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலற்ற நிலைக்குச் சமூகம் என்ன பதில் சொல்லப் போகிறது என்ற கேள்வி வலுவாக எழுப்பப்பட்டது. பல இந்து அமைப்புகள் அங்குச் சென்று மக்களைச் சந்தித்து, சமத்துவத்தை உறுதி செய்வதாக வாக்குறுதிகளை அளித்து, மீண்டும் தாய் மதத்திற்குத் திரும்புமாறு கோரிக்கைகளையும் வைத்தனர். ஆனால், அந்த மக்கள் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக நின்றனர். இந்த மாற்றத்திற்குப் பிறகு, மீனாட்சிபுரத்தின் பெயர் ‘ரஹ்மத் நகர்’ என்றும் அழைக்கப்பட்டது. சமூக ஆய்வாளர்கள் பலரும் பிற்காலத்தில் மீனாட்சிபுரத்திற்குச் சென்று அங்கே வாழ்ந்த மக்களிடம் பேட்டி கண்டபோது, அவர்கள் தெரிவித்த கருத்துகள் மிகவும் ஆழமானவை.
அவர்கள் கூறுகையில் “நாங்கள் பொருளாதார ரீதியாகப் பணக்காரர்களாக மாறுவதற்காக மதம் மாறவில்லை. எங்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம் தலை நிமிர்ந்து நடக்கும் சுதந்திரமும், மனிதனாக மதிக்கப்படும் உரிமையும்தான். இஸ்லாத்திற்குப் பிறகு எங்களை யாரும் ஜாதியைக் கேட்டு இகழ்வதில்லை; பள்ளிவாசலில் எங்கள் தோள் மீது கைபோட்டுத் தொழுகிறார்கள். எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய செல்வம் இந்த ‘மனிதக் கண்ணியம்’ தான்!” என்றார்கள்.
பொருளாதார ரீதியாக அவர்கள் பெரும் கோடீஸ்வரர்களாக மாறாவிட்டாலும், சமூக ரீதியில் தங்களுக்குக் கிடைத்த அந்தச் சமத்துவமான கவுரவம் அவர்களை மனநிறைவோடு வாழச் செய்தது. கல்வி, சுயமரியாதை மற்றும் சமுதாயத்தில் சம உரிமை ஆகியவற்றை இஸ்லாமியச் சூழல் அவர்களுக்கு வழங்கியதாகப் பிற்கால ஆய்வுகள் உறுதிப்படுத்தின.
மத விவகாரங்களுக்கு அப்பாற்பட்டு வரலாற்றை அணுகும்போது, மீனாட்சிபுரம் நிகழ்வு நமக்குச் சொல்லும் பாடம் மிகத் தெளிவாகும். மனிதர்களைச் ஜாதியின் பெயரால் இழிவாக நடத்துவதும், தீண்டாமைக் கொடுமைகளுக் குள்ளாக்குவதும் ஒரு சமூகத்தை எத்தகைய விளிம் பிற்குக் கொண்டுபோய் நிறுத்தும் என்பதற்கான எச்சரிக்கை மணிேய அது.
அதே நேரத்தில், ஒடுக்கப்பட்ட மனிதர்களின் எண்ணம் எங்குச் சமத்துவத்தையும் அமைதியையும் மீனாட்சிபுரத்தையும் காண்கிறதோ, அந்தத் திசை நோக்கி அவர்கள் மாறுவதற்கான உரிமை எத்தகைய மனித உரிமையின் பால்பட்டது என்பதையும் மீனாட்சிபுரம் உலகுக்குச் உரக்கச் சொன்னது. காலங்கள் கடந்துவிட்டாலும், இந்தியச் சமூக வரலாற்றில் ‘மீனாட்சிபுரம்’ என்பது மனிதச் சமத்துவத்தைத் தேடிய ஒரு கிராமத்தின் அழியாத காவியமாக என்றென்றும் நிலைத்திருக்கும்!
முகநூலிலிருந்து
தகவல்: அ. தமிழ்ச்செல்வன், அரூர்
