பெரியார் நடையும் பிள்ளையார் பராக்கும்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ம.கவிதா
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர்

 

விழா வேறு – பண்டிகை வேறு;

‘விழா என்பது நம்மை விழாமல் பாதுகாப்பது’ என்று  ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஒரு கூட்டத்தில் சிறப்பான விளக்கம்  தந்தார். ஆனால் பண்டிகைகளின் தத்துவம் என்பது எப்போதும் கொண்டாட்டங்களை வெளிக்காட்டி உட்புறத்தில் நம்மை இழிவுபடுத்தும் திண்டாட்டங்களை ஒளித்து வைத்திருக்கக் கூடியதாகும்.

ஏககாலத்தில் ஒரு பகுத்தறிவுத் திருவிழாவும் ஒரு மூடப் பண்டிகையும் ஒருங்கே அனுசரிக்கப்பட்ட செய்திகளுக்குள் நாம் சென்று பார்த்தால் அந்த விளக்கங்களுக்குள்ள நியாயமும் உண்மையும் புரியும்.

இறக்குமதி சரக்கே பிள்ளையார்!

ஆழ்ந்த வைதீகக் கடவுள் நம்பிக்கையாளரும் பன்மொழிப் புலவருமான பேராசிரியர் முனைவர்  தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் எழுதிய நூலில் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு வடக்கே வாதாபியில் இருந்து பரஞ்சோதி என்ற ஒரு படைத்தலைவன் மூலம் தமிழ்நாடு முதலான பல மாநிலங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டதுதான் இந்தப் பிள்ளையார் என்று எழுதியது மதுரை பல்கலைக்கழகத் துணைப்பாட நூலில் இருந்ததென்று ஆசிரியர் எடுத்துக்காட்டி, இன்னொரு செய்தியையும் சொல்கிறார். மகாராட்டிரத்தில் திலகர், மதத்தை அரசியலில் புகுத்தித் தங்களது உயர் ஜாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்திட அரசியல் ரீதியாக புகுத்திய  பண்டிகைதான் விநாயகர் கணபதித் திருவிழா என்றும், அரசியல் நோக்கங்களுக்காக மகாராட்டிரத்தில் அதி தீவிரமாகக் கொண்டாடப்படும் ஓர் இந்து மதப் பண்டிகை தான் இது என்றும் அவர் கூறியதை எடுத்துக்காட்டுகிறார்.

இன்றைக்கு அதன் விளைவு என்னவென்றால்  பெருநகர சென்னை மாநகராட்சியின் தரவுகளின் படி செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சிலைகள் கரைக்கப்பட்ட இடங்களிலிருந்து 92 ஆயிரத்து 965 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன 9,413 சிலைகள் 61,690 கிலோ மரப்பலகைகள், 8010 கிலோ பூக்கள், 20365 கிலோ உலர் கழிவுகள், 1550 கிலோ ஈரக் கழிவுகளுடன் 1350 கிலோ உணவு கழிவுகளும் என்று விநாயகக் கழிவுகளின் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. (22.9.2026)

ஓர் ஊர்க் கணக்கே இப்படியென்றால்…?

ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு கொண்டாட்டம் போடுகிற இந்தக் கழிவுகள் ஒன்று சேர்ந்தால் இந்த நிலத்திற்கும் இந்த நீருக்கும் எவ்வளவு பெரிய சுற்றுச்சூழல் கேட்டை  இந்தப் பண்டிகை கொடுக்கிறது என்பதைக் கொண்டாடுவோர் ஒருகணமேனும் எண்ணிப் பார்ப்பார்களா?

ஒரு பக்கம் சிறு சிறு பிள்ளைகளெல்லாம் வசூல் வேட்டைக்கு இறக்கி விடப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் வெறும் பிள்ளை விளையாட்டாக மட்டும் கூட இல்லாமல் மது அருந்திவிட்டு அதிகாரத்தோடு கேட்கும்  பெரும் வசூல் வேட்டையாகி, லட்சக்கணக்கில் வாங்கப்படும் ‘உயர’ பிள்ளையார்களாகி, எப்படி தீபாவளி எனும் பண்டிகை தெருக்களில்  குப்பைகள் கொட்டிவிட்டுச் செல்கிறதோ, காயங்களை பரிசளிக்கிறதோ அப்படி இந்த விநாயகர் சதுர்த்தி வசூல்  பணமும் கழிவுகளாக நீர் நிலையில் சென்று சேர்வதோடு சில இடங்களில் கலவரமாகி வெட்டுக்குத்துகளுடன்  தான் பண்டிகை முடிவு பெறுகிறது.

“நோட்டீசைப் பார்த்து அவரவர் வசதிக்கு ஏற்ற மாதிரி அஞ்சாயிரம் பத்தாயிரம் கொடுப்பாங்க, சிலர்  அய்ந்நூறோ  ஆயிரமோ கொடுப்பாங்க, ஏழு நாள்  நாள்தோறும் பூஜை  செய்வாங்க, ஒரு நாள் ஊர்வலமாகப் போயிட்டு பக்கத்துல இருக்கிற ஏரியிலோ  டேமிலோ (அணை) கரைச்சிட்டு வராங்க” என்றார் பக்கத்தில் வசிக்கும் ஒரு பெரியவர்.

நெஞ்சில் அடிப்பது போல….

நான்கு தெரு சந்திக்கும் முனையில் எங்கள் வீடு இருக்கிறது.   சென்ற ஆண்டு மேளம் வைத்திருந்தார்கள். இந்த ஆண்டு கூடுதல் வசூல் போல… டிரம்ஸ் வைத்திருக்கிறார்கள். நான்கு தெருவுக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் நிறுத்தி நிறுத்தி ஊர்வலம் வந்ததில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் “டம் டம் டம்” என்று தலையில் இடிப்பது போல- நெஞ்சில் அடிப்பது போல, வீட்டை விட்டு எங்கேயாவது ஓடி விடலாமா என்று நினைக்கும் படி  வழக்கமாக நம் காதுகள் கேட்டுக் கொள்ள முடியாத டெசிபல் ஒலிகளில் ஆரவாரங்களில் பிள்ளையார் ஊர்வலம் கடந்து போனது.  அவர்களும் அந்த சத்தத்தின் அளவைத் தாளாமல் தான் அப்படி ஆடுகிறார்களோ என்னவோ…

ஒரு வாரம் வீட்டுக்கு வீடு சீரியல் பல்புகள் வண்ண வண்ணமாய்ச் சிரிக்கின்றன. அதில் ஒன்றும் நமக்கு மாறுபாடு இல்லை. தெருக்கள் அழகாக இருந்தன… (சாதாரண நாள்களில் தெருக்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கூட அவர்கள் யாரும் கொடி பிடிக்க வர மாட்டார்கள் என்று நமக்குத் தெரியும்)

ஆனால், மற்றவர்களுக்குத் தொல்லை தரும் உங்கள் தத்துவங்களைத் தூக்கிக் குப்பைத் தொட்டிகளில் போடுங்கள் என்று  சொல்வதற்கு நாம் வேகமாய் எழும்போது, அவர்கள் இன்னும் மும்முரமாக அவர்களின் கடவுளைக் கொண்டு போய் ஆற்றில்  கிணற்றில் குளத்தில் தள்ளிவிட ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் கிராமங்களில் ஒரு வழக்கு மொழி உண்டு “தம்படிக்கு பிரயோஜனம் இல்ல” என்று சொல்வார்கள். ஒரு பண்டிகை கொண்டாடி விட்டதாலேயே எந்த ஒரு குடும்பமும் முன்னேறியதில்லை, ஒரு தெருவும் முன்னேறியதில்லை, ஒரு ஊரும் முன்னேறியதில்லை என்பதை நாம் காலம் காலமாகப் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். இன்னும் சொல்லப்போனால் மீண்டும் மீண்டும் அவர்களைச் செலவுகளில் வீழச் செய்து அவர்கள் முன்னேற்றத்தைத் தடுத்து வைத்திருப்பவையே அவை தான் என்பதே உண்மை.

ஒரு வாரம் பந்தலுக்குள் உட்கார்ந்துவிட்டு செப்டம்பர் 18 அன்று பராக்கு பார்த்துக் கொண்டு வந்த விநாயகர் எங்கள் ஒருவர் வீட்டு வாசல் பக்கம் மட்டும்  திரும்பிப் பார்க்கவில்லை. காரணம் செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் 148 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு வீட்டு  வாசலில்  இருள் நீக்க வந்த இரு வண்ணக் கழகக் கொடியேற்றி தந்தை பெரியாரின் படத்திற்கு மாலையிட்டு இருந்தோம். (அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நாங்கள் இனிப்பு கொடுத்தோம்)

நெருங்க முடியாத எரிமலை…

தந்தை பெரியார் இருக்கும் இடத்திற்கு ஏன் அவர்களால் நெருங்க முடியவில்லை? சிறு சிறு செய்திகள் என்றாலும் ராக்கெட் வேகத்தில் அதைப் பரப்பி பிரித்துப் பிரித்து மேய்ந்துவிடும் ஊடக, சமூக ஊடக அறிவு ஜீவிகளும் போராளிகளும் கூட இப்படிக் கடவுள் பெயரால் எது நடந்தாலும் தெரியாதது போல் அவர்களும் பராக்கு பார்க்கிறார்களே அது ஏன்?

அங்கேதான் எவரும் நெருங்க முடியாத இடத்தில் தந்தை பெரியார் எரிமலையாய் நிற்கிறார்!

மானத்தையும் அறிவையும் மட்டுமே மனிதனுக்கு அடையாளமாக்கித் தருகிறார்!

