இ.சி.ஆரில் 3.40 லட்சம் பேர் குடிநீர் கிடைக்காமல் திண்டாட்டம்! 500 மீ., குழாய் பதிக்க முடியாமல் திணறும் வாரியம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 11- ஓ.எம்.ஆர்., மற்றும் ரேடியல் சாலையில் உள்ள, அடுக்குமாடிக் குடியிருப்புகள், அய்.டி., நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக, 98 கோடி ரூபாயில் தொடங்கிய பணி, முடங்கும் நிலையில் உள்ளது. திட்டத்தில், 35 கி.மீ., நீள பணியில், வெறும் 500 மீட்டர் துாரம் குழாய் பாதிப்புக்கு, நெடுஞ்சாலை, மின் வாரியம் அனுமதி மறுப்பதால், 3.40 லட்சம் பேர் தனியாரிடம் அய்ந்து மடங்கு கட்டணம் செலுத்தி தவித்து வருகின்றனர்.

மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் இரு நிலையங்களில் இருந்து, அன்றாடம் 26 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு, தென்சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு வழங்கி வருகிறது.

இரு நிலையங்களில் இருந்து இ.சி.ஆர்., அக்கரை சந்திப்பு வரையும், அங்கிருந்து திருவான்மியூர், சோழிங்கநல்லுார், தாம்பரம் பகுதிகளுக்கும் குழாய் பதிக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் ஓ.எம்.ஆர்., மற்றும் ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் என 3.40 லட்சம் பேருக்கு தடையின்றி குடிநீர் வழங்க, அப்பகுதிகளில் குழாய் பதிக்க, 2023இல் 98 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது.

அதன்படி, சோழிங்கநல்லுார் சந்திப்பில் இருந்து, செம்மஞ்சேரி, எஸ்.ஆர்.பி.டூல்ஸ், தரமணி எம்.ஜி.ஆர்., சாலை; ரேடியல் சாலையில் கோவிலம்பாக்கம் வரை, சாலையின் இரண்டு பகுதிகளில், 35 கி.மீ., நீளத்திற்கு, 350 எம்.எம்., விட்டம் உடைய குழாய் பதிக்கும் பணி 2024இல் தொடங்கியது.

இதில், 29 கி.மீ., குழாய் பதிக்கும் பணி முடிந்தது. தரமணி, எம்.ஜி.ஆர்., சாலை, ஒக்கியம் துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதிகளில் ஆங்காங்கே குழாய் பதிக்க வேண்டி உள்ளது.

இதற்கு, சாலையில் பள்ளம் தோண்டுவதற்கு அனுமதி தராமல், சாலை மேம்பாட்டு நிறுவனம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் மின் வாரியத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் இழுத்தடிப்பதால், திட்டத்தை முழுமையாக முடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

ஓ.எம்.ஆர்., மற்றும் ரேடியல் சாலைகளில் இரண்டு கட்டங்களாக பணி முடித்து, 3.40 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், ‘வாட்டர் மீட்டர்’ பொருத்தப்பட்ட 108 குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டமிட்டோம்.

முதற்கட்டமாக, அதிக எண்ணிக்கையிலான இணைப்புகள் கொடுக்க வசதியாக, சோழிங்கநல்லுாரில் இருந்து பெருங்குடி வரை, 7.3 கி.மீ., நீளத்திற்கு குழாய் பதித்து வந்தோம். இதில், 6.8 கி.மீ., குழாய் பதிக்கும் பணி முடிந்தது. மீதம், 500 மீட்டர் குழாய் பதித்தால், 2.50 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

அணுகு சாலையில் குழாய் பதிக்க, 2024ஆம் ஆண்டு சாலை துண்டிப்பு கட்டணம், சாலை மேம்பாட்டு நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளோம். எனினும் 500 மீட்டர் நீளத்திற்கு குழாய் பதிக்க அனுமதி தரவில்லை.

ரேடியல் சாலையில் பள்ளம் தோண்ட நெடுஞ்சாலை துறையும், மின்மாற்றிகளை மாற்றி அமைக்காமல் மின்வாரியமும் இழுத்தடிக்கிறது.குடிநீர் இணைப்பு வழங்கினால், மக்கள் தனியார் லாரி குடிநீர் வாங்க வேண்டிய நிலை இருக்காது. அதனால் லாரி உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்படும் சில அதிகாரிகள், இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மெட்ரோ ரயில் பணிகளில் சாலையை சீரமைத்து வருகிறோம். குழாய் பதித்தபின் சாலையை சீரமைத்திருக்க வேண்டும். நிர்வாக ரீதியான சிலர் எடுத்த தவறான அணுகுமுறையால், தற்போது குழாய் பதிக்க அனுமதி வழங்க முடியவில்லை’ என்றனர்.

ஓ.எம்.ஆர்., பகுதி நலச்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டே, குடிநீர் இணைப்பு வழங்கி இருக்க வேண்டும். இன்னும் முடிக்காமல் இழுத்தடிப்பதால், வாரியம் வழங்கும் குடிநீர் கட்டணத்தைவிட, அய்ந்து மடங்கு செலவு செய்து தனியாரிடம் குடிநீர் பெற்று வருகிறோம். உயர் அதிகாரிகள் தலையிட்டு குழாய் பதிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’ என்றனர்.

சோழிங்கநல்லுார், பெருங்குடி மண்டலங்களில் உள்ள 20 வார்டுகளில், பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன், 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பணி தொடங்கி பல ஆண்டுகளாகியும் இன்னும் முடியவில்லை.

தனியார் கழிவுநீர் லாரி உரிமையாளர்களுக்கு சாதகமாக, குடிநீர் வாரியம், மின் வாரியம், நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

குடிநீர், கழிவுநீர்த் திட்டத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், மக்களின் செலவுகள் குறையும். இதை உணர்ந்து, த.வெ.க., அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *