சென்னை, அக். 16- எஸ்.அய்.ஆர். மூலம் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீண்டும் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை எதிர்த்து, சென்னை எழும்பூரில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய திருமாவளவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல மம்தா, பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்களும் எஸ்.அய்.ஆர். மூலம் தான் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் எனவும் திருமாவளவன் சாடி உள்ளார்.
மேலும் எஸ்.அய்.ஆர். மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் பாஜக-வின் கொள்கை எதிரிகள் எஸ்.அய்.ஆர். மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் எனவும் திருமவளவன் குற்றம்சாட்டி உள்ளார். மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டது. இதை அவரது கவனத்திற்கு எடுத்து சென்றேன். சேகர்பாபுவிடம் கூட இதுகுறித்து நான் பேசினேன். கொளத்தூரில் உங்களை தோற்க்கடிக்க சதி நடப்பதாக தெரிகிறது, ஏன் நீங்கள் தொகுதி மாறி நிற்க கூடாது? என கேட்டேன்.
அதெல்லாம் பிரச்சினை இல்லை, எஸ்.அய்.ஆர் பணிகளை கவனமாக மேற்கொண்டு வருகிறோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே இந்த எச்சரிக்கை எங்கள் கவனத்திற்கு வந்தது என திருமாவளவன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பற்றிய
அரசின் நிலைப்பாடு தவறான முன்னுதாரணம்
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

சென்னை, அக்.16 பள்ளிக்கரணை சதுப்பு நிலம் விவகாரத்தில் அரசு தவறான முடிவெடுத்திருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு விமர்சனம் செய்துள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய ராம்சார் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களில் ஒன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலம். இந்த சதுப்பு நிலங்கள் பாதிக்கும் வகையில் தவெக அரசு முடிவெடுத்திருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு விமர்சித்திருக்கிறது.
இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், “ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு முந்தைய தி.மு.க. ஆட்சியில் முன்மொழியப்பட்ட 1 கி.மீ. ‘ஜோன் ஆஃப் இன்புளுயன்ஸ்’ (ZoI) அதாவது ஏறத்தாழ 3000 எக்டேரைத் த.வெ.க. அரசு 128.19 எக்டேராகக் குறைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
ஒரு ஈரநிலம் அல்லது ஈரநிலத் தொகுப்பின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் எங்கெல்லாம் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது அது அந்த ஈர நிலத்தில் பாதிப்பை எற்படுத்துகிறதோ அப்பகுதிகள் அனைத்தும் ‘ஜோன் ஆஃப் இன்புளுயன்ஸ்’ என்கிற “தாக்க மண்டலம்” என வரையறுக்கப்பட வேண்டும். ஈரநிலங்கள் (பேணல் மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 விதிகளின்படி பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் (IMP) தயாரிக்கும் பணியை நிலையளவு கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மய்யம் (NCSCM) மேற்கொண்டு வருகிறது.
ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்படும் செயல்முறையின்போதே தாக்கமண்டலம் வரையறுக்கப்பட வேண்டும். தாக்கமண்டலத்திற்கான வழிகாட்டுதல்கள்/ஒழுங்குமுறைகளும் ஒருங்கிணநை்த மேலாண்மைத் திட்டம் (IMP) ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஆனால், ஒருங்கிணநை்த மேலாண்மைத் திட்டம் பணிகளும் தாக்க மண்டலம் வரையறுக்கும் பணிகளும் முடிவடைவதற்கு முன்னரே இடைக்கால தாக்க மண்டலத்தை 128.19 எக்டேராகச் சுருக்குவது பள்ளிக்கரணையை எவ்விதத்திலும் பாதுகாக்காது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கான IMP தயாரிக்கும் பணிகள் எப்போது முடிவடையும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.
பேராபத்தாகவே முடியும்
அதுவரைக்கும் தற்போது அரசு முன்மொழிந்துள்ள 128.19 எக்டேர் தாக்க மண்டலத்தைத் தவிர்த்து பிற பகுதிகளில் கட்டற்ற கட்டுமானப் பணிகள் நடைபெற்றால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு அது சரிசெய்ய முடியாத பேராபத்தாகவே முடியும். நாளை சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. தமிழ் நாடு அரசு முன்மொழிந்துள்ள 128.19 எக்டேர் பரப்பை தாக்க மண்டலமாக ஏற்றுக்கொண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.
தமிழ் நாட்டில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற இன்னும் பல சதுப்பு நிலங்கள் சட்டப்பூர்வமாக ஈரநிலங்கள் (பேணல் மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 விதிகளின்படி அறிவிக்கை செய்யப்பட வேண்டிய நிலையில் அரசின் இந்த நிலைப்பாடு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் அபாயம் உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கவல்ல இம்முடிவைத் தமிழ் நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