“தனி மனிதராக நின்று போராடி வெற்றிகளை, உரிமைகளைப் பெற்றுத் தந்த தந்தை பெரியாரின் பிறந்த நாள் நன்றித் திருவிழாவாக தமிழர் இல்லமெல்லாம் பூத்துக் குலுங்கட்டும்!” என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை விட்டு தமிழ்நாடு மட்டுமல்ல –  உலகளாவிய அளவில் பகுத்தறிவுத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இனிப்பு வழங்கியும் குடும்ப விழாக்களாகக் கூடிக் களித்தும் கருத்தரங்கங்களாக, கவியரங்குகளாக அறிவார்ந்த முறையில் கொண்டாடப்பட்டது.

தந்தை பெரியார் 148–இன் பெரும் வீச்சாக பெரியார் நடை ஓட்டம் உலகின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் சிகாகோவில் ‘ரன் ஃபார் பெரியார்’ (RUN FOR PERIYAR) நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 5 கிலோ மீட்டர் தூரத்தை நடந்தும் ஓடியும் முடித்தனர்.  பெரியார் பற்றியும் பெரியார் ஆற்றிய பணிகள் பற்றியும் அங்கே பேசப்பட்டது. நியூ ஜெர்சி, வாஷிங்டன் டிசி உள்ளிட்ட பல்வேறு இடங் களிலும் இந்த நடை ஓட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.

கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் பெரியார் நடை!

தமிழ்நாட்டில் மாவட்டந் தோறும் குடும்ப விழாக்கள் ஆசிரியர் வழிகாட்டுதலில் நடைபெற்றதோடு திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் பெரியார் நடை ஓட்டம் உற்சாகத்தோடு நடைபெற்றது.  திருச்சியிலும் தஞ்சாவூரிலும் ஆசிரியர்  பங்கேற்று  பீடுகொள் பெரியார் நடையை பெரியார் படையோடு வழி நடத்தினார்.

19.9.2026 அன்று காலை 5:30 மணிக்கு தஞ்சாவூர் ரயில் நிலையம் வந்த ஆசிரியர் வேனிலேயே நடைப் பயிற்சிக்கான உடையை மாற்றிக் கொண்டு ‘பெரியார் நடை’ தொடங்கும் இடத்திற்கு காலை 6:30 மணிக்கு வந்தடைந்தார்.

ஆசிரியருடன் சுமார் 1000 பேர் பெரியார் நடையில் பங்கேற்று போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் காவல்துறைக்கு எந்தச் சிரமமும் வைக்காமல் ஒருவரை ஒருவர் தள்ளாமல் மிடுக்காக நேர்த்தியாக நடந்து சென்றதைப் பார்த்த காவல்துறையினரும் ஊடகச் செய்தியாளர்களும் வியந்து பாராட்டினார்கள் என்று கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார்  நிகழ்வைப் பற்றி குறிப்பிடுகிறார்.

அவர்கள் அத்தனை பேருக்கும் ஆற்றலையும் உற்சாகத்தையும் யார் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் வீரநடை போட்டு முதல் ஆளாக முன் நடக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே!

அமெரிக்காவிலே, கனடாவிலே, ஆஸ்திரேலி யாவிலே, சிங்கப்பூரிலே, ஜப்பானிலே இப்படிப் பல நாடுகளிலும் “பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்” என்றாகி இருக்கிறது. பெரியாரைப் பின்பற்றி நடப்போம், அதன் மூலமாக ஒழுக்கம் வளரும். உடல் நிலை மட்டுமல்ல;  அறிவு நிலையும் வளரும். எனவே தான் பெரியாரைப் பின்பற்றுவோம், பின்பற்றி நடப்போம், வாழ்க்கையிலும் நடப்போம், பாதையிலும் நடப்போம், கொள்கையிலும் நடப்போம் நடப்போம், களைப்பின்றி நடப்போம், சோர்வின்றி நடப்போம் எதிர்ப்புகளைச் சந்திக்க கூடிய அளவிற்கு வலிமையோடு நடப்போம்’’ என்று முழக்கமிட்டு நிகழ்வைத் தொடங்கி வைத்து வீறுகொண்டு வெற்றி நடை நடக்கிறார்!

தஞ்சையில் தொடங்கியது. திருச்சி, கடலூர், கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், என தமிழ்நாடு முழுவதும் பெரியார் நடை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தலைநகர் சென்னையில் வரும் அக்டோபர் 4ஆம் நாள் மினி மராத்தான் ஓட்டமும், நடையும் 3 கி.மீ., 5 கி.மீ., என இரு தொலைகளில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியரும் பங்கேற்கவிருக்கிறார். இனி ஆண்டுதோறும் உலகமெங்கும் தொடரும் பெரியார் நடை – பெரியார் ஓட்டம்! தன்மானம் தந்த தலைவரைத் தவிர வேறு யாரைக் கொண்டாடுவது?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *