சென்னை, அக். 09- ‘அனைத்து ஜாதியினருக்கும் உடனடியாக அர்ச்சகர் பணி நியமனம் வழங்க வேண்டும்’ என உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று (8.10.2026) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 2006-இல் பிறப்பிக்கப்பட்ட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 2015-இல் உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவில்லை. தகுதியும் பயிற்சியும் பெற்ற இந்துக்கள் அனைவரும் அர்ச்சகராகலாம் என்பதை உறுதி செய்தது. தொடர்ந்து, கடந்த 2020-இல் அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட புதிய இந்து சமய அறநிலையத்துறை சேவை விதிகளின்படி, 2021-இல் திமுக அரசு 28 பேரை அர்ச்சகராக நியமித்தது.
அதைத்தொடர்ந்து, சேவை விதிகளை எதிர்த்த வழக்கில், ஆகமக் கோயில்களைப் பிரித்தறிய
2022-இல் உயர் நீதிமன்றமே 5 நபர் குழு அமைத்த போது தமிழ்நாடு அரசு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல் விட்டிருக்கக் கூடாது.
ஆகமத்தை விட அரசியலமைப்பே மேலானது என்பதால், அரசு பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினருக்கும் உடனடியாக அர்ச்சகருக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். தேவைப்பட்டால் சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்றி உச்ச நீதிமன்றத்தில் உறுதியோடு வாதாட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு!
தமிழ்நாடு அரசு
சென்னை, அக். 09- அரசு ஊழியர்கள் தங்கள் முழுமையான சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே பதவி உயர்வுக்கு தகுதி பெறுவர் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் பிறப்பித்த உத்தரவு கூறியுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அசையும், அசையா சொத்துகள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட அனைத்து சொத்து விவரங்களையும் வருகிற 31-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
வேறு யார் பெயரிலும் அரசு ஊழியர்கள் சொத்துகள் வாங்கியிருந்தாலும் அவற்றையும் குறிப்பிட்டு அந்த நபருக்கும், அரசு ஊழியருக்கும் என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும்.
குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து மதிப்புகளை தாக்கல் செய்யும் அரசு ஊழியர்கள் பெயர்கள் தான் பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெறும். சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதவர்கள், அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதியை மீறியதாக கருதப்படுவர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
