1958 டிசம்பர் 24இல் நான் 8 வயது சிறுவன். என் வீட்டின் முன்னால் முற்பகல் 12 மணி அளவில் ஒரு வேன் வந்து நின்றது. அதிலிருந்து தந்தை பெரியார் அவர்கள், கைத்தடியுடன், அன்னை மணியம்மையார், ஒரு நாய், சில சிறிய குழந்தைகள், திருமணமான புது இணையர் கி.வீரமணி அவர்கள், மோகனா அம்மையார் அவர்கள் என எங்கள் இல்லத்தில் விருந்து. வடசேரி சின்னராசிங்கன் தெருவில் மக்கள் கூட்டம்.
நான் கருப்புச்சட்டையுடன் தந்தை பெரியார் அவர்களைப் பார்த்தேன். வியந்தேன். நல்ல கலர், கருப்புச் சட்டை, கைலி.
பசுமரத்தாணி போல் பதிந்தது
தந்தை பெரியார் எங்கள் இல்லம் வருவதற்கு முன்னால் என்னையும், எனது தந்தையார் என்.சங்கரநாராயணன் அவர்களையும், மிகவும் கீழ்த்தரமாகப் பேசினார்கள். “கிழவன், வளர்த்த மகளைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கா உங்கள் அப்பா சாப்பாடு கொடுக்கிறார்” என்று.
பார்த்தேன்… மக்கள் சொன்னது பொய் என்று எனது மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தது.
தந்தை பெரியார் மீது பாசம். அவர் மீது மிகுந்த பற்றுடையவன் ஆனேன். தீவிரத் தொண்டன் ஆனேன். நாத்திகனானேன்.
மறுபடியும் 14.10.1960இல் தந்தை பெரியாருக்கு எங்கள் வீட்டில் மதிய விருந்து. திராவிடர் கழக உறுப்பினர் ஆனேன் அன்று.
சிறு வயதிலிருந்து ‘விடுதலை’ படித்ததினால், எங்கள் இல்லத்திற்கு வரும் கழகத் தொண்டர்கள் முகமதப்பா, கே.பிரபாகரன் ஆகியோர் இறுதிக் காலம் வரை நண்பர்கள்.
கோட்டாறு வணிகர்கள், வடசேரி வசதிப் படைத்தவர்கள் அனைவரும் தற்போது நன்றாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் திராவிடர் கழகத்தவர்கள்.
அய்யாவைப் பற்றிக் கூறுவார்கள். அவர் சிக்கனக்காரர், நேரம் தவறாதவர் என்று. அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் வந்தால் கழகத் தொண்டர்கள் வந்து அய்யாவைச் சந்திப்பார்கள் என்றும், குடும்பத்தைப் பற்றி அவர் விசாரிப்பார் என்றும், சுற்றுப் பயணம் செல்லும் தூரம் எவ்வளவு என்று கேட்டறிந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அய்ந்து நிமிடங்களுக்கு முன்பே மேடையில் தோன்றுவார் என்றும் கூறுவார்கள்.
நானும், தந்தை பெரியார் அவர்கள் நாகர்கோவில் கூட்டங்களுக்கு வரும் போதெல்லாம் மேடையின் முன் அமர்ந்து அவர் பேச்சைக் கேட்பேன். கடைசியாக 1973ஆம் ஆண்டு கைத்தறிக் கண்காட்சி நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெற்றது. அதில் தந்தை பெரியார் அவர்கள் பேசினார்கள்.
முதல் போராட்டம் எது?
1973ஆம் ஆண்டு மதுரையில் திராவிடர் கழக மாநாடு – போக நினைத்தேன், போக முடியவில்லை. அவர் இறந்ததும் தனிப் பேருந்தில் சென்றார்கள். அதிலும் கலந்துகொள்ள முடியவில்லை. 1974ஆம் ஆண்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் போராட்டம். நாகர்கோவில் தலைமை அலுவலகம் முன்! அதுதான் என்னுடைய முதல் போராட்டம். அதுமுதல், 19.8.2026 ஆசிரியர் கலந்துகொண்ட நெல்லை திறந்தவெளி மாநாடு, 11.09.2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நீக்கிட சூழ்ச்சி செய்யும் ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் வரை கலந்துகொண்டேன். கல்லூரி, பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டேன்.
முதன்முதலில் 1978ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பெரியார் நினைவிடம் கண்டு வியந்தேன். ஊர்வலத்தில் கலந்துகொண்டு சென்னை எல்.அய்.சி.யின் முன்னால் உள்ள கலைஞர் சிலையைக் கண்டேன். பின்பு நிறைவு விழா 1979ஆம் ஆண்டு தஞ்சையில் நடந்தது, சென்றேன். திருச்சியில் நடந்த கழக மாநில மாநாடு, பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு மாநாடு இராமேசுவரத்தில் நடந்தது, நெல்லையிலும் நடந்தது. அவற்றில் எல்லாம் கலந்துகொண்டேன்.
1995இல் லக்னோவில் நடைபெற்ற பெரியார் மேளாவிலும் கலந்துகொண்டேன். (17.9.1995).
சிறைச்சாலையில்…
1996ஆம் ஆண்டு 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் 15 நாள்கள் இருந்தோம்.
2004ஆம் ஆண்டு ஆடி 1ஆம் நாள் கும்பகோணம் பள்ளி எரிந்த அன்று நாகர்கோவிலில் சுவர் எழுத்து எழுதியதற்காகக் கைது செய்யப்பட்டு நாங்குநேரி சிறையில் 28 நாள்கள் இருந்தேன். 22.1.2005 – தென் மண்டல திராவிடர் எழுச்சி மாநாடு கோவில்பட்டியில் நடைபெற்றது. ஆசிரியர் அவர்களால் பாராட்டப்பட்டேன்.
எனது இல்லத்தின் பெயர் ‘தந்தை பெரியார் இல்லம்’. எனது மூத்த மகளின் பெயர் எஸ்.என்.நாகம்மையார். ஆசிரியர் அவர்களால் அப்பெயர் வைக்கப்பட்டது.
இரண்டாவது மகள் எஸ்.என்.பெரியார் செல்வி. ஆசிரியர் அவர்களுக்கு தஞ்சையில் எடைக்கு எடை தங்கம் கொடுத்த அடுத்த நாள் பள்ளியில் சேர்த்தேன்.
எனது இரண்டு பெண் குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைத்தேன். நிறைய போராட்டங்களில் கலந்துகொண்டு காலையில் கைதாகி மாலையில் விடுதலையாகி இருக்கிறேன். இவ்வாறாக நான் அசைக்க முடியத நாத்திகன். மறைந்த துரை.சக்கரவர்த்தி அவர்கள் என்னை “அய்யாவின் முரட்டு பக்தர்” என்பார்.
1978ஆம் ஆண்டு தந்தை பெரியார் நூற்றாண்டு துவக்கத்தில் வடசேரி பெரியார் சதுக்கத்தில் கடவுள் மறுப்புடன் கொடிக்கம்பம் வைத்து அங்கு தந்தை பெரியார் பிறந்த நாளில் ஆண்டுதோறும் கொடியேற்றி இனிப்பு வழங்கி வருகிறேன்.
இப்படிக்கு,
எஸ்.நல்லபெருமாள், வடசேரி, நாகர்கோவில்.
