டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* எதிர்க்கட்சிகளின் போராட்டம் தீவிரம் – வாக்குத் திருட்டுக்கு எதிராக!: வாக்குத் திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு (SIR) எதிராக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டில்லி ராஜ்காட்டில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* மேற்கு வங்க இடைத்தேர்தலில் பாஜக வாக்குத் திருட்டு – மம்தா குற்றச்சாட்டு! மேற்கு வங்க இடைத் தேர்தல்களில் பாஜக பெருமளவில் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக மம்தா குற்றஞ்சாட்டினார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க டில்லி செல்லும் அவர், அக்டோபர் 10 ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
* தீப்கே, துருவ் ரதீ இணைந்து எஸ்.அய்.ஆர்-க்கு எதிராக போராட்டம்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே, யூடியூபர் துருவ் ரதீ, திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் பெங்களூருவில் போராட்டம் நடத்தி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை (SIR) ரத்து செய்யவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவும் வலியுறுத்தினர்.
* அய்தராபாத்தில் எதிர்க்கட்சிகள் பேரணி – அமைச் சர்கள் கைது! வாக்குத் திருட்டு மற்றும் எஸ்.அய்.ஆர் நடவடிக்கைகளுக்கு எதிராக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அய்தராபாத்தில் பேரணி நடத்தின. லோக் பவனை நோக்கிச் சென்ற அமைச்சர்கள் மற்றும் தலைவர்களைப் காவல் துறையினர் தடுத்து, பலரைக் கைது செய்தனர்.
* தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை! தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்து, எஸ்.அய்.ஆர். நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என ரேவந்த் வலியுறுத்தினார். வாக்குரிமையைப் பாதுகாக்கத் தவறினால், ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதையும் என்றும், வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான பெயர்கள் நீக்கப்படுவதாகவும் அவர் குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் பிரதிநிதித்துவம்: ஒடிசா ஆணையம் ஆய்வு! சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (SEBC) உள்ளாட்சி அமைப்புகளிலான அரசியல் பிரதிநிதித்துவத்தை ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பிரமத் பட்நாயக் தலைமையில் ஒடிசா அரசு ஆணையம் அமைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பெரம்பூர் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: அக்டோபர் 14இல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யக் கோரி வாக்காளர் எஸ். தினேஷ் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 14-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கிறது. சொத்துகள் குறித்த முழுமையான விவரங்களை வெளியிட தவறியதன் மூலம் வாக்காளர்களை தவறாக பாதித்ததாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தி இந்து:
* “அம்பானி இந்தியாவின் முதலாளியா?” – எலான் மஸ்க் கேள்வி! இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை தடுக்கச் சில பெருமுதலாளிகள் முயற்சிப்பதாக ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் குற்றஞ்சாட்டினார்.
* தஞ்சாவூர் ரயில் சந்திப்பில் ஹிந்தி பெயர் பலகை அகற்றம்! தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பையும், திமுகவின் கண்டனத்தையும் தொடர்ந்து, தஞ்சாவூர் ரயில் சந்திப்பின் இரண்டாவது நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த ஹிந்தி பெயர்ப்பலகையை ரயில்வே நிர்வாகம் அகற்றியது. பெயர்ப்பலகையை உடனடியாக அகற்ற கோரி தமிழ் அமைப்புகள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
* எஸ்.அய்.ஆர் குறித்து திருமாவளவனின் கருத்துகள்: விசிக நிர்வாகிகள், தொண்டர்களிடையே குழப்பம்! தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெகவின் வெற்றிக்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தமே (SIR) காரணம் எனக் கூறி, தொல். திருமாவளவன் தேர்தல் வெற்றி குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். எஸ்.அய்.ஆர்-இன் தாக்கம் குறித்து விசிகவின் மாறுபட்ட கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன; அதேவேளையில், விசிக தவெக தலைமையிலான அமைச்சரவையில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* கருநாடக அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடு: தேர்வர்களுக்கு வினாத்தாள், விடைகள் வழங்கியதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு! கால்நடை மருத்துவ அலுவலர் தேர்வுக்கு முந்தைய நாள், தேர்வர்கள் விடுதிகள் மற்றும் AIRBNB தங்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வினாத்தாள் மற்றும் விடைகள் தலா ₹40 லட்சத்துக்கு வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கருநாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா மற்றும் உறுப்பினர் பி.வி. கீதா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
– குடந்தை கருணா
