சென்னை, பிப். 27- தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று பல்கலை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் சுமார் 3 லட்சம் பேர் இருக்கின்றனர். அவர்கள் பல்கலைகழகம் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது மாற்றுத்திறனாளிகள் என குறிப்பிட்டு நடத்தப்படுகிறது. இந்நிலையில் அந்த மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கையின் போது மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும் என்றும் தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி நவீன தீண்டாமையை கடைப் பிடிப்பதை தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது.இந்த புதிய பல்கலை சட்ட திருத்தம் மூலம் மாணவர் சேர்க்கையின் போது மாற்றுத் திறனாளி வகையை கேள்வியாக கேட்பது தவிர்க்கப்படும். மேலும் விண்ணப்ப பதிவு, தேர்வுக்கான சலுகை கேட்கும் போது மாற்றுத்திறனாளி என குறிப்பிட்டு மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளின் செவித் திறன்களை பரிசோதனை செய்ய மாவட்டந்தோறும் சிறப்பு பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.