“பெரியார் விருது” பெற்ற திரைக் கலைஞர் மனோரமா அவர்களின் நினைவுநாள் இன்று (10-10-2015)
தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா மன்னார்குடியில் 1943 ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் பிறந்தார். இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த இவர், தமிழ்த் திரையுலகம் தந்த முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதலமைச்சர் என்.டி.ஆர் என அய்வருடன் நடித்த பெருமைக்குரியவர்.
தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது. அவர் சுமார் 5000- த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். மேலும் “பகுத்தறிவு பகலவன்” தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் “பெரியார்” என்ற திரைப்படத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு “அம்மா” வாக நடித்து திரைப்படத்திற்கு சிறப்பு செய்தார்.
திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களால் “பெரியார் விருது” வழங்கி சிறப்பு செய்யப்பட்டார். அது மட்டுமல்லாமல், கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம சிறீ விருது’ வழங்கி சிறப்பிக்கப்பட்டார். மேலும், தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த ‘ஆச்சி’ மனோரமா 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாளில் தமது 78 ஆவது வயதில் மறைவுற்றார். ஆச்சி மனோரமா வின் இந்நினைவு நாளில் அவருடைய புகழைப் போற்றி நினைவுக் கூர்வோம்.
தகவல் : பாணாவரம் பெ. வீரமணி
