(பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்)
பகுத்தறிவை ஊட்டு பகலவன்; சூதால்
புகுத்து மடமைகள் போக்கும் – தகுதியோன்
நாத்திறத்தை தொண்டுகளை நாள்தோறும் நன்றியுடன்
ஏத்திப் புகழ்வோம் இனிது.
அண்டியிரு காரிருளை ஆழ்ந்த அறிவாலே
மண்டியிடச் செய்திட்ட மாவீரன் – பெண்ணுரிமை
தன்மானம் நாட்ட சமூகநீதித் தத்துவம்
வென்றிட்டே வாழ்ந்தார் விழைந்து.
பண்படுத்தும் நோக்கத்தில் பாரெங்கும் பேசினார்
தொண்டுசெய்தே வாழ்நாளைத் துய்த்தசீயம் – பண்பாட்டைக்
காக்க பகுத்தறிவுக் கண்ணோட்டம் தேவையென்ற
நாத்திக ஆசானை நத்து.
மூத்திரச் சட்டிதூக்கும் முற்றுநோய் காலத்தும்
சூத்திரத் தன்மையொழி தொண்டுசெய்தார்! – மூத்தவர்
ஆர்த்துக் களங்காண் அரிமா! அவர்வழியில்
போர்முரசு கொட்டு புகழ்ந்து.
மனிதநேயம் போற்றிய மாமனிதர்! பாருக்கு
இனிதாம் பகுத்தறிவை ஈந்தார்! – முனிந்து
நரித்தனம் செய்தோரை நாளும் நசுக்கு
பெரியாரின் பெருமைகளைப் பேசு!
தமிழர்க்குத் தன்மானம் தந்த தலைவர்!
இமிழ்கடல்சூழ் நாட்டுமக்கட்(கு) ஏந்தல்! – குமித்துவைத்த
குப்பை மடத்தனக் கொள்கை எதிர்த்தகோமான்
தப்பாத கொள்கைகளைத் தாங்கு!
‘எல்லோர்க்கும் எல்லாமும்’ என்ற அறம் நாட்டிலெங்கும்
இல்லாமை போக்கிநிற்கும் என்றுரைத்தார் – நல்மனத்தைக்
கொண்டிருந்த பேராசிரியர் கோட்பாட்டை நாடெல்லாம்
கொண்டுசேர்க்கும் நற்பணியைக் கொள்!
பெண்டிரெல்லாம் கல்வி கற்றுப் பேரறிவு பெற்றுவாழக்
கண்டகனா நாட்டினிலே காண்கின்றோம்! – எண்ணமெல்லாம்
ஏற்றத்தைக் கொண்டிருந்த இன்பண்பர் என்றென்றும்
போற்றுதலை நன்றியிலே பூட்டு.
தரணிவாழ் மக்களுக்குத் தன்மானம் ஊட்டு
புரவலராய் வந்து புரந்தார் – உரமாய்
பகுத்தறிவைத் தந்திட்ட பண்பர்! பெரியார்
வகுத்தளித்த கொள்கையில் வாழ்!
தந்தை வளர்த்திட்ட தன்மதிப்புப் பற்றென்றும்
சிந்தையில் நிற்றல் சிறப்பாகும் – வந்தவர்
நிந்தனை செய்வதை நீளா தொழிக்கவே
தந்தை அறிவையே சாற்று!
தன்மானம் ஊட்டவே தன்வாழ்வைத் தந்திட்டார்
குன்றுயர் கொள்கையின் கோமானார்! – என்றென்றும்
நின்றொளிரும் நீள்சுடராய் நேர்மை இலக்கணமாய்
கன்னலாய் வாழ்ந்தார் கனிந்து.
கொள்கைதந்தார் நற்பண்பு கொள்தலைவ ரும்தந்தார்
பள்ளத்தில் வாழ்ந்தோரைப் பாதுகாக்க – வெள்ளம்போல்
தோழர்கொள் நல்லியக்கம் தோற்றுவித்துத் தந்துசென்றார்
வேழப் பெரியார்நம் வீறு!
